லூக்கா நற்செய்தி அதிகாரம் - 15

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

அதிகாரம் 15

1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.

2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.

3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:

4 “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?

5 கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்:

6 வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, “என்னோடு மகிழுங்கள்: ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்” என்பார்.

7 அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

8 “பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?

9 கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, “என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்பார்.

10 அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன். ”

11 மேலும் இயேசு கூறியது: “ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.

12 அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, “அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்” என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.

13 சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்: அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.

14 அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்:

15 எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.

16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.

17 அவர் அறிவு தெளிந்தவராய், “என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!

18 நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், “அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்:

19 இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்: உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்” என்று சொல்லிக்கொண்டார்.

20 ”உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.

21 மகனோ அவரிடம், “அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்: இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்” என்றார்.

22 தந்தை தம் பணியாளரை நோக்கி, “முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்: இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்:

23 கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்: நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.

24 ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்: மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்: மீண்டும் கிடைத்துள்ளான்” என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

25 ”அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு,

26 ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, “இதெல்லாம் என்ன?” என்று வினவினார்.

27 அதற்கு ஊழியர் அவரிடம், “உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்” என்றார்.

28 அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.

29 அதற்கு அவர் தந்தையிடம், “பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.

30 ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!” என்றார்.

31 அதற்குத் தந்தை, “மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்: என்னுடையதெல்லாம் உன்னுடையதே.

32 இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்: மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்: மீண்டும் கிடைத்துள்ளான்” என்றார். ”

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com