யோவான் நற்செய்தி அதிகாரம் - 10

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

அதிகாரம் 10

1 “நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர்.

2 வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர்.

3 அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார்.

4 தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும்.

5 அறியாத ஒருவரை அவை பின் தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது.”

6 இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

7 மீண்டும் இயேசு கூறியது: “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே.

8 எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை.

9 நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்: வெளியே வருவர்: மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர்.

10 திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.

11 நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.

12 ”கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல: ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல: ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும்.

13 கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.

14 நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்: நானும் தந்தையை அறிந்திருக்கிறேன்.

15 அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்: என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.

16 இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.

17 தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்: அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.

18 என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு: அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்.”

19 இவ்வாறு இயேசு சொன்னதால் யூதரிடையே மீண்டும் பிளவு ஏற்பட்டது.

20 அவர்களுள் பலர், “அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது: பித்துப்பிடித்து அலைகிறான்: ஏன் அவன் பேச்சைக் கேட்கிறீர்கள்?” என்று பேசிக் கொண்டனர்.

21 ஆனால் மற்றவர்கள், “பேய் பிடித்தவனுடைய பேச்சு இப்படியா இருக்கும்? பார்வை அற்றோருக்குப் பேயால் பார்வை அளிக்க இயலுமா?” என்று கேட்டார்கள்.

22 எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம்.

23 கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்து கொண்டிருந்தார்.

24 யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்டார்கள்.

25 இயேசு மறுமொழியாக, “நான் உங்களிடம் கொன்னேன்: நீங்கள் தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன.

26 ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையை சேர்ந்தவர்கள் அல்ல.

27 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.

28 நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.

29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது.

30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” என்றார்.

31 அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர்.

32 இயேசு அவர்களைப் பார்த்து, “தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

33 யூதர்கள் மறுமொழியாக, “நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதானாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்” என்றார்கள்.

34 இயேசு அவர்களைப் பார்த்து, “ 'நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன் என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? "

35 கடவுளுடைய வார்த்தையைப் பெற்றக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது.

36 அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை இறை மகன் "என்று சொல்லிக் கொண்டதற்காக “இறைவனைப் பழித்துரைக்கிறாய்” என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? "

37 நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்ப வேண்டாம்.

38 ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்: அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்” என்றார்.

39 இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.

40 யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார்.

41 பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், “யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை: ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று” எனப் பேசிக்கொண்டனர்.

42 அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com