இயேசுவின் இனிய நாமத்தில் என் நெஞ்சுக்கினிய உள்ளங்களே வணக்கம்!
டிசம்பர் மாதத்தின் மிக முக்கியத் திருவிழாவாக இயேசுவின் பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். கண்ணுக்குப் புலப்படாதக் கடவுளின் அன்பை, நாம் தொட்டு உணர்ந்து இரசிக்கும் வண்ணமாக இயேசு இவ்வுலகில் உதித்தார். கடவுளின் வாக்கு என்பது அவரது பெயர் (திருவெளிப்பாடு 19:13). "வாக்கு மனுவுரு வானார், நம்மிடையே குடிகொண்டார்" (யோவான் 1:14).
இப்படிப் பிறந்தவர்தாம் நமக்கு நிலைவாழ்வும், மீட்பும் கொடுக்கும் பேரரசர்! இவர், திரும்பி இரண்டாம் முறை இவ்வுலகில் வெற்றி வாகைச் சூடி வரும்பொழுது அரசர்க் கெல்லாம் அரசர், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர் என்ற பெயர் அவருடைய ஆடையிலும், தொடையிலும் எழுதப்பட்டிருந்தது (திருவெளிப்பாடு 19:16).
இத்தகைய அரசர் பிறந்த நிகழ்வை ஒவ்வோர் ஆண்டும் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம். வெளி அடையாளங்களோடும், ஆடம்பரத்தோடும் நின்றுவிடாமல், அவர் நம் இதயத்தில் மீண்டும் பிறக்கும் வண்ணம் நாம் என்ன செய்யப் போகிறோம்? என்று சிந்தனைச் செய்யும் மாதம் இது.
ஒரு சமயம் இங்கிலாந்து நாட்டு அரசிக் கனடா நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தார். அரசி செல்லும் பாதையில் ஓரிடம் சேறும், சகதியுமாய் இருந்தது. இதைக்கண்ட ஓர் இளைஞன் தனது மேலங்கியைக் கழற்றி, சகதிக்கு மேல் விரித்தான். தற்செயலாக அரசி இளைஞன் செய்ததைக் காண நேரிட்டது. உடனே அரசி அந்த இளைஞனை அழைத்து, அவன் செயலுக்காகப் பாராட்டித் தன் நன்றியை அவனுக்குத் தெரிவித்தாள். அடுத்த நாள் வெளிவந்த செய்தித்தாளில் அந்த இளைஞனைப் பற்றிய செய்தி முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் வெளிவந்திருந்தது.
செய்கின்ற செயல் எவ்வளவு பெரியது என்பது முக்கியமல்ல; ஆனால், அந்தச் செயலை யாருக்காகச் செய்கிறோம் என்பதுதான் முக்கியம். ஆம், அன்பார்ந்தவர்களே, நமக்காகத் தம் உயிரையே கொடுத்த இயேசுவின் பாதையில் நடப்பவர்தான் அவரது உண்மையான சீடர். அவரை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், தம் இதயத்தில் இருக்கும் சகதியைப் போக்கி, தூய்மை என்ற வெண்ணாடை அணிந்து அவரை நாம் வரவேற்க வேண்டும்.இறைவனுக்குப் பணிபுரிவது எளிது. ஆனால், இயேசு இன்று உயிருள்ள இறைவனாக, ஏழை எளிய மக்கள் மத்தியில் சிறந்த முறையில் குடிகொண்டிருக்கிறார். வாழ்கின்றார்.
"என் சீடன் என்பதற்காக இச்சிறுவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைமாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (மத் 10:42).
இதைக் கடைப்பிடித்தால்தான் நாம் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட முடியும். அனைவருக்கும் எனது அன்பும், பாசமும், மன்றாட்டும் கலந்தக் கிறிஸ்துப் பிறப்பு விழா நல்வாழ்த்துகள்! -
தந்தை தம்புராஜ் சே.ச.
www.anbinmadal.org ++2002-2019++ Tamil Catholic website. Email ID: anbinmadal at gmail.com