1 கலாத்திய மாநிலத்தில் உள்ள திருச்சபைகளுக்கு, எந்த ஒரு தனி மனிதராலோ மனித அதிகாரத்தாலோ ஏற்படுத்தப்படாமல்
2 இயேசு கிறிஸ்துவாலும் இறந்த அவரை உயிர்த்தெழச் செய்த தந்தையாம் கடவுளாலும் திருத்தூதனாக ஏற்படுத்தப்பட்ட பவுலாகிய நானும் என்னுடன் இருக்கும் சகோதரர் அனைவரும் எழுதுவது:
3 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
4 இவரே நம் தந்தையாம் கடவுளின் திருவுளத்திற்கேற்ப இன்றைய பொல்லாத காலத்தினின்று நம்மை விடுவிக்கமாறு நம்முடைய பாவங்களின் பொருட்டுத் தம்மையே ஒப்புவித்தார்.
5 தந்தையாம் கடவுளுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
6 கிறிஸ்துவின் பொருட்டு அருள் கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக் கொண்டுவிட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது.
7 வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை.
8 நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக!
9 ஏற்கெனவே சொல்லியிருக்கின்றோம்: நீங்கள் பெற்றுக் கொண்ட நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை யாராவது உங்களுக்கு அறிவித்தால் அவர்கள் சபிக்கப்படுக!
10 இப்படிப் பேசும்போது நான் நாடுவது மனிதருடைய நல்லெண்ணமா? கடவுளுடைய நல்லெண்ணமா? நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்? நான் இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால் கிறிஸ்துவுக்குப் பணியாளனாய் இருக்க முடியாது.
11 சகோதர சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்: நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல.
12 எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை: எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது.
13 நான் யூதநெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பதுபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன்.
14 மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூதநெறியில் சிறந்து விளங்கினேன்.
15 ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள்,
16 தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை.
17 எனக்குமுன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவுமில்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன்.
18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுநான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன்.
19 ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை.
20 நான் உங்களுக்கு எழுதுவதில் பொய் ஒன்றுமில்லை: இதற்குக் கடவுளே சாட்சி!
21 பிறகு நான் சிரியா, சிலிசியப் பகுதிகளுக்குச் சென்றேன்.
22 ஆயினும் யூதேய நாட்டிலிருந்த கிறிஸ்தவச் சபைகளுக்கு அதுவரை அறிமுகம் ஆகாமலேயே இருந்தேன்.
23 “ஒரு காலத்தில் தங்களைத் துன்புறுத்தியவன், தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தை இப்பொழுது நற்செய்தியாக அறிவிக்கிறான்” என்று மட்டும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள்.
24 அதற்காக என் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.