உரோமையருக்கு எழுதிய திருமுகம் - 13

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

அதிகாரம் 13

1 ஆளும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எல்லாரும் பணிந்திருங்கள்: ஏனெனில் கடவுளிடமிருந்து வராத அதிகாரம் எதுவுமில்லை: இப்பொழுதுள்ள ஆட்சிப் பொறுப்புகளைக் கடவுளே ஏற்படுத்தினார்.

2 ஆகையால் அதிகாரத்தை எதிர்த்து நிற்போர் கடவுளின் ஏற்பாட்டையே எதிர்த்து நிற்கின்றனர். அவ்வாறு எதிர்ப்பவர்கள் தங்கள் மீது தண்டனைத் தீர்ப்பைத் தாங்களே வருவித்துக் கொள்கிறார்கள்.

3 நற்செயல் செய்வோர் ஆள்வோருக்கு அஞ்ச வேண்டியதில்லை: தீச்செயல் செய்வோரே அஞ்ச வேண்டும். அதிகாரிகளுக்கு அஞ்சாமல் நீங்கள் வாழ விரும்பினால் நன்மை செய்யுங்கள்: அப்போது அவர்களிடமிருந்து உங்களுக்குப் பாராட்டுக் கிடைக்கும்.

4 ஏனெனில் அவர்கள் உங்களுக்கு நன்மை செய்வதற்கென்றே கடவுளால் ஏற்படுத்தப்பட்ட தொண்டர்கள். ஆனால் தீமை செய்தால், நீங்கள் அஞ்சவேண்டியதிருக்கும். அவர்கள் கையில் தண்டிக்கும் அதிகாரம் இருக்கிறது. அது வீணாக அவர்களிடம் கொடுக்கப்படவில்லை. தீமை செய்வோர் மீது கடவுளின் தண்டனையை நிறைவேற்ற அவரே ஏற்படுத்திய தொண்டர்கள் அவர்கள்.

5 ஆகவே கடவுளின் சினத்தின் பொருட்டு மட்டும் அல்ல, மனச்சாற்றின் பொருட்டும் நீங்கள் பணிந்திருத்தல் வேண்டும்.

6 இதற்காகவே நீங்கள் வரிசெலுத்துகிறீர்கள். அவர்கள் தங்கள் பணியை ஆற்றும் போது கடவுளுக்கே ஊழியம் செய்கிறார்கள்.

7 ஆகையால் அனைவருக்கும் நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுங்கள். தலைவரி செலுத்த வேண்டியோருக்குத் தலைவரியையும் சுங்கவரி செலுத்த வேண்டியோருக்குச் சுங்க வரியையும் செலுத்துங்கள்: அஞ்ச வேண்டியவர்களுக்கு அஞ்சுங்கள்: மதிக்க வேண்டியவர்களை மதியுங்கள்.

8 நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார்.

9 ஏனெனில், “விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே” என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், “உன் மீது அன்பு கூர்வது போல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன.

10 அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.

11 இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள்: உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததை விட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது.

12 இரவு முடியப்போகிறது: பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக!

13 பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக!

14 தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture romans 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com