யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு - 3

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

அதிகாரம் 3

1 “சர்தையில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: 'கடவுளுடைய ஏழு ஆவிகளையும் ஏழு விண்மீன்களையும் கொண்டிருப்பவர் கூறுவது இதுவே: உன் செயல்களை நான் அறிவேன். நீ பெயரளவில்தான் உயிரோடிருக்கிறாய்: உண்மையில் இறந்துவிட்டாய்.

2 எனவே விழிப்பாயிரு. உன்னில் எஞ்சியிருப்பதை உறுதிப்படுத்து. அது இறக்கும் தறுவாயில் உள்ளது. என் கடவுள் திருமுன் உன் செயல்கள் நிறைவற்றவையாய் இருக்கக் கண்டேன்.

3 நீ கற்றதையும் கேட்டதையும் நினைவில் கொள்: அவற்றைக் கடைப்பிடி: மனம் மாறு: நீ விழிப்பாயிரு. இல்லையேல் நான் திருடனைப் போல வருவேன். நான் எந்த நேரத்தில் உன்னிடம் வருவேன் என்பதை நீ அறியாய்.

4 ஆயினும், தங்கள் ஆடைகளைக் கறைப்படுத்திக்கொள்ளாத சிலர் சர்தையில் உள்ளனர். அவர்கள் வெண்ணாடை அணிந்து என்னுடன் நடந்து வருவார்கள். அவர்கள் அதற்குத் தகுதி பெற்றவர்களே.

5 வெற்றிபெற்றோர் இவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப்பெறுவர். வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கிவிட மாட்டேன். மாறாக, என் தந்தை முன்னிலையிலும் அவருடைய வானதூதர்கள் முன்னிலையிலும் அவர்களின் பெயர்களை அறிக்கையிடுவேன்.

6 கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். '

7 “பிலதெல்பியாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: “'தூயவரும் உண்மையுள்ளவரும் தாவீதின் திறவுகோலைக் கொண்டிருப்பவரும் எவரும் பூட்ட முடியாதவாறு திறந்து விடுபவரும் எவரும் திறக்க முடியாதவாறு பூட்டிவிடுபவரும்' கூறுவது இதுவே:

8 உன் செயல்களை நான் அறிவேன். இதோ, எவராலும் பூட்ட முடியாத கதவை நான் உனக்குமுன் திறந்து வைத்திருக்கிறேன். சிறிதளவு வலிமைதான் உன்னிடம் இருக்கிறது. இருப்பினும், நீ என் வாக்கைக் கடைப்பிடித்தாய்: என் பெயரை மறுதலிக்கவில்லை.

9 சாத்தானின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், தாங்கள் யூதர்கள் எனக் கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் யூதர்களே அல்ல, பொய்யர்கள். அவர்கள் உன்னிடம் வந்து, உன் காலடியில் விழுந்து பணியச் செய்வேன்: நான் உன்மீது அன்பு செலுத்திவருகிறேன் என்பதையும் அறியச்செய்வேன்.

10 மனவுறுதி தரும் என் வாக்கை நீ கடைப்பிடித்ததால், மண்ணுலகில் வாழ்வோரைச் சோதிக்க உலகு அனைத்தின்மீதும் வரவிருக்கும் சோதனைக் காலத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன்.

11 இதோ, விரைவில் வருகிறேன். உனக்குரிய மணிமுடியை வேறு யாரும் பறித்துக் கொள்ளாதபடி பார்த்துக் கொள். நீ பெற்றுக்கொண்டதை உறுதியாகப் பற்றிக்கொள்.

12 வெற்றி பெறுவோரை என் கடவுளின் கோவிலில் தூணாக நாட்டுவேன். அவர்கள் அதை விட்டு ஒருபொழுதும் நீங்கமாட்டார்கள். என் கடவுளின் பெயரையும் என் கடவுளுடைய நகரின் பெயரையும், அதாவது என் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருகின்ற புதிய பெயரையும் அவர்கள்மீது பொறிப்பேன்.

13 கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். '

14 “இலவோதிக்கேயாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: 'ஆமென் எனப்படுபவரும் நம்பிக்கைக்குரிய, உண்மையான சாட்சியும் கடவுளது படைப்பின் தொடக்கமும் ஆனவர் கூறுவது இதுவே:

15 உன் செயல்களை நான் அறிவேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை. குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்.

16 இவ்வாறு நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன்.

17 “எனக்குச் செல்வம் உண்டு, வளமை உண்டு, ஒரு குறையும் இல்லை” என நீ சொல்லிக்கொள்ளுகிறாய். ஆனால், நீ இழிந்த, இரங்கத்தக்க, வறிய, பார்வையற்ற, ஆடையற்ற நிலையில் இருக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை.

18 ஆகவே, நீ செல்வம் பெறும்பொருட்டு புடம்போட்ட பொன்னையும், ஆடையின்றி வெட்கி நிற்கும் உன் நிலையைப் பிறர் காணாதபடி அணிந்துகொள்ள வெண்ணாடையையும், நீ பார்வை பெறும்பொருட்டு உன் கண்களில் தடவிக்கொள்ள மருந்தையும் என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறு உனக்கு அறிவுரை வழங்குகிறேன்.

19 நான் யார் மீது அன்பு செலுத்துகிறேனோ அவர்களைக் கடிந்து தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே நீ ஆர்வம் கொண்டு மனம் மாறு.

20 இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்: அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.

21 நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்.

22 கேட்கச் செவி உடையோர், திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். '

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture revelation 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com