கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் - 4

அதிகாரங்கள்



1 2 3 4 5 6

அதிகாரம் 4

1 நான் சொல்வது இதுவே: தந்தையின் சொத்து அனைத்துக்கும் உரிமையுடையோர் சிறுவராய் இருக்கும்வரை அவர்களுக்கும் அடிமைகளுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை:

2 தந்தை குறித்த நாள் வரும்வரை அவர்கள் மேற்பார்வையாளர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.

3 அவ்வாறே, நாமும் சிறுவர்களாய் இருந்தபோது உலகின் பஞ்சபூதங்களுக்கு அடிமைப்பட்டிருந்தோம்.

4 ஆனால் நாலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு

5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

6 நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்: அந்த ஆவி “அப்பா, தந்தையே”, எனக் கூப்பிடுகிறது.

7 ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.

8 ஒரு காலத்தில் நீங்கள் கடவுளை அறியாதிருந்தீர்கள்: அப்போது கடவுள் அல்லாதவற்றுக்கு அடிமைகளாய் இருந்தீர்கள்.

9 ஆனால் இப்பொழுது நீங்கள் கடவுளை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்: உண்மையில், கடவுளே உங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அப்படியிருக்க வலுவற்றவையும் வறியவையுமான பஞ்சபூதங்களிடம் திரும்பிப் போய் அவற்றுக்கு மீண்டும் அடிமைகள் ஆவதற்கு நீங்கள் விரும்புவது ஏன்?

10 நாள், மாதம், காலம், ஆண்டு என்று பார்க்கிறீர்கள்!

11 உங்களுக்காக நான் பாடுபட்டு உழைத்தது வீண்தானா என அஞ்சவேண்டியிருக்கிறது.

12 சகோதர சகோதரிகளே, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்: நீங்கள் என்னைப்போல ஆகுங்கள்: நான் உங்களைப்போல ஆனேன் அல்லவா? நீங்கள் எனக்கு அநீதி ஒன்றும் இழைக்கவில்லை.

13 என் உடல்நலக் குறைவு தான் உங்களுக்கு முதன் முதல் நற்செய்தி அறிவிக்க எனக்கு வாய்ப்பு அளித்தது. இது உங்களுக்குத் தெரியுமே.

14 என் உடல்நிலையை முன்னிட்டு என்னைப் புறக்கணித்து வெறுத்து ஒதுக்கும் சோதனை உங்களுக்கு வரவில்லை. அதற்கு மாறாக, கடவுளின் தூதரை ஏற்றுக்கொள்வதுபோல் ஏன், கிறிஸ்து இயேசுவையே ஏற்றுக் கொள்வது போல், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்.

15 என்னை ஏற்றுக் கொள்வது ஒரு பெரும் பேறு என்றும் கருதினீர்கள். அந்த மனநிலை இப்பொழுது எங்கே? முடிந்திருந்தால் உங்கள் கண்களையும் எனக்காகப் பிடுங்கிக் கொடுத்திருப்பீர்கள்! உங்களைப்பற்றி நான் இதை உறுதியாகச் சொல்லமுடியும்.

16 இப்போது உங்களுக்கு உண்மையைச் சொன்னதால் உங்கள் பகைவன் ஆனேனா?

17 முன்பு நான் குறிப்பிட்டவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அந்த ஆர்வம் நேர்மையானது அல்ல: நீங்களும் அதே ஆர்வம் காட்ட வேண்டுமென்று அவர்கள் உங்களை என்னிடமிருந்து பிரிக்க விரும்புகிறார்கள்.

18 உங்கள் நடுவில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மற்றவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுவது எப்பொழுதும் நல்லதே: ஆனால் அந்த ஆர்வம் நேர்மையானதாய் இருத்தல் வேண்டும்.

19 என் பிள்ளைகளே, உங்களில் கிறிஸ்து உருவாகும்வரை உங்களுக்காக மீண்டும் பேறுகால வேதனையுறுகிறேன்.

20 உங்களைப் பொறுத்த மட்டில் எனக்கு ஒரே குழப்பமாய் இருக்கிறது. இப்பொழுது உங்களோடு இருந்து வேறுவகையாய்ப் பேசிப் பார்த்ததால் நலமாயிருக்கும்!

21 திருச்சட்டத்திற்கு உட்பட்டிருக்க விரும்புகிறீர்களே, அச்சட்டம் சொல்வதை நீங்கள் கேட்டதில்லையா?

22 ஆபிரகாமுக்கு மக்கள் இருவர் இருந்தனர். ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன்: மற்றவன் உரிமைப்பெண்ணிடம் பிறந்தவன் என்று எழுதியுள்ளது.

23 அடிமைப் பெண்ணின் மகன் இயல்பான முறைப்படி பிறந்தவன்: உரிமைப் பெண்ணின் மகனோ வாக்குறுதியின் பயனாய்ப் பிறந்தவன்.

24 இது ஒரு தொடர் உருவகம். இந்தப் பெண்கள் இருவரும் இரண்டு உடன்படிக்கைகளைக் குறிக்கின்றனர். ஒன்று ஆகார் குறிக்கும் சீனாய் மலையில் செய்யப்பட்ட உடன்படிக்கை. அது அடிமை நிலையில் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறது.

25 அரேபியாவிலுள்ள சீனாய் மலை இப்பொழுதிருக்கும் எருசலேமுக்கு அடையாளம். ஏனெனில் இந்த எருசலேம் தன் மக்களுடன் அடிமையாய் இருக்கிறது.

26 மேலே உள்ள எருசலேமோ உரிமைப்பெண்: நமக்கு அன்னை.

27 ஏனெனில், “பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்து பாடு! பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு! ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள்” என்று மறைநூலில் எழுதியுள்ளது.

28 ஆகவே சகோதர சகோதரிகளே, நீங்களும் ஈசாக்கைப்போல வாக்குறுதியின்படி பிறந்த பிள்ளைகள்.

29 ஆனால் இயல்பான முறைப்படி பிறந்தவன் தூய ஆவியின் ஆற்றலால் பிறந்தவனை அன்று துன்புறுத்தியவாறே இன்றும் நடக்கிறது.

30 எனினும் மறைநூல் கூறுவதென்ன? “இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் துரத்தி விடும்: ஏனெனில் அடிமைப் பெண்ணின் மகன் உரிமைப் பெண்ணின் பங்காளியாக இருக்கக்கூடாது. ”

31 ஆகவே சகோதர சகோதரிகளே, நம் அடிமைப் பெண்ணின் மக்கள் அல்ல: உரிமைப் பெண்ணின் மக்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture Acts 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com