மாற்கு நற்செய்தி அதிகாரம் - 1

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

அதிகாரம் 1

1 கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்:

2 “இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்: அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.

3 பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.

4 இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.

5 யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்: தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.

6 யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்: தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்: வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.

7 அவர் தொடர்ந்து, “என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.

8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” எனப் பறைசாற்றினார்.

9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.

10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.

11 அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

12 உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

13 பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்: அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்: அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.

14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.

15 காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது: மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.

16 அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.

17 இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்: நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார்.

18 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

19 பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

20 உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

21 அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.

22 அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.

23 அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.

24 அவரைப் பிடித்திருந்த ஆவி, “நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று கத்தியது.

25 “வாயை மூடு: இவரை விட்டு வெளியோ போ” என்று இயேசு அதனை அதட்டினார்.

26 அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.

27 அவர்கள் அனைவரும் திகைப்புற்று, “இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்: அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.

28 அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

29 பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.

30 சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.

31 இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.

32 மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்.

33 நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது.

34 பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்: அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.

35 இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.

36 சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள்.

37 அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள்.

38 அதற்கு அவர், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்: ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார்.

39 பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.

40 ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார்.

41 இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார்.

42 உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

43 பிறகு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும்.

44 நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.

45 ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை: வெளியே தன்மையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com