மாற்கு நற்செய்தி அதிகாரம் - 16

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

அதிகாரம் 16

1 ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் அவரது உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர்.

2 வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் அவர்கள் கல்லறைக்குச் சென்றார்கள்.

3 “கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?” என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள்.

4 ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல்.

5 பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள்.

6 அவர் அவர்களிடம், “திகிலுற வேண்டாம்: சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்: அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்: அவர் இங்கே இல்லை: இதோ, அவரை வைத்த இடம்.

7 நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், “உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்: அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்” எனச் சொல்லுங்கள்” என்றார்.

8 அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்: நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்.

9 ( வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார்.

10 மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள்.

11 அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.

12 அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார்.

13 அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்: அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை.

14 இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதை நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்.

15 இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்: நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.

17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்: புதிய மொழிகளைப் பேசுவர்:

18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.

19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.

20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார். )

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com