திருத்தூதர் பணிகள் - 13

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

அதிகாரம் 13

1 அந்தியோக்கிய திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரோன் ஊரானாகிய லூக்கியு, குறநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும், போதகராகவும் இருந்தனர்.

2 அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், “பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்” என்று கூறினார்.

3 அவர்கள் நோன்பிலிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

4 இவ்வாறு தூய ஆவியாரால் அனுப்பப்பட்டவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றார்கள்; அங்கிருந்து சைப்பிரசுக்குக் கப்பலேறினார்கள்.

5 அவர்கள் சாலமி நகருக்கு வந்து அங்குள்ள யூதரின் தொழுகைக் கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்தார்கள்; யோவானைத் தங்கள் உதவியாளராகக் கொண்டிருந்தார்கள்.

6 அவர்கள் பாப்போவரை அந்தத்தீவு முழுவதும் சென்றார்கள்; அங்குப் பாரேசு எனும் பெயருடைய போலி இறைவாக்கினனான யூத மந்திரவாதி ஒருவனைக் கண்டார்கள்.

7 அவன் அத்தீவின் ஆட்சியாளரான செர்கியு பவுலைப் சேர்ந்தவன். அறிஞரான அந்த ஆட்சியாளர் கடவுளின் வார்த்தையைக் கேட்க விரும்பிப் பர்னபாவையும் சவுலையும் தம்மிடம் வரவழைத்தார்.

8 எலிமா என்னும் மந்திரவாதி அவர்களை எதிர்த்து நின்று ஆட்சியாளர் நம்பிக்கை கொள்ளாதபடி அவரது கவனத்தைத் திருப்ப முயன்றான். — எலிமா என்றாலே மந்திரவாதி என்பது தான் பொருள். —

9 அப்போது பவுல் என்னும் சவுல் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவனை உற்றுப் பார்த்து,

10 “அனைத்து வஞ்சகத்துக்கும் உறைவிடமானவனே, பழிபாவம் எதற்கும் அஞ்சாதவனே, அலகையின் மகனே, நீதி நேர்மை அனைத்துக்கும் பகைவனே, ஆண்டவரின் நேரிய வழியிலிருந்து திசைதிருப்புவதை நிறுத்தமாட்டாயோ!

11 இதோ, இப்போதே ஆண்டவரது தண்டனை உன்மேல் வரப்போகிறது. குறிப்பிட்ட காலம்வரை நீ பார்வையற்றவனாய் இருப்பாய்; கதிரவனைக் காணமாட்டாய் என்றார். உடனே அவன் பார்வை மங்கியது; இருள் சூழ்ந்தது. அவன் தன்னைக் கைப்பிடித்து நடத்துவதற்கு ஆள் தேடினான்.

12 நடந்ததைக் கண்ட ஆட்சியாளர் ஆண்டவரின் போதனையைப் பற்றி வியப்பில் ஆழ்ந்தவராய் அவர் மீது நம்பிக்கை கொண்டார்.

13 பின்பு பவுலும் அவரோடு இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பலேறி, பம்பிலியாவிலுள்ள பெருகை நகருக்கு வந்தார்கள். அங்கே யோவான் அவர்களை விட்டு அகன்று எருசலேமுக்குத் திரும்பினார்.

14 அவர்கள் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வு நாளன்று அவர்கள் தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள்.

15 திருச்சட்டமும் இறைவாக்கினர் நூல்களும் வாசித்து முடிந்தபின் தொழுகைக் கூடத் தலைவர்கள் அவர்களிடம் ஆளனுப்பி, “சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

16 அப்போது பவுல் எழுந்து கையால் சைகைகாட்டிவிட்டுக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள்.

17 இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாயரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர்தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டுவந்தார்;

18 நாற்பது ஆண்டு காலமாய்ப் பாலை நிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை காட்டினார்.

19 -20அவர் கானான் நாட்டின்மீது ஏழு மக்களினங்களை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகள் உரிமைச் சொத்தாக அளித்தார்; அதன் பின்பு இறைவாக்கினர் சாமுவேலின் காலம்வரை அவர்களுக்கு நீதித் தலைவர்களை அளித்தார்.

20 பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.

21 பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து “ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன் என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்” என்று சான்று பகர்ந்தார்.

22 தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.

23 அவருடைய வருகைக்கு முன்பே யோவான், “மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்” என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார்.

24 யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் “நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை” என்று கூறினார்.

25 சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.

26 எருசலேமில் குடியிருக்கும் மக்களும் அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறியவில்லை; ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைப் புரிந்து கொள்ளவில்லை; ஆயினும் அவருக்கு அவர்கள் தீர்ப்பளித்தபோது அவ்வார்த்தைகள் நிறைவேறின.

27 சாவுக்குரிய காரணம் எதுவும் அவரிடம் இல்லாதிருந்தும், அவரைக் கொல்ல அவர்கள் பிலாத்திடம் கேட்டார்கள்.

28 மறைநூலில் அவரைப்பற்றி எழுதியுள்ள அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தார்கள். பின்பு அவரைச் சிலுவையிலிருந்து இறக்கிக் கல்லறையில் வைத்தார்கள்.

29 ஆனால் இறந்த அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார்.

30 அவர் கலிலேயாவிலிருந்து தம்முடன் எருசலேம் வந்தவர்களுக்குப் பல நாள்கள்தோன்றினார். அவர்கள் இப்போது அவர்தம் சாட்சிகளாக மக்கள் முன் விளங்குகின்றார்கள்.

31 இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பிள்ளைகளாகிய நமக்கென நிறைவேற்றினார். இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி.

32 இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில், “நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்” என்று எழுதப்பட்டுள்ளது.

33 மேலும் இறந்த அவர் இனி ஒருபோதும் அழிவுக்குட்படாதபடி கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார். இதுபற்றித்தான் “நான் தாவீதுக்கு அருளிய தூய, மாறாத வாக்குறுதிகளை உங்களுக்கும் தருவேன்” என்றும் கூறியிருக்கிறார்.

34 எனவே இன்னோர் இடத்தில் அவர், “உம் தூயவரை படுகுழியைக் காணவிடமாட்டீர்” என்றும் சொல்லியிருக்கிறார்.

35 ஏனென்றால் தாவீது தம் காலத்து மக்களிடையே கடவுளின் திட்டத்தை நிறைவேற்றி இறந்தார். அவர் தம் மூதாதையருடன் சேர்க்கப்பட்டார்; இவ்வாறு அழிவுக்குள்ளானார்.

36 ஆனால் கடவுளால் எழுப்பப்பட்டவரோ அழிவுக்குட்படவில்லை.

37 எனவே சகோதரரே, இது உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும்; இவர் வழியாகவே உங்களுக்குப் பாவ மன்னிப்பு உண்டு என அறிவிக்கப்படுகிறது. மோசேயின் திருச்சட்டத்தால் உங்களை எந்தப் பாவத்திலிருந்தும் விடுவிக்கமுடியாது.

38 ஆனால் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் இவர்வழியாக விடுவிக்கப்படுகின்றனர்.

39 -41ஆகவே, ‘இழிவுபடுத்துவோரே, கவனியுங்கள், வியப்புறுங்கள், ஒழிந்து போங்கள்; ஏனெனில் உங்கள் வாழ்நாளில் நான் செயல் ஒன்றைச் செய்திடுவேன். யார் விளக்கிச் சொன்னாலும் நீங்கள் அதை நம்பமாட்டீர்கள்!’ என்று இறைவாக்கினர் நூலில் கூறியிருப்பது உங்களுக்கு நேரிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.”

40 அவர்கள் வெளியே சென்றபோது, அடுத்த ஓய்வு நாளிலும் இவை பற்றித் தங்களோடு பேசும்படி மக்கள் அவர்களை வேண்டினர்.

41 தொழுகைக் கூடத்தில் இருந்தோர் கலைந்து சென்றபோது பல யூதர்களும் யூதம் தழுவிக் கடவுளை வழிபட்டவர்களும் பவுலையும், பர்னபாவையும் பின் தொடர்ந்தார்கள். இவ்விருவரும் அவர்களோடு பேசிக் கடவுளின் அருளில் நிலைத்திருக்கும்படி அவர்களைத் தூண்டினர்.

42 அடுத்து வந்த ஓய்வு நாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடி வந்தனர்.

43 மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள்.

44 பவுலும் பர்னபாவும் துணிவுடன், “கடவுளின் வார்த்தையை உங்களுக்குத் தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலை வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம்.

45 ஏனென்றால், ‘உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்’ என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்” என்று எடுத்துக் கூறினார்கள்.

46 இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர்.

47 அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது.

48 ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள்.

49 அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு இக்கோனியாவுக்குச் சென்றார்கள்.

50 சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com