யோவான் நற்செய்தி அதிகாரம் - 1

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

அதிகாரம் 1

1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது: அவ்வாக்கு கடவுளோடு இருந்தது: அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது:

2 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.

3 அனைத்தும் அவரால் உண்டாயின: உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.

4 அவரிடம் வாழ்வு இருந்தது: அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.

5 அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது: இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.

6 கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்: அவர் பெயர் யோவான்.

7 அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார்.

8 அவர் அந்த ஒளி அல்ல: மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

9 அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.

10 ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.

11 அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

12 அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.

13 அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல: மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.

14 வாக்கு மனிதர் ஆனார்: நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.

15 யோவான் அவரைக் குறித்து, “எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்: ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்” என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.

16 இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்.

17 திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது: அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன.

18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை: தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

19 எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று அறிவித்தார்.

20 இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.

21 அப்போது, “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று அவர்கள் கேட்க, அவர், “நானல்ல” என்றார். “நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், “இல்லை” என்று மறுமொழி கூறினார்.

22 அவர்கள் அவரிடம், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்: எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்கள்.

23 அதற்கு அவர், 'ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே” என்றார். "

24 பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்

25 அவரிடம், “நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரே அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள்.

26 யோவான் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்:

27 அவர் எனக்குப்பின் வருபவர்: அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றார்.

28 இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.

30 எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்: ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.

31 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்: தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்” என்றார்.

32 தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: “தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்.

33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் “தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்” என்று என்னிடம் சொல்லியிருந்தார்.

34 நானும் கண்டேன்: இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்.”

35 மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.

36 இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்றார்.

37 அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.

38 இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு,”என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள்.

39 அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்”என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.

40 யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள்”அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.

41 அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்” என்றார். “மெசியா” என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.

42 பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி “கேபா” எனப்படுவாய் என்றார். “கேபா” என்றால் “பாறை” என்பது பொருள்.

43 மறு நாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, “என்னைப் பின்தொடர்ந்து வா” எனக் கூறினார்.

44 பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள்.

45 பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார்.

46 அதற்கு நத்தனியேல்,”நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார்.

47 நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு,”இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார்.

48 நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார்.

49 நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறை மகன்: நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.

50 அதற்கு இயேசு,”உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார்.

51 மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com