உரோமையருக்கு எழுதிய திருமுகம் - 16

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

அதிகாரம் 16

1 நம் சகோதரியாகிய பெயிபாவைக் குறித்து நற்சான்று அளிக்க விரும்புகிறேன்: இவர் கெங்கிரேயாவில் இருக்கும் சபையில் திருத்தொண்டராய் இருக்கிறார்.

2 இறை மக்களுக்கு ஏற்றவாறு ஆண்டவரின் பெயரால் அவரை வரவேற்று, அவருக்குத் தேவையான உதவி செய்யுங்கள். ஏனெனில் அவரும் பலருக் உதவி செய்திருக்கிறார்: எனக்கும் உதவி செய்திருக்கிறார்.

3 கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சேர்ந்து உழைக்கின்ற பிரிஸ்காவுக்கும் அக்கிலாவுக்கும் என் வாழ்த்து.

4 அவர்கள் என் உயிரைக் காக்கத் தலைகொடுக்கவும் முன்வந்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மட்டும் அல்ல, பிற இனத்துத் திருச்சபைகள் அனைத்துமே நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன.

5 அவர்கள் வீட்டில் கூடும் திருச்சபைக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். என் அன்பார்ந்த எப்பைனத்துக்கும் வாழ்த்துக் கூறுங்கள். ஆசியாவில் கிறிஸ்துவை முதன் முதல் ஏற்றுக் கொண்டவர் இவரே.

6 உங்களுக்காக பாடுபட்டு உழைத்த மரியாவுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள்.

7 என் உறவினர்களும் உடன் கைதிகளுமான அந்திரோனிக்கு, யூனியா ஆகியவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்: திருத்தூதர்களுள் இவர்கள் பெயர்பெற்றவர்கள்: இவர்கள் எனக்குமுன் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.

8 ஆண்டவருக்கு உரியவரான என் அன்பார்ந்த அம்பிலியாத்துக்கு வாழ்த்துக்கள்.

9 கிறிஸ்துவுக்காக உழைக்கும் என் உடன் உழைப்பாளரான உர்பானுக்கும் என் அன்பார்ந்த ஸ்தாக்கிக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.

10 அப்பெல்லுக்கும் என் வாழ்த்து: இவர் தகைமை வாய்ந்த ஒரு கிறிஸ்தவர். அரிஸ்தோபுல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள்.

11 என் உறவினரான எரோதியோனுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். நர்க்கிசு குடும்பத்தில் உள்ள ஆண்டவருடைய அடியார்களுக்கு என் வாழ்த்து.

12 ஆண்டவருக்காக உழைக்கும் திரிபேனாவுக்கும் திரிபோசாவுக்கும் என் வாழ்த்து: அன்பார்ந்த பெர்சிக்கும் என் வாழ்த்துகள். இவரும் ஆண்டவருக்காக மிகவும் பாடுபட்டு உழைத்தார்.

13 ஆண்டவர் பணிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூபுக்கும் அவர் அன்னைக்கும் வாழ்த்துக் கூறுங்கள். அவருடைய அன்னை எனக்கும் அன்னை போன்றவர்.

14 அசிங்கிரித்து, பிலகோன், எர்மசு, பத்திரொபா, எர்மா ஆகியோருக்கும் அவர்களோடு இருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக் கூறுங்கள்.

15 பிலலோகு, யூலியா, நேரேயு, அவருடைய சகோதரி ஒலிம்பா ஆகியோருக்கும் அவர்களோடு இருக்கும் இறைமக்கள் எல்லாருக்கும் என் வாழ்த்துகள்.

16 தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் எல்லாச் சபைகளும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றன.

17 சகோதர சகோதரிகளே, நான் உங்களிடம் வேண்டுவது: நீங்கள் கற்றுக்கொண்ட போதனையை மீறிப் பிரிவினைகளையும் தடைகளையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்களை விட்டு விலகுங்கள்.

18 ஏனெனில், இத்தகையோர் நம் ஆண்டவர் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யவில்லை: தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்கிறார்கள். இவர்கள் இன்சொல் பேசி முகமன் கூறிக் கபடற்ற உள்ளத்தினரை ஏமாற்றுகிறார்கள்.

19 நீங்கள் நற்செய்தியைப் பின்பற்றி வாழ்கிறீர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. எனவே உங்களைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். எனினும், நீங்கள் நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாயும், தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடற்றவர்களாயும் இருக்க வேண்டும் என விழைகிறேன்.

20 அமைதி தரும் கடவுள் சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப் போடுவார். நம் ஆண்டவர் இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக!

21 என் உடனுழைப்பாளரான திமொத்தேயுவும், என் உறவினர்களான லூகியு, யாசோன், சோசிபத்தர் ஆகியோரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.

22 இந்தத் திருமுகத்தை எழுதிக் கொடுத்த தெர்த்தியுவாகிய நான் ஆண்டவருக்கு உரியவன் என்னும் முறையில் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறேன்.

23 நான் தங்குவதற்கும் சபையினர் அனைவரும் ஒன்று கூடுவதற்கும் தம் வீட்டில் இடமளிக்கிற காயு உங்களுக்கு வாழ்த்துச் சொல்லுகிறார். நகரத்தின் பொருளாளரான எரஸ்தும் நம் சகோதரனாகிய குவர்த்தும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.

24 (“நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக! ஆமென்!” என்னும் வசனம் முக்கியமல்லாத சில கையெழுத்துப் படிகளில் மட்டுமே காணப்படுகிறது. )

25 இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

26 இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர்.

27 ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture romans 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com