திருத்தூதர் பணிகள் - 3

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

அதிகாரம் 3

1 ஒருநாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர்.

2 அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துக் கொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சைக் கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் “அழகுவாயில்” என்னுமிடத்தில் வைப்பர்.

3 அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சைக் கேட்டார்.

4 பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, “எங்களைப் பார்” என்று கூறினர்.

5 அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார்.

6 பேதுரு அவரிடம், “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி,

7 அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார்கள். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன .

8 அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்; துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார்.

9 அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர்.

10 அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகு வாயில் அருகே பிச்சைக்கேட்டுக் கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துக்கொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்ம்மறந்து நின்றனர்.

11 நலமடைந்த அவர் பேதுருவையும் யோவானையும் விடாமல் பற்றிக் கொண்டிருக்க, எல்லா மக்களும் திகிலுற்று சாலமோன் மண்டபம் என்னும் இடத்திற்கு ஒரு சேர ஓடிவந்தனர்.

12 பேதுரு இதைக் கண்டு மக்களைப் பார்த்துக் கூறியது: “எருசலேம் மக்களே, நீங்கள் ஏன் இதைப் பார்த்து வியப்படைகிறீர்கள்? நாங்கள் எங்கள் சொந்த வல்லமையாலோ இறைப்பற்றாலோ இவரை நடக்கச் செய்துவிட்டதுபோல் ஏன் எங்களையே உற்றுப் பார்க்கிறீர்கள்?

13 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர். இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள்.

14 நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டீர்கள்.

15 வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள்.

16 இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர். இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது.

17 அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத்தெரியும்.

18 ஆனால் கடவுள், தம் மெசியா துன்புறவேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார்.

19 எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள்.

20 அப்பொழுது ஆண்டவர் புத்துயிர் அளிக்கும் காலத்தை அருளி உங்களுக்காக ஏற்படுத்திய மெசியாவாகிய இயேசுவை அனுப்புவார்.

21 விண்ணேற்றமடைந்த இயேசு யாவும் சீர்படுத்தப்படும் காலம் வரை விண்ணுலகில் இருக்கவேண்டும். பழங்காலத் தூய இறைவாக்கினர் வாயிலாகக் கடவுள் இந்தக் காலத்தைக்குறித்து கூறியிருந்தார்.

22 மோசேயும், “உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரரிடமிருந்து என்னைப்போல் ஓர் இறைவாக்கினரைத் தோன்றச்செய்வார். அவர் உங்களுக்குக் கூறும் எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிசாயுங்கள்.

23 அந்த இறைவாக்கினருக்குச் செவிசாய்த்துக் கீழ்ப்படியாத எவரும் மக்களினின்று அடியோடு அழிக்கப்படுவர்” என்று கூறியுள்ளார்.

24 சாமுவேல் தொடங்கி இறைவாக்குரைத்த அனைவரும் இந்தக் காலத்தைப்பற்றி அறிவித்து வந்தனர்.

25 அந்த இறைவாக்கினர் உரைத்தவற்றை உரிமையாக்கிக்கொள்பவர்கள் நீங்கள். கடவுள் ஆபிரகாமிடம், “உன் மரபினர் வழியாக மண்ணின் மக்களினங்கள் அனைத்தும் ஆசிபெறும்” என்று கூறி உடன்படிக்கை செய்தார். கடவுள் உங்கள் மூதாதையரோடு செய்த அந்த உடன்படிக்கையையும் உரிமையாக்கிக் கொள்பவர்கள் நீங்களே.✠

26 ஆகையால், நீங்கள் அனைவரும் உங்கள் தீயசெயல்களைவிட்டு விலகி ஆசி பெற்றுக்கொள்வதற்காகவே, கடவுள் தம் ஊழியரைத் தோன்றச் செய்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com