யோவான் நற்செய்தி அதிகாரம் - 5

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

அதிகாரம் 5

1 யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார்.

2 எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர்.

3 இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக்கிடப்பர். (இவர்கள் குளத்து நீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள்.

4 ஏனெனில் ஆண்டவரின் தூதர் சில வேளைகளில் அக்குளத்தினுள் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்றிருந்தாலும் நலமடைவார்.)

5 முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார்.

6 இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று அவரிடம் கேட்டார்.

7 “ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று உடல் நலமற்றவர் அவரிடம் கூறினார்.

8 இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்” என்றார்.

9 உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார்.

10 அன்று ஓய்வு நாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், “ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்” என்றார்கள்.

11 அவர் மறுமொழியாக”என்னை நலமாக்கியவரே, “உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துசெல்லும்” என்று என்னிடம் கூறினார்” என்றார்.

12 “படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்” என்று உம்மிடம் கூறியவர் யார்?” என்று அவர்கள் கேட்டார்கள்.

13 ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்.

14 புpன்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, “இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்: இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்” என்றார்.

15 அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார்.

16 ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.

17 இயேசு அவர்களிடம், “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்: நானும் செயலாற்றுகிறேன்” என்றார்.

18 இவ்வாறு அவர் ஓய்வு நாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல், கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால் யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள்.

19 இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “மகன் தாமாக எதையும் செய்ய இயலாது: தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

20 தந்தை மகன் மேல் அன்புகொண்டு தாம் செய்யும் அனைத்தையும் அவருக்குக் காட்டுகிறார்: இவற்றைவிடப் பெரிய செயல்களையும் அவருக்குக் காட்டுவார். நீங்களும் வியப்புறுவீர்கள்.

21 தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.

22 தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார்.

23 மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை.

24 என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்: ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

25 காலம் வருகிறது: ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்: அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

26 தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்.

27 அவர் மானிடமகனாய் இருப்பதால், தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார்.

28 இது பற்றி நீங்கள் வியப்புற வேண்டாம். காலம் வருகிறது: அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு

29 வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்: தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்.

30 நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.

31 “என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது.

32 என்னைப்பற்றி சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப் பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும்.

33 யோவானிடம் ஆளனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார்.

34 மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல: நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன்.

35 யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள்.

36 “யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்.

37 “என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார். நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை: அவரது உருவைக் கண்டதுமில்லை.

38 அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை: ஏனெனில், அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை.

39 மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே! அம் மறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது.

40 வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை.

41 “மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை.

42 உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை.

43 நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.

44 கடவுள் ஒருவரே. அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்களே! உங்களால் எப்படி என்னை நம்ப இயலும்?

45 தந்தையின் முன்னிலையில் உங்கள் மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள் மேல் குற்றம் சுமத்துவார்.

46 நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைப்பற்றித் தான் எழுதினார்.

47 அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்லுபவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?”

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com