எபேசியருக்கு எழுதிய திருமுகம் - 6

அதிகாரங்கள்



1 2 3 4 5 6

அதிகாரம் 6

1 பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது.

2 “உன் தந்தையையும் தாயையும் மதித்து நட” என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை.

3 “இதனால் நீ நலம் பெறுவாய்: மண்ணுலகில் நீடுழி வாழ்வாய்” என்பதே அவ்வாக்குறுதி.

4 தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்துவாருங்கள்.

5 அடிமைகளே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல் இவ்வுலகில் உங்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு அச்சத்தோடும் நடுக்கத்தோடும், முழுமனத்தோடும் கீழ்ப்படியுங்கள்.

6 மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு, வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவர்களாயிராமல் கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள்.

7 மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வதுபோல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள்.

8 அடிமையாயினும் உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுவர். இது உங்களுக்குத் தெரியும் அன்றோ!

9 தலைவர்களே, நீங்களும் உங்கள் அடிமைகளிடம் அவ்வாறே நடந்து கொள்ளுங்கள். அவர்களை அச்சுறுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரே தலைவர் விண்ணுலகில் உண்டு என்பதையும் அவர் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

10 இறுதியாக, நீங்கள் ஆண்டவரோடு இணைந்து, அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் பெறுங்கள்.

11 அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள்.

12 ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகிறோம்.

13 எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று, அனைத்தின் மீதும் வெற்றிபெற்று நிலைநிற்க வல்லமைபெறும்படி, கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

14 ஆகையால், உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக் கொண்டு, நீதியை மார்புக்கவசமாக அணிந்து நில்லுங்கள்:

15 அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆயத்தநிலையை உங்கள் காலில் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள்.

16 எந்நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். அதைக் கொண்டு தீயோனின் தீக்கணைகளையெல்லாம் அணைத்துவிட முடியும்.

17 மீட்பைத் தலைச்சீராவாகவும், கடவுளின் வார்த்தையைத் தூய ஆவி அருளும் போர்வாளாகவும் எடுத்துக் கொள்ளுங்கள்.

18 எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்: எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாருங்கள்: இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள்.

19 நான் பேசும்போது நற்செய்தியின் மறைபொருளைத் துணிவுடன் தெரியப்படுத்துவதற்கான வார்த்தைகளைக் கடவுள் எனக்குத் தந்தருளுமாறு எனக்காகவும் மன்றாடுங்கள்.

20 நான் விலங்கிடப்பட்டிருந்தும் இந்த நற்செய்தியின் தூதுவனாக இருக்கிறேன். நான் பேச வேண்டிய முறையில் அதைத் துணிவுடன் எடுத்துக் கூற எனக்காக மன்றாடுங்கள்.

21 என்னைப்பற்றிய செய்திகளையும், நான் என்ன செய்கிறேன் என்பதையும் நீங்களும் அறிந்திருக்கும்படி, என் அன்பார்ந்த சகோதரர் திக்கிக்கு எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரிவிப்பார். அவர் ஆண்டவரது பணியில் நம்பிக்கைக்குரிய திருத்தொண்டர்.

22 எங்களைப்பற்றிய செய்திகளை உங்களுக்குத் தெரிவித்து உங்கள் உள்ளங்களை ஊக்குவிக்கவே அவரை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன்.

23 தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் நம்பிக்கையோடு கூடிய அன்பும் அமைதியும் சகோதரர் சகோரரிகள் அனைவருக்கும் உரித்தாகுக!

24 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மீது அழியாத அன்பு கொண்டிருக்கும் அனைவரோடும் இறை அருள் இருப்பதாக!

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com