எபேசியருக்கு எழுதிய திருமுகம் - 5

அதிகாரங்கள்



1 2 3 4 5 6

அதிகாரம் 5

1 ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள்.

2 கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

3 பரத்தைமை, அனைத்து ஒழுக்கக்கேடுகள், பேராசை ஆகியவற்றின் பெயர் கூட உங்களிடையே சொல்லப்படலாகாது. இதுவே இறைமக்களுக்கு ஏற்ற நடத்தை.

4 அவ்வாறே, வெட்கங்கெட்ட செயல், மடத்தனமான பேச்சு, பகடி பண்ணுதல் ஆகியவை தகாதவை: நன்றி சொல்லுதலே தகும்.

5 ஏனெனில் பரத்தைமையில் ஈடுபடுவோர், ஒழுக்கக் கேடாக நடப்போர், சிலை வழிபாடாகிய பேராசை கொண்டோர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமைப் பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

6 வீண் வார்த்தைகளால் உங்களை யாரும் ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில் மேற்கூறிய செயல்களால்தான் கீழ்ப்படியாத மக்கள் மீது கடவுளின் சினம் வருகின்றது.

7 எனவே அவர்களோடு நீங்கள் எதிலும் பங்கு கொள்ள வேண்டாம்.

8 ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

9 ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது.

10 ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள்.

11 பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவை குற்றமென எடுத்துக்காட்டுங்கள்.

12 அவர்கள் மறைவில் செய்பவற்றைச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது.

13 அவர்கள் செய்வதை எல்லாம் குற்றமென ஒளியானது எடுத்துக்காட்டும்போது அவற்றின் உண்மைநிலை வெளியாகிறது.

14 அவ்வாறு தெளிவாக்கப்படுவதெல்லாம் ஒளிமயமாகிறது. ஆதலால், “தூங்குகிறவனே, விழித்தெழு: இறந்தவனே, உயிர்பெற்றெழு: கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்” என்று கூறப்பட்டுள்ளது.

15 ஆகையால் உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள்.

16 இந்த நாள்கள் பொல்லாதவை. ஆகவே காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்:

17 ஆகவே அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்து கொள்ளுங்கள்.

18 திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும். மாறாக, தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுங்கள்.

19 உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள்.

20 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

21 கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்.

22 திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள்.

23 ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர்.

24 திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்.

25 திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார்.

26 வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார்.

27 அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார்.

28 அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின்மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவராவார்.

29 தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார்.

30 ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள்.

31 “இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டு தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்: இருவரும் ஒரே உடலாயிருப்பர்” என மறைநூல் கூறுகிறது.

32 இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.

33 எப்படியும், உங்களுள் ஒவ்வொருவரும் தம்மீது அன்புகொள்வதுபோல தம் மனைவியின் மீதும் அன்பு செலுத்த வேண்டும். மனைவியும் தம் கணவருக்கு அஞ்சி வாழ வேண்டும்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com