லூக்கா நற்செய்தி அதிகாரம் - 11

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

அதிகாரம் 11

1 இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார்.

2 அவர் அவர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக!

3 எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.

4 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்”) என்று கற்பித்தார்.

5 மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:”உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, “நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு.

6 என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை” என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.

7 உள்ளே இருப்பவர், “எனக்குத் தொல்லை கொடுக்காதே: ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று: என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது” என்பார்.

8 எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

9 “மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்: தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்.

10 ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்: தேடுவோர் கண்டடைகின்றனர்: தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

11 பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா?

12 முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?

13 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!”

14 ஒரு நாள் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டினார். பேய் வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசினார். கூட்டத்தினர் வியந்து நின்றனர்.

15 அவர்களுள் சிலர், “பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.

16 வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.

17 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது:”தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும்.

18 சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே.

19 நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள்.

20 நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!

21 வலியவர் ஆயதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும்.

22 அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக் கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்.

23 23”என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்: என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்.

24 24”ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம்தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், “நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்” எனச் சொல்லும்.

25 திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகு படுத்தப்பட்டிருப்பதைக் காணும்.

26 மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும். ”

27 அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார்.

28 அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.

29 மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது:”இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.

30 யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்.

31 தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!

32 தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!

33 33”எவரும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ மரக்காலுக்குள்ளோ வைப்பதில்லை: மாறாக அறையின் உள்ளே வருவோர்க்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர்.

34 உங்கள் கண்தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்: அது கெட்டுப்போனால் உங்கள் உடல் இருளாய் இருக்கும்.

35 ஆகையால் உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாயிராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

36 உடலின் எப்பகுதியிலும் இளுளின்றி உங்கள் உடல் முழுவதும் ஒளியாய் இருந்தால், விளக்குச் சுடர் முன் நீங்கள் ஒளிமயமாய் இருப்பதுபோல் அனைத்தும் ஒளிமயமாய் இருக்கும். ”

37 இயேசு பேசிக்கொண்டிருந்த போது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக் கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.

38 உணவு அருந்து முன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார்.

39 ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது:”பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன.

40 அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா!

41 உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்.

42 42”ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா,கறியிலை, மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்: ஆனால் அவற்றையும் விட்டு விடலாகாது.

43 43”ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே.

44 ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள்போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள். ”

45 திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து, “போதகரே, இவற்றைச் சொல்லி எங்களை இழிவுபடுத்துகிறீர்” என்றார்.

46 அதற்கு அவர், “ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்: நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.

47 47”ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால் அவர்களைக் கொலை செய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே.

48 உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்: அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள்: நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள்.

49 இதை முன்னிட்டே கடவுளின் ஞானம் இவ்வாறு கூறுகிறது: நான் அவர்களிடம் இறைவாக்கினரையும் திருத்தூதரையும் அனுப்புவேன். அவர்களுள் சிலரைக் கொலை செய்வார்கள்: அவர்களுள் சிலரைத் துன்புறுத்துவார்கள்.

50 ஆபெலின் இரத்தம்முதல் பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே கொலை செய்யப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காகவும் இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும்.

51 ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும்.

52 52”ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை: நுழைவோரையும் தடுக்கிறீர்கள்” என்றார்.

53 இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது மறைநூல் அறிஞரும் பரிசேயரும் பகைமையுணர்வு மிகுந்தவராய்

54 அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்குமாறு பல கேள்விகளைக் கேட்டனர்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com