ஆற்றல்

     புனித யோவான் எழுதிய நற்செய்தியின் துவக்க வசனங்களில் அவர்(வார்த்தை)உலகில் இருந்தார். உலகு அவரால் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்குரியவர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை (யோவான் 1:10-11) என்று கூறுகிறார். எத்தனை முறை நம்வாழ்வில் மனிதர்களை அலட்சியப் படுத்துகிறோம். அவர்களைக் கண்டு கொள்ளத் தவறுகிறோம். இவ்வுலகில் நம்வாழ்வின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுளைக் கூட நாம் நழுவ விடுகிறோம். இதனால் தான் என்னவோ புனித யோவான் தனது நற்செய்தியின் தொடக்கத்திலேயே கூறியதில் வியப்பொன்றுமில்லை.

     பரபரப்பான சிதறுண்ட நமது வாழ்வில் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கூட இயேசுவைத் தவறவிட்டு, வெறும் கொண்டாட்டங்களுடன் கடத்தி விடும் அபாய நிலையில் உள்ளோம். தேவையற்ற பலவிதமான கவனிப்புகளிலும், மிகைப்படுத்தப்பட்ட கவலைகளிலும் அடிக்கடி நம் மனதை ஈடுபடுத்துகிறோம். கிறிஸ்துமஸ் விழாவிற்கு எவ்விதமாக உடுத்திக் கொள்வது, எப்படிப்பட்ட உணவுகளை உண்பது, எங்கெல்லாம் செல்வது, யாரையெல்லாம் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது சந்திப்பது போன்ற பலவிதமான எண்ணங்களில் மூழ்கி விடுவதால், நள்ளிரவுத் திருப்பலியின் போதும், குடிலின் முன்சென்று நிற்கும் போதும் இவ்வுலகிற்கு வந்த அவரை நாம் அறிந்து கொள்ளவதோ அல்லது சந்திப்பதோ கிடையாது. நம்மை சந்திப்பதற்காகவும், நமது முழுமையான நிபந்தனையற்ற பதிலன்புக்காகவும் மட்டுமே அவர் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறாரேயன்றி நமது கொண்டாட்டங்களுக்காக அல்ல என்பதை நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

     கிறிஸ்துமஸ் விழாவின் போது மட்டும் அவரது பிறப்பை நாம் கொண்டாடினால் போதாது. புனித யோவான் நற்செய்தியில் தொடர்ந்து கூறுவதுபோல்(யோவான் 1:12) அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார் என்பதற்கிணங்க நாமும் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். யோவான் கூறியது போன்ற ஆற்றலை மங்கள வார்த்தை அறிவிக்கப்பட்ட தருணத்தில் இயேசுவைத் தன் உதிரத்தில் கருத்தாங்கியதன் மூலம் மரியாள் அனுபவித்தாள். கிறிஸ்து பிறப்பு விழா நாட்களில் வழக்கமாக நாம் கொள்ளும் மகிழ்ச்சியை போல் அல்லாமல் இந்த முறை கிறிஸ்துமஸ் கொண்டாடும் போது நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ஆற்றலை உணர்ந்துகொள்ள வேண்டும்.

இத்தகைய ஆற்றல் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களது உற்றார் உறவினர்களுக்கும் உரித்தாகுக!

அருட்தந்தை வின்சென்ட் துரைராஜ் ச.ச
நன்றி-சகாயமாதா அருளருவி டிசம்பர் 2002

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com