கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் - 2

அதிகாரங்கள்



1 2 3 4 5 6

அதிகாரம் 2

1 பதினான்கு ஆண்டுகளுக்குப்பின் தீத்துவையும் கூட்டிக்கொண்டு பர்னபாவுடன் நான் மீண்டும் எருசலேமுக்குப் போனேன்.

2 நான் போக வேண்டும் என்று வெளிப்படுத்தப்பட்டபடியால்தான் அங்குப் போனேன். பிற இனத்தார் நடுவில் நான் அறிவித்து வந்த நற்செய்தியைப் பற்றி அங்கே எடுத்துக் கூறினேன். செல்வாக்கு உள்ளவர்களிடம் தனிமையில் எடுத்துரைத்தேன். நான் இப்போது செய்யும் பணியும் இதுவரை செய்த பணியும் பயனற்றுப்போகக் கூடாதே என்பதற்காகத்தான் இவ்வாறு செய்தேன்.

3 என்னுடன் இருந்த தீத்து கிரேக்கராய் இருந்தும் விருத்தசேதனம் செய்து கொள்ளுமாறு அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை.

4 திருட்டுத்தனமாய் நுழைந்த போலிச் சகோதரர்கள் அங்கே இருந்ததால்தான் விருத்தசேதனத்தைப் பற்றிய பேச்சே எழுந்தது. கிறிஸ்து இயேசுவோடு ஒன்றித்து நாம் வாழும் விடுதலை வாழ்வைப் பற்றி உளவுபார்க்க வந்தவர்கள் அவர்கள். நம்மை மீண்டும் அடிமை நிலைக்குக் கொண்டு வருவதே அவர்களது நோக்கம்.

5 உங்கள் பொருட்டு, நற்செய்தியின் உண்மை என்றும் நிலைத்திருக்குமாறு, நாங்கள் ஒரு நாழிகையேனும் அவர்களுக்கு அடிபணியவில்லை.

6 செல்வாக்கு உள்ளவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் கூட நான் கற்பிப்பதற்கு அதிகமாய் எதுவும் சொல்லவில்லை. இவர்கள் முன்பு எப்படிப் பட்டவர்களாய் இருந்தார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. கடவுள் ஆளைப் பார்த்தா செயல்படுகிறார்!

7 ஆனால் யூதர்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போலவே, பிறஇனத்தாருக்கு அதை அறிவிக்கும் பணி என்னிடம் அவர்கள் கண்டுகொண்டார்கள்.

8 ஆம், யூதர்களின் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலைப் பேதுருவுக்குத் தந்தவரே பிற இனத்தாருக்குத் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலை எனக்கும் தந்தார்.

9 அந்த அருள்பணி எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து திருச்சபையின் தூண்கள் எனக் கருதப்பட்ட யாக்கோபு, கேபா, யோவான் ஆகியோர் நட்புறவின் அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் கை கொடுத்தனர். யூதர்களுக்கு அவர்களும் யூதரல்லாதோர்க்கு நாங்களும் நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்று ஒத்துக்கொண்டோம்.

10 ஏழைகளுக்கு உதவிசெய்ய மறக்கவேண்டாம் என்று மட்டும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதைச் செய்வதில்தான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன்.

11 ஆனால் கேபா அந்தினேயாக்கியாவுக்கு வந்தபோது அவர் நடந்து கொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன்.

12 அதாவது யாக்கோபின் ஆள்கள் சிலர் வருமுன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்: ஆனால் அவர்கள் வந்தபின் அவர்களுக்கு அஞ்சி அவ்வாறு உண்பதை விட்டுவிட்டார்.

13 மற்ற யூதர்களும் இந்த வெளிவேடத்தில் அவரோடு சேர்ந்து கொண்டனர். இந்த வெளிவேடம் பர்னபாவைக் கூடக் கவர்ந்து விட்டது.

14 இவ்வாறு அவர்கள் நற்செய்தியின் உண்மைக்கேற்ப நேர்மையாய் நடவாததைக் கண்ட நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், “நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிறஇனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூதமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?” என்று கேட்டேன்.

15 பிறப்பால் நாம் யூதர்கள்: பாவிகள் எனப்படும் பிற இனத்தாரைச் சேர்ந்தவரல்ல.

16 எனினும் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம். ஆதலால்தான் நாமும் சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, நம்பிக்கையால் இறைவனுக்கு எற்புடையவராகுமாறு கிறிஸ்து இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் எவருமே இறைவனுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை.

17 கிறிஸ்து வழியாக இறைவனுக்கு ஏற்புடையவராவதற்கு முயலும் நாமும் பாவிகளே என்றால் கிறிஸ்து பாவத்திற்குத் துணைபோகிறார் என்றாகுமே! இப்படி எப்போதும் இருக்க முடியாது.

18 நான் இழுத்துத் தகர்த்ததை நானே மீண்டும் கட்டி எழுப்பினால் சட்டத்தை மீறினவன் என்பதற்கு நானே சான்று ஆவேன்.

19 திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன். அதற்கு அச்சட்டமே காரணம். நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.

20 எனவே இனி வாழ்பவன் நான் அல்ல: கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.

21 நான் கடவுளின் அருள் பயனற்றுப்போக விட மாட்டேன். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகக்கூடுமானால் கிறிஸ்து இறந்தது வீண் என்றாகுமே!

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com