யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு - 19

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு 19

1 இதன்பின் பெருந்திரளான மக்களின் கூச்சல்போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது: “அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.

2 ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை உள்ளவை, நீதியானவை. தன் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய பேர்போன அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார்: தம் பணியாளர்களைக் கொன்றதற்காக அவளைப் பழிவாங்கினார். ”

3 மீண்டும் அந்த மக்கள், “அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது” என்றார்கள்.

4 அந்த இருபத்து நான்கு மூப்பர்களும் நான்கு உயிர்களும் அரியணையில் வீற்றிருந்த கடவுள்முன் விழுந்து வணங்கி, “ஆமென், அல்லேலூயா” என்று பாடினார்கள்.

5 அரியணையிலிருந்து எழுந்த ஒரு குரல், “கடவுளின் பணியாளர்களே, அவருக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்” என்று ஒலித்தது.

6 பின்னர் பெருந்திரளான மக்களின் கூச்சல்போலும் பெரும் வெள்ளத்தின் இரைச்சல்போலும் பேரிடி முழக்கம் போலும் எழுந்த போரொலியைக் கேட்டேன். அது சொன்னது: “அல்லேலூயா! நம் கடவுளாகிய ஆண்டவர், எல்லாம் வல்லவர்: அவர் ஆட்சி செலுத்துகின்றார்.

7 எனவே மகிழ்வோம், பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம். ஏனெனில் ஆட்டுக்குட்டியின் திருமண விழா வந்துவிட்டது. மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார்.

8 மணமகள் அணியுமாறு பளபளப்பான, தூய்மையான, விலையுயர்ந்த மெல்லிய ஆடை அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த ஆடை இறைமக்களின் நீதிச் செயல்களே. ”

9 அந்த வானதூதர் என்னிடம், “ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர் என எழுது” என்று கூறினார். தொடர்ந்து, “இவை கடவுளின் உண்மையுள்ள சொற்கள்” என்று சொன்னார். "

10 நான் வானதூதரை வணங்கும் பொருட்டு அவரது காலடியில் விழுந்தேன். ஆனால் அவரோ என்னிடம், “வேண்டாம். இயேசுவுக்குச் சான்று பகர்ந்த உனக்கும் உன் உடன்பிறப்புகளுக்கும் நான் உடன்பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்” என்றார். ஏனெனில் இயேசு பகர்ந்த சான்றே இறைவாக்குகளுக்கு உயிர்மூச்சு.

11 பின்னர் நான் விண்ணகம் திறந்திருக்கக் கண்டேன். அங்கே ஒரு வெண்குதிரை காணப்பட்டது. அதன்மேல் ஒருவர் அமர்ந்திருந்தார். “நம்பிக்கைக்குரியவர், உண்மையுள்ளவர்” என்பது அவருடைய பெயர். அவர் நீதியோடு தீர்ப்பளித்துப் போர் தொடுப்பார்.

12 அவருடைய கண்கள் தீப்பிழம்பு போலத் தென்பட்டன. அவரது தலைமேல் பல மணிமுடிகள் இருந்தன. அவரைத்தவிர வேறு எவருக்கும் தெரிந்திராத பெயர் ஒன்று அவர்மீது எழுதப்பட்டிருந்தது.

13 இரத்தம் தோய்ந்த ஆடையை அவர் அணிந்திருந்தார். “கடவுளின் வாக்கு” என்பது அவரது பெயர்.

14 வெண்மையும் தூய்மையுமான விலையுயர்ந்த மெல்லிய ஆடை அணிந்த விண்ணகப்படைகள் வெண் குதிரைகளில் அவரைப்பின் தொடர்ந்தன.

15 நாடுகளைத் தாக்குவதற்காக அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் ஒன்று வெளியே வந்தது. அவர் இருப்புக்கோல் கொண்டு அவர்களை நடத்துவார்: எல்லாம் வல்ல கடவுளின் கடும் சீற்றம் என்னும் பிழிவுக்குழியில் திராட்சை இரசத்தை அவர் பிழிந்தெடுப்பார்.

16 “அரசர்க்கெல்லாம் அரசர், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர்” என்ற பெயர் அவருடைய ஆடையிலும் தொடையிலும் எழுதப்பட்டிருந்தது.

17 பின்னர் ஒரு வானதூதர் கதிரவன்மீது நிற்பதை நான் கண்டேன். அவர் நடுவானில் பறந்துகொண்டிருந்த எல்லாப் பறவைகளையும் பார்த்து, உரத்த குரலில் கத்தி, “வாருங்கள், கடவுள் அளிக்கும் பெரும் விருந்துக்கு வந்துகூடுங்கள்.

18 அரசர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், வலியோர், படைவீரர்கள், குதிரைகள், குதிரைவீரர்கள், உரிமைக்குடிமக்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர் ஆகிய அனைவருடைய சதையையும் தின்ன வாருங்கள்” என்றார்.

19 அந்த விலங்கும் மண்ணுலக அரசர்களும் அவர்களுடைய படைகளும் குதிரைமீது அமர்ந்திருந்தவரோடும் அவருடைய படைகளோடும் போர் தொடுக்குமாறு கூடியிருக்கக் கண்டேன்.

20 அவ்விலங்கு பிடிபட்டது. அதன் முன்னிலையில் அரும் அடையாளங்கள் செய்திருந்த போலி இறைவாக்கினனும் அதனோடு சேர்ந்து பிடிபட்டான். தான் செய்த அரும் அடையாளங்களால் அந்த விலங்குக்குரிய குறி இட்டுக்கொண்டவர்களையும் அதன் சிலையை வணங்கி வந்தவர்களையும் ஏமாற்றியவன் அவனே. அந்தப் போலி இறைவாக்கினனும் விலங்கும் கந்தகம் எரிந்துகொண்டிருந்த நெருப்பு ஏரியில் உயிரோடு எறியப்பட்டார்கள்.

21 மற்றவர்கள் குதிரைமீது அமர்ந்திருந்தவருடைய வாயினின்று வெளியே வந்த வாளால் கொல்லப்பட்டார்கள். பறவைகளெல்லாம் அவர்களின் சதையை வயிறாரத் தின்றன.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture revelation 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com