நள்ளிரவு எல்லாரும் ஓய்வு எடுத்து உறங்கும் நேரம். அதுவும் பகலெல்லாம் பூமி கொதித்துச் சூடாய் இருக்கும். வெயிலில் ஆடுகளை மேய்த்த இடையர்கள் அயர்ந்து உறங்கும் இரவு நேரம். அப்போது ஓர் ஒளி! ஒரு குரல்! ஒலி கேட்டு வியப்பு மிக்கவர்களாய் கண் விழித்தார்கள். "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" என்று கடவுளைப் புகழ்ந்து (லூக் 2:14) பாடி வானதூதர் அகன்றார். அதன் பின் இடையர்கள் வானதூதர் தமக்கு அறிவித்த இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம் என்று சொல்லி பெத்லகேம் நோக்கி விரைந்து சென்றனர். அங்கு மரியாவையும், யோசேப்பையும், தீவனத் தொட்டியில் கிடத்தி இருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர் (லூக் 2:17). ஏனெனில் கடவுளின் திருமகன் ஏழையின் கோலம் பூண்டு மாட்டுத் தொழுவில் பிறந்த இந்த நிகழ்ச்சி எளிய மனமுடைய இடையர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி அளித்தது.
"பூமியில் நல்மனத்தோர்க்கு அமைதி உண்டாகுக!" (லூக் 2:14) என்று வானதூதர் வாழ்த்தினர். அவ்வாறே பண்டிகை நாளில் நாம் பிறரை வாழ்த்தும்போது மகிழ்ச்சியாய், சமாதானமாய், பிரச்சினையின்றி நலமுடன் வாழ வாழ்த்துவது மரபு. இவ்வாறு திருப்பலியில் இறையருள் பெற்றவர்களாய் ஒருவர் ஒருவரை வாழ்த்தி இறை உறவில் வளர அமைதி வேண்டி வாழ்த்துகிறோம். அத்தகு அமைதி இருக்குமிடத்தில் குழப்பம் இல்லை, அச்சம் இல்லை; மாறாக, அன்பு மிகுந்து ஆனந்தம் பொங்கி வழியும். இத்தகு உயர் பண்புகளைத் தன்னுள் கொண்ட தன்னிகரில்லாப் பாலன் இயேசு இத்தரணியில் பிறந்த நிகழ்வை எசாயா இவ்வாறு கூறுகிறார்: ஏனெனில் ஓர் ஆண் குழந்தை நமக்காகப் பிறந்துள்ளார். "ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார். ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும். அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர். வல்லமை மிகு இறைவன் என்றுமுள்ள தந்தை, அமைதியின் அரசர்" (எசாயா 9:6) என்பதால் இயேசு பிறப்பு அமைதியை நமக்குத் தந்திடும் ஆனந்தப் பெருவிழாவாகும். மேலும் எனக்கு "அவர் என் பெலனும், என் கீதமும், எனக்கு இரட்சிப்புமானவர்" (திபா 118:14) என்பதால் வானதூதர்களுடன் சேர்ந்து உன்னதத்தில் கடவுளுக்கு மகிமை என்று உன்னதக் கீதம் பாடி இறைவனைப் போற்றி மகிழும் மாபெரும் திருவிழா கிறிஸ்து பிறப்பாகும்!
அவ்வாறே வானில் விண்மீன் எழக் கண்டதும் ஞானிகள் எருசலேமுக்கு வந்து "யூதர்களின் அரசராகப் பிறந்தவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்றார்கள் (மத் 2:2). இதனால் அரசருக்கு அதிர்ச்சி உண்டாகிடவே ஏரோது உள்ளம் கலங்கினான். உள்ளத்தில் அச்சமும், பகை உணர்வும் கொண்டு இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டான். ஞானிகளிடம் "நீங்கள் போய் பார்த்தபின் இவ்விடம் வாருங்கள். நானும் அங்கு சென்று அக்குழந்தையை வணங்குவேன்" என்று கூறி அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான் (மத் 2:8).
அந்த விண்மீன் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும் வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது (மத் 2:9-10). அதன்பின் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து, குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டு நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள் (மத் 2:11). பின்பு தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். இவ்வாறு இறைமகன் இயேசுவுக்குரிய வணக்கத்தையும், அன்பையும் அர்ப்பணமாக்கி, அச்சம் அகன்று அமைதி பெற்று உள்ளம் மகிழ்ந்தனர்.
ஏரோது அரசனின் சூழ்ச்சியினை அறிந்த கடவுள் விண்மீன் வேறு திசையில் செல்லத் திட்டமிட்டபடி அவர்கள் வீடு திரும்பினர். எனவே, இயேசுவின் பிறப்பு நல்மனத்தோருக்கு மகிழ்வும், அமைதியும் தருவது உண்மையாயிற்று. ஆனால் ஆணவமிக்கோருக்கு அது அச்சத்தையும், ஏமாற்றத்தையும் தருகிறது. எனவே, நமது வாழ்வு ஆணவமின்றி, தாழ்ச்சியின் கோலம் பூண்டு அன்பால் மனுவுரு எடுத்த இயேசுவின் அன்பை அகிலத்திற்கு அளித்து வறுமையில் வாடுவோருக்குப் பகிர்ந்தளிக்கும்போதே அது மகிழ்ச்சி மிக்க கிறிஸ்துமஸ் பண்டிகையாகிறது.
www.anbinmadal.org ++2002-2019++ Tamil Catholic website. Email ID: anbinmadal at gmail.com