இறையாசீர் என்றும் உங்களோடு!

இயேசுவின் இனிய நாமத்தில் என் நெஞ்சுக்கினிய உள்ளங்களே, வணக்கம். இணையதளத்தின் வழியாக உங்களை மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

டிசம்பர் மாதம் இயேசு குழந்தையின் பிறப்பு விழாவைக் கொண்டாடுகின்றோம். 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று" என்று கூறுவார்கள். கிறிஸ்மஸ் விழாவில் தெய்வமே குழந்தையாக உருவெடுக்கும் அற்புதமான நிகழ்ச்சியை நாம் கொண்டாடுகின்றோம். குழந்தை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இயேசுவே குழந்தைகளை அரவணித்து, கைகளை அவர்கள் மேல் வைத்து ஆசீரளித்தார். வடஇந்தியாவில் கிறிஸ்மஸ் விழாக் காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள், அதுவும் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் வரிசையில் நின்று, குழந்தை இயேசுவின் திருவுருவத்தை முத்தி செய்வதை நாம் பார்க்கின்றோம்.

புனிதர்களின் வரலாற்றில் இயேசுவே குழந்தையாக மாறி அவர்களின் கைகளில் தவழ்ந்ததாக நாம் படிக்கின்றோம். உதாரணமாக, புனித பதுவை அந்தோணியார், இயேசு சபையைச் சார்ந்த இளவல் புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா. பெரியவர்களுக்கில்லாத துணிச்சலைக் குழந்தைகளில் நாம் காண முடிகின்றது. நாமும் இதோ வகையான துணிச்சலோடு இறைவனிடம் உறவாடினால் நமது ஆன்மீக வாழ்வு வெகு சீக்கிரம் முன்னேறும்.

ஒரு நாள் அக்பர் பேரரசர் தமது அமைச்சர்களைப் பார்த்து 'ஒருவன் மிகுந்த துணிச்சலோடு என்னுடைய தாடியைத் தொடுகின்றான் என்று வைத்துக்கொள்ளுவோம். என்னுடைய தாடியைத் தொடும் அளவிற்கு துணிச்சலான ஒருவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?" என்று கேட்டார். தர்ம சங்கடமான இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் அமைச்சர்கள் தங்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள். இருப்பினும் அரசர் கேட்ட கேள்விக்கு எதாவது பதில் சொல்லவேண்டுமே என்ற கட்டாயத்திற்காக ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமான பதிலைச் சொன்னார்கள். எந்த ஒருபதிலும் அரசருக்கு மனநிறைவைக் கொடுக்கவில்லை அதாவது அரசர் எதிர்பார்த்த பதிலை எவராலும் சொல்ல இயலவில்லை.

joesph and jesus

இந்த நிலையில் அமைச்சர்களிலெல்லாம் அறிவு மிக்க பீர்பால் அரச அவைக்குள் நுழைந்தார். உடனே பேரரசர் பீர்பாலைப் பார்த்த " பீர்பால், என்னுடைய தாடியைத் தொடும் அளவிற்கு ஒருவனுக்குத் துணிச்சல் இருக்குமேயானால் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? " என்று கேட்டார். அதற்கு பீர்பால் சற்றும் யோசிக்காமல், கொஞ்சம்கூட தயங்காமல் "பேரரசரே அப்படிப்ட்ட ஒருவனுக்குத் தின்பண்டம் கொடுக்க வேண்டும் " என்றார்.

உடனே பேரரசர் " உமது மறுமொழிக்கு விளக்கம் கூற முடியுமா?" என்று கேட்டார். அதற்கு பீர்பால் "பேரரசரே, உமது கண்ணின் கருவிழி போன்ற உமது இளவரசரைத் தவிர வேறு எவருக்காவது உமது தாடியைத் தொடும் அளவிற்குத் துணிச்சல் இருக்குமா? என்றார்.

உள்ளபடியே அன்று காலை பேரரசர் உணவு அருந்திக் கொண்டிருக்கும்போது அவருடைய மகன் அவருடைய தாடியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்ததை பீர்பாலே கண்ணாரக் கண்டார்.

ஆம், அன்பார்ந்தவர்களே! இக்குழந்தையின் துணிச்சலைப் போல நாமும் இறைத் தந்தையோடு நாமும் உறவாடுவோம்.

"கடவுளை யாரும் கண்டதில்லை. தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும், கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்துள்ளார்" (யோவான் 1:18)

ஆகவே, கிறிஸ்துமஸ் விழா என்பது இயேசு இறைத் தந்தையின் நெஞ்சத்திலிருந்து புறப்பட்டு, அன்னை மரியாவின் மடியில் குதித்து தவழ்ந்த நிகழ்வைக் கொண்டாடுவது. நாமும் குழந்தைக்குரிய துணிச்சவோடு இறைவனிடம் விளையாடி, அவரைத் தொட்டு மகிழ்ந்து, அவரது கனிவிரக்கத்தைப் பெறுவோம்.

பார்வையாளராகிய உங்கள் அனைவருக்கும் எனது மன்றாட்டுக் கலந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறையாசீர் என்றும் உங்களோடு!

அருட்தந்தை. தம்புராஜ் சே.ச.


icedoll

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com