பிறப்பு சொல்லும் செய்தி

முன்னுரை:

பிறப்பு ஒரு அற்புதம். அந்த பிறப்பு ஒரு வரப்பிரசாதம். இந்த பிறப்பு சொல்லுவதோ ஒரு நற்செய்தி. அந்த நற்செய்தி யாருக்கு மகிழ்வு என்பதுவே இன்றைய காலத்தில் மனிதர்கள் கேட்கும் கேள்வி. மனித பிறப்பு மற்றப் பிற பிறப்பைப் போலத் தானா? என்றால் கட்டாயம் இல்லையென்ற சொல்லத் தோன்றும். அப்படியென்ன சிறப்பு மனிதப் பிறப்பு. அது சொல்லும் செய்தித்தான் என்ன?

சிறப்பானதே பிறப்பு:

christmas-storyபிறப்பு இந்த பிரபஞ்சத்தில் பலவுண்டு. படைப்பிலேயே பார்க்கின்றோம், புல்பூண்டுகள், மரம் செடி கொடிகள், நடப்பன, ஊர்வன என பலவுண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளிலே படைக்கப்பட்டதாக விவிலியம் சொல்லுகின்றது. முத்தாய்ப்பாய் மனிதப் பிறப்பு. அதன் பின்னர் எதுவும் படைக்கவில்லை. அந்த மனிதனை வனைந்து தன் சாயலிலே வனப்பிலே படைத்து, தன்னுடைய உயிர்மூச்சை அதனுள் ஊத உயிர் பெற்றான் மனிதன் என்பதுவே செய்தி. இதுவே மனித படைப்பின் சிறப்பாகும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம்:

மனிதர்கள் தொடர்ந்து பிறந்து கொண்டே இருக்கிறார்கள். அன்று படைத்தவர் தன் படைப்பு தொழிலை நிறுத்திக் கொள்வதில்லை. இன்று தகுதியற்ற, பலவீனமான மனிதர்களையே பயன்படுத்தி தொடர்ந்து படைத்துக் கொண்டே இருக்கின்றார். எனவே தான் அறிஞர் சொன்னார், ஒவ்வொரு குழந்தையும் இந்த மண்ணிலே பிறக்கும் போதெல்லாம், கடவுள் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டேயிருக்கின்றார். படைத்துக் கொண்டேயிருக்கின்றார் என்பது உண்மையாகின்றது. எந்த மனிதரும் ஒருவரைப் போல ஒருவர் இல்லை. விஞ்ஞானமும் சொல்லுகின்றது, கைரேகை மாறுகின்றது. நடை மாறுகின்றது. சாயல் மாறுகின்றது. இத்தனையாண்டளவாக படைக்கபட்ட மனிதர்களில் இருவர் கூட ஒன்று போல இருந்ததாக வரலாறு இல்லை. உலகத்தில் ஏழு பேர் ஒன்றாக இருப்பதாக பேசிக் கொள்கிறார்களே தவிர நிரூபித்ததில்லை. மனிதர்களுள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் வேறுபட்டே இருக்கின்றார்கள். இதுவே படைப்பின் சிறப்பாக உன்னமாக அமைந்துள்ளது.

இந்த பிறப்பு நமக்கு கொடையே:

மனிதர்கள் தங்களது உறவிலே தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று நாடத கோவில் இல்லை, தேடாத மருத்துவரும் இல்லை. கோவில்கள் மருத்துவர்கள் தங்களது விளம்பரங்களை கூட இந்த கோயில் குழந்தைவரம் கொடுக்கும் அற்புத திருக்கோயில் என்றும், மருத்துவர்கள் தாங்கள் கைராசிக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகின்றார்கள். விவிலியம் கூறுகின்றது. திருப்பா 127 : 03 'வயிற்றின் கனி ஆண்டவர் தந்த கொடை, பிள்ளைப் பேறு ஆண்டவர் அருளும் செல்வம் என்கின்றார் தாவீது இராசா. மக்கட் செல்வத்தால் பூமியை நிரப்பி வருகின்றார். 'மானிடராய் பிறப்பதற்கே நல் மாதவம் செய்திடல் வேண்டும்' என்றான் நம் கவிஞன்.

இயேசுவின் பிறப்பு

மானிட சமூகத்தின் வரலாற்றினிலே தன் படைப்புக்களை பாதுகாக்க, வழிநடத்த தேவையானவர்களை அவர்கள் மத்தியிலே தேர்வு செய்து அனுப்பினார் கடவுள். மீட்பின் வரலாறு இதனை உறுதி செய்கின்றது. அவர்களையெல்லம் புறந்தள்ளிய மானுடம், தன்மகனை மதிக்கும் என எண்ணி தன்மகனை தரணிக்கு தரைவாக்க முன்வந்தார். யோ 03: 16 கூறுகின்றது, 'நம்பிக்கைக் கொள்வோர் நிலைவாழ்வு பெற, தன் மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மீது அன்புகூர்ந்தார்.' மகனின் பிறப்பிற்கு இதுவே காரணமாகியது. தன்மகனை மானுடம் மதிக்கும் தன்னை மாற்றிக் கொள்ளும் என நம்பினார் படைத்தவர்.

நோக்கம் நிறைவேறியதா?

பிறந்தவரும் தான் கடவுளின் குமாரர் என்றல்லாமல் தன்னையே தாழ்த்திக் கொண்டார். எளிமையான வாழ்வின் வழி இம்மண்ணுலகில்ஒரு புதிய புரட்சியை உருவாக்கினார். தன்போதனையின் வழியாக எளிமையான உவமையின் வழியாக ஆழமான கருத்துக்களை விதைத்தார். மானுடம் விட்டா வைக்கும். நான் நல்லவனாக இருப்பதால் உனக்கு பொறாமையா? என்று கேட்டுப் பார்க்க அழைக்கிறார். நீரும் போய் அப்படியே செய்யும். இரக்கத்தையே விரும்புகின்றேன் என்பதன் அர்த்தத்தை போய் கற்றுக் கொள்ளுங்கள் என அறிவுறுத்துகின்றார். மானுடத்திற்காய் தன் மகனையே அளிக்க வந்த கடவுள் சாவையே ஏற்றுக் கொள்ள பணிக்கின்றார். போதனையை ஏற்றுக் கொள்ள முடியாத மானிடம் கொல்ல தீர்மானித்தது. யார் பெரியவர் என்கின்ற போட்டியாலேயே அவரை கொல்ல தீர்மானித்தது. அதை சாத்தியப்படுத்தியது. அதனால் மானுடத்தின் நோக்கம் நிறைவேறியதா? கடவுளின் நோக்கம் நிறைவேறியதா?

பிறப்பு சொல்லும் செய்தி:

ஒவ்வொரு மனிதனின் பிறப்பும் முன்கூறிக்கப்பட்ட ஒன்றாகும். இதனை பவுல் விளக்குகிறார் எபே 02: 10 'நாம் கடவுளின் கைவேலைப்பாடு. நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாக படைக்கப்பட்டிருக்கின்றோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கின்றார்.' இறைவனின் இறையாட்சிப் பணியினை, அவர் விட்டுச் சென்ற பணியினை தொடர்ந்தாற்ற, தன் மக்களை இறைவன் முன்கூறித்து வைத்து தேர்ந்தெடுத்து, ஆசீர்வதித்து வருகின்றார். ஒவ்வொரு குழந்தையும் இந்த மண்ணுலகில் பிறக்கும் போது, இறைவன் செயலாற்றிக் கொண்டு இருக்கின்றார். நான் தான் உங்களை தேர்ந்து கொண்டேன் என்கின்றார். பிறப்பு நமக்கு விடுக்கும் செய்தி. நாம் நமக்காக அல்ல, மாறாக மற்றவர்களின் நலன்களுக்காக. நம்முடைய ஆற்றலை திறமையை, அறிவை கொண்டு இறைப்பணியாற்றிடவே. அவர் விட்டுச் சென்ற நல்ல செயல்களை மண்ணுலக மாந்தர்கள் பெற்றிடவே. மாந்தர்கள் யாவரும் நம்முடைய நல்ல செயல்களை கண்டு படைத்தவரையும், பராமரிப்பவரையும், பாதுகாப்பவரையும் கண்டு போற்றிடவே. மத் 05: 16

நம்முடைய பிறப்பு அர்த்தம் கண்டதா?

மிகுந்த கனி தந்து அவருடைய சீடராக வாழ்வதுவே தந்தைக்கு மாட்சிமையளிக்க கூடியது. இந்த கனி தரும் வாழ்வு நமதாகும் போதே நம்முடையவாழ்வு அர்த்தம் பெறுகின்றது. இன்றைய வாழ்வு சூழலில் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு பணம் பதவி சாதி என்ற சாபக் கேட்டுக்குள் சிக்கித் தவிக்கின்றது. இதிலே மிகுந்த எண்ணிக்கையிலே கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் சுழன்று வருவதால் சாட்சியமான வாழ்வு என்பது பெரிய கேள்விக் குறியாகிப் போனது. இதனால் இன்று பிறப்புச் கூட அர்த்தம் இழந்து போனதோ என்று கேட்கத் தோன்றுகின்றது. நல்லது செய்து வாழும் வாழ்வு என்பது போய், இன்று நான் ஏன் செய்ய வேண்டும், எனக்கு என்ன லாபம் கிடைக்கும், பதவி சுகம் கண்டு, பணத்தினை சேர்த்து, ஊதாரியாக வாழ்ந்து எதிர் சாட்சியாக வாழ்வது தான் இன்றைய வாழ்வாக மாறி வருவது வேதனையையே தருகின்றது. பவுல் அடிகளார் கலாத்திய மக்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையை ஏற்றுக் கொள்வோம். 05: 15 'ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!'

முடிவுரை:

வாழ்வது ஒருமுறையே. அந்த வாழ்வு ஒரு கொடையே. அந்த கொடையை அர்த்தமுள்ளதாக்க வாழ்வது நமது கடமையே. வாழ்வின் அர்த்தத்தை புரிந்து, நல்லது செய்து வாழும் போது, படைத்தவருக்கு சான்று பகர்கின்றோம். இதனையே கிறிஸ்து தன் பிறப்பினால், நல்லது செய்து அதுவே தன் வாழ்வின் உணவு என்று சொல்லி வாழ்ந்து அர்த்தம் கொடுத்தார். அதனால் கொலை செய்யப்பட்ட அவர் வாழ்வின் நோக்கம் நிறைவேறியது என்பதுவே உண்மை. தோல்வியல்ல, வெற்றியே.

மறைத்திரு அமிர்தராச சுந்தர். ஜா - பாளைங்கோட்டை மறைமாவட்டம்.
அன்பின்மடல் கிறிஸ்மஸ் சிறப்பு மடல்-2011



icedoll

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com