முதல் மூன்று நூற்றாண்டுகளில் பாஸ்கா மறைபொருளை கொண்டாடும் ஞாயிறு வழிபாடும், உயிர்ப்புப் பெருவிழாவின் ஆண்டு கொண்டாட்டமும் மட்டுமே திருவழிபாட்டு ஆண்டின் முக்கிய கொண்டாட்டங்களாக இருந்தன. ஆயினும், நான்காம் நூற்றாண்டிலிருந்து கிறிஸ்து பிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதற்கான பல சான்றுகள் கிடைத்துள்ளன. எனவே. இவ்வியலில் கிறிஸ்து பிறப்பு விழா பற்றிய வரலாற்றையும். அதன் திருவழிபாட்டு அமைப்பையும் மற்றும் அதனின் இறையியல் முக்கியத்துவத்தையும் பற்றி காண்போம்.
கிறிஸ்து பிறப்பு விழா சரியாக எந்த ஆண்டு தொடங்கியது என்பதைப் பற்றிய குறிப்புகள் தெளிவாக இல்லாமலிருந்தாலும் சில தொடக்க கால சான்றுகளிலிருந்து அதனின் வளர்ச்சியை நாம் அறிந்துக்கொள்ள முடிகின்றது.
பின்வரும் ஆறு சான்றுகளின்படி 336 ஆம் ஆண்டில் கிறிஸ்து பிறப்பு விழாவானது டிசம்பர் 25 ஆம் நாள் உரோமைய வழிபாட்டு மரபில் கொண்டாடப்பட்டது என்பது தெளிவாகின்றது. முதலாவதாக, மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கிடைத்துள்ள மறைசாட்சிகளின் பட்டியல் உரேமையர்களின் முதல் மாதமாகிய ஜனவரி மாதத்தின் முதல் நாளுக்கு எட்டு நாட்களுக்கு முன் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு கிறிஸ்து பிறந்தார் எனக் குறிப்பிருகின்றது. இரண்டாவகாக, மூன்றாம் நூற்றாண்டின் மற்றொரு பழமையான சான்றான கிபி 252 லிருந்து 352 வரை வாழ்ந்த ரோமை ஆயர்களின் பெயர்கள் கொண்ட அட்டவணையானது டிசம்பர் 25 ஆம் நாளான கிறிஸ்து பிறப்பு விழாவே கிறிஸ்தவ ஆண்டின் தொடக்கமாக இருந்தது எனக் குறிப்பிடுகின்றது. முன்றாவதாக, உரோமையர்களின் கலைக்களஞ்சியம், அதாவது உரோமைப் பேரரசர் மற்றும் உயர் அனுவலர்களின் பெயர் பட்டியலைத்தரும் இந்நூல் அகஸ்துஸ் சீசர் பேரரசராக இருந்தபோது டிசம்பர் 25 ஆம் நாள், அதாவது அம்மாவாசையிலிருந்து 15 நாட்களுக்கு பிறகு வந்த வெள்ளியன்று இயேசு கிறிஸ்து பிறந்தார் என குறிப்பிருகின்றது. நான்காவதாக, 360 ஆம் ஆண்டில் நுமிடியானின் ஆயாரான ஓப்த்தாடுஸ் என்பவரின் மறையுரையானது டிசம்பர் 25 ஆம் நாளை இயேசு கிறிஸ்து பிறப்பு விழா எனக் கூறுகின்றது. ஐந்தாவதாக, 386 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் அதாவது கிறிஸ்து பிறப்பு விழா அன்று புனித ஜான் கிறிஸ்சோஸ்தோம் அவர்களால் வழங்கப்பட்ட மறையுரையானது கீழை திருச்சபையில் இவ்விழாவானது பத்து ஆண்டுகளுக்குமுன் அறிமுகப்படுத்தப்பட்டது சரியானதே என்பதை சுட்டிக்காட்டுகின்றது. ஆறாவதாக, புனித நசியான்செஸ் கிரகோரி அவர்கள் 379 ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் திருக்காட்சி விழா நாட்களில் நிகழ்த்திய மறையுரையும் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கான சான்று பகர்கின்றது. மேற்கூறிய இச்சான்றுகள் பற்றி 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. இத்திருவழிபாட்டு ஆய்வுகளின் கூற்றுபடி கான்ஸ்டன்டைன் காலத்திற்கு முன்பாகவே கிறிஸ்து பிறப்பு விழாவானது டிசம்பர் 25 ஆம் நாளில் கொண்டாடப்பட்டது என்று கருதப்படுகின்றது. இதன் அடிப்படையில் கிறிஸ்து பிறப்பு விழாவின் தோற்றத்தினைப் பற்றிய இரண்டு வகையான விளக்கங்களை நாம் காண்போம்.
கிறிஸ்து பிறப்பு விழாவின் தேதியினைக் குறித்து கீழ்காணும் இரண்டு கருதுகோள்களை திருவழிபாட்டு அறிஞர்கள் முன்வைக்கின்றார்கள்: 1 சமய வரலாற்றின் கருதுகோள், 2) கணக்கீட்டு கருதுகோள். முதலாவதான “சமய வரலாற்றின் கருதுகோள்” 1952 ஆம் ஆண்டில் டோம் ஹிரோனிமுஸ் பிராங் என்ற பெனடிக்டைன் துறவற சபையைச் சேர்ந்த திருவழிபாட்டு அறிஞரால் எடூத்துரைக்கப்பட்டது. டிசம்பர் 25 ஆம் நாள் கிறிஸ்து பிறப்பு விழாவானது கொண்டாடப்பட்டதற்கான காரணங்களை விளக்கிச்சசால்ல இவர் முயன்றார். எருசலேமில் தூய ஆவியின் அருட்பொழிவிற்குப்பின் விரைவாக பரவத் தொடங்கிய கிறிஸ்தவம் மத்தியதரைக்கடல் பகுதியை தாண்டி உரோமையர் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு பரவத் தொடங்கியபோது உரோமைய சமயத்தினரோடு தொடர்பு கொண்டது.
உரோமைய பேரரசர் அவ்ரேலியுஸ் கி.பி. 274 ஆம் ஆண்டு சூரிய கடவுளுக்கு தனது ஆட்சி பொறுப்பில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒரு விழா கொண்டாடப்படவேண்டுமென ஆணையிட்டான். இச்சுரியக்கடவுள் யாராலும் வெல்ல முடியாதவர் என்றும் அவருக்கான விழாவானது டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படவேண்டுமென்றும் கட்டளை பிறப்பித்தான். பிரிவுபட்டிருந்த மக்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க பயன்படும் ஒரு தருணமாகவே இவ்விழாவை பேரரசன் கருதினான். பேரரசனின் உள்நோக்கம் கடவுள் வழிபாடு என்பதைவிட மக்களை தன்னுடைய அதிகாரத்தின் கீழ் ஒரே கலாச்சாரத்தில் ஒன்று சேர்க்கவும் தன் ஆட்சியை வலுப்படுத்தவுமே என்பது திண்ணம். இந்த விழாவானது மிகவும் கவர்ச்சியானதாகவும், சிறப்பானதாகவும் கிறிஸ்தவர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகவும் இருந்தது. உண்மைக்கடவுளை மறந்து ஒரு மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட சூரியக் கடவுளை வழிபடும் கீரேக்க-உரோமையர்களின் விழா மோகத்திலிருந்து கிறிஸ்தவர்களை காக்கும் முயற்சியாக உரோமைத் திருச்சபையானது கிறிஸ்து பிறப்பு விழாவை இதே நாளில் கொண்டாடத் தொடங்கியது. இவ்விளக்கமே “சமய வரலாற்றின் கருதுகோள்” என்றழைக்கப்பட்டது, இவ்விளக்கம் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிரியன் டயனேசியஸ் பார்-சலிபி (1171) என்பவரின் எழுத்துப் படிவம் கூறுகின்ற குறிப்புகளோடு ஒத்திருக்கின்றது. அதாவது, எப்படி கிறிஸ்தவர்கள் சூரியக் கடவுளின் விழாவினை மாற்றி உலகின் ஒளியாம் கிறிஸ்துவின் பிறப்பு விழாவினைக் கொண்டாடினார்கள் என்பதைச் இவருடைய குறிப்புகள் சுட்டிக் காட்டுகிறன. இருப்பினும் பெர்னார்டு போட் என்ற திருவழிபாட்டு அறிஞரின் ஒரு சில 'நம்பத்தக்க பழைய சான்றுகள் தாங்கி இருக்கும் மிகவும் சரியான எச்சரிக்கையையும் நாம் கவனத்கில் ஏற்க வேண்டும்.
உரோமையர்களின் சூரியக்கடவுள் வழிபாட்டின் பண்புகள் கிறிஸ்தவர்களின் கிறிஸ்து பிறப்பு விழாவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என பெர்னார்டு போட் ஏற்றுக் கொள்கிற அதே வேளையில் முழுமையான சமய வரலாற்றின் கருதுகோளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. உரோமையர்களின் விழாவினை கிறிஸ்தவர்கள் அப்படியே முழுமையாக பின்பற்றவில்லை. மாறாக, இந்த விழாவை கிறிஸ்தவர்கள் விவிலிய மற்றும் இறையியல் பின்னணியோடு பொருத்தியே கொண்டாடினார்கள். ஏனெனில் பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர் மீட்பரை “நீதியின் கதிரவன்" என முன்னதாகவே வர்ணித்துள்ளார் முலா 4:2; 3:20. மேலும் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து தம்மை தாமே “உலகின் ஒளி” என யோவான் 8:12 இல் வர்ணித்துள்ளார். அதுபோலவே. புனித யோவான் நற்செய்தியின் தொடக்கத்திலேயே கிறிஸ்து அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளியாக இருக்கிறார் என சொல்லப்பட்டிருக்கின்றது (யோவா 19-10.) இப்படியாக கிறிஸ்தவ கண்ணோக்கில் பாவ இருள் அகற்ற உலகின் உண்மையான ஒளியாக வந்த இயேசுவின் பிறப்பு விழாவானது, அதாவது இறைவாக்கினர் கூற்றின்படி நீதியின் கதிரவனின் விழாவானது, உரோமைய விழாவான சூரியக் கடவுளின் விழாவினை மாற்றி அமைத்தது. உரோமைப் பேரரசன் சூரியக்கடவுளுக்கான விழாவை ஏற்படுத்துவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்துவை ஒளியாக ஏற்றுக்ககாண்ட கிறிஸ்தவர்கள் உரோமைய அரசு விழாவிலிருந்து தாங்கள் ஏற்கெனவே ஏற்றுக்ககாண்ட இயேசுவின் பிறப்பு விழாவினை எப்படி ஆடம்பரமாக கொண்டாடுவது என்று மட்டுமே கற்றுக்கொண்டார்கள். மேலும், தந்தையாகிய கடவுளுக்கும் இறைமகனான இயேசு கிறிஸ்துவிற்கும் உள்ள ஆழமான நிலையான உறவினை விளக்கிச் சொல்லவும் இயேசு கிறிஸ்து கடவுளும் மனிதருமானவர் என்பதை சுட்டிக்காட்டவும் திருச்சபையின் தந்தையர்கள் கிறிஸ்துவின் மானிட பிறப்பு விழாவினை பயன்படுத்தினார்கள். எடுத்துக்காட்டாக, 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தந்தை புனித முதலாம் லியோ அவர்களின் மறையுரைகள் திருச்சபையின் தந்தையர்கள் காலத்தில் விசுவாசத்தை எதிர்ப்பவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக கிறிஸ்து பிறப்பு விழாவின் மறைபொருளை சான்றாக எப்படி பயன்படுத்துவது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.
இரண்டாவது விளக்கம் “கணக்கீட்டு கருதுகோள்” எனப்படுகிறது. இது லூயிஸ் துஷேன் என்னும் அறிஞரால் 1880 இல் முன்மொழியப்பட்டது. இந்த கருதுகோளானது பொதுவான பல ஊகங்களின் அடிப்படையில் அமைந்திருப்பதால் பல சர்ச்சைகளுக்கு உட்பட்டது. ஆயினும், திருவழிபாட்டு அறிஞர்களான இரோணிமுஸ் எங்பெர்டிங் (1952) மற்றும் தாமஸ் டேலி (1982 )ஆகியோரது முயற்சியினால் இக்கருதுகோள் மீண்டும் புத்துயிர் பெற்றது. துஷேன் அவர்களின் ஆய்வுபடி கிறிஸ்து பிறப்பு விழாவனது உரோமைய சூரியக் கடவுளுக்கான விழாவிற்கு பதிலாகவே வழக்கத்திற்கு வந்தது என்பது உண்மையல்ல. இக்கருத்தினை நிலைநாட்ட சில சான்றுகளை வழங்குகின்றார். அலெக்ஸாண்டிரியா நகர ஆயரான புனித கிளமெண்ட், மேலும் தெர்த்துல்லியன், கிப்போலிதுஸ் ஆகியோரது மறையுரைகள் மற்றும் உரோமைய ஆயர்களின் பட்டியல் இவைகளிலிருந்து மார்ச்12 ஆம் தேதி இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்பு நினைவு கூரப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டி மார்ச் 25 ஆம் நாள்தான் கபிரியேல் தூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொல்லியிருக்கவேண்டும் எனக்கூறுகின்றார். ஏனெனில், பழங்கால வழக்கப்படி மனித வாழ்வின் தொடக்கத்தையும் முடிவையும் ஒரே நாளில் முழு எண்ணிக்கை வருமாறுதான் கணக்கிட்டனர் என இவ்வறிஞர் வாதிருகின்றார். இத்தகைய வாதத்தை ஏற்றுக்கொண்டால் மார்ச் 25 அன்று இயேசு கருவில் உருவானார். அதிலிருந்து சரியாக குழந்தை கருவிலிருந்து முழு வளர்ச்சி பெறும் ஒன்பது மாதங்களை கணக்கிட்டால் டிசம்பர் 25 அன்றுதான் இயேசு பிறந்தீிருக்கவேண்டும் என இவர் ஒர் முடிவுக்கு வருகின்றார். மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்துவ எழுத்தாளர்களின் கருத்துப்படி திருமுழுக்கு யோவான் இலையுதிர் காலத்தில் அதாவது அக்டோபர் மாதத்தில்தான் கருத்தரித்திருக்கவேண்டுமென கூறுகின்றார். லூக்கா நற்செய்தியாளர் கூற்றுப்படி (1:26) திருமுழுக்கு யோவான் கருவாக உருவாகியதிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் இயேசு கருவில் உருவானார். எனவே இயேசு வசந்தக்காலத்தில் அதாவது மார்ச் 25 அன்றுதான் கருவில் உருவானார். திருமுழுக்கு யோவானின் பிறப்பு ஜூன் 24 அன்று கொண்டாடப்படுகின்றது. எனவே அதிலிருந்து ஆறுமாதங்கள் கணக்கிட்டால் குளிர்காலமான டிசம்பர் 25 ஆம் தேதிதான் இயேசுவின் பிறப்பு நாள் எனவும் வாதிடப்படுகின்றது.
மேற்கூறிய இரண்டூ கருதுகோள்களும் மாறுபட்ட விளக்கங்களை பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் நமக்கு வழங்க முன்வந்தாலும் அடிப்படையான கருத்து ஒன்றே ஆகும். அதாவது திருச்சபையின் தொடக்கக்காலங்களில் கிறிஸ்து பிறப்பு விழாவானது டிசம்பர் 25 ஆம் நாளன்றுதான் கொண்டாடப்பட்டது. இவ்விழாவானது உரோமையரது ஆட்சிக்குட்படாத பல கீழை நாட்டு மரபுகளிலும் முற்காலத்தில் பரவியிருந்தது அறிஞர்களுக்கும் வியப்பையே அளிக்சின்றது. “வாக்கு மனிதர் ஆனார். நம் நழுவே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம்” யோவா 1:14 என்கின்ற இறைவார்த்தைகளுக்கேற்ப கடவுள் மனிதரானார் என்கின்ற மாபெரும் மறைநிகழ்ச்சியைத்தான் இவ்விழாவில் நாம் கொண்டாடுகின்றோம்.