திருவருகைக்கால தயாரிப்பில் கிறிஸ்தவர்கள் ஒரு ஆன்மீகத் தயாரிப்பாக இந்த இளந்தளிர் வளைய செயற்பாட்டை நான்கு வாரங்களுக்கு நான்கு மெழுகுவர்த்திகளைக் கொண்டு தங்களை ஆயத்தப்படுத்தினர். கிறிஸ்து இயேசு, இரவைப் பிரகாசித்த ஒளி. இளந்தளிர்கள், நம் வாழ்வு தொடர்கிறது என்பதைக் குறிக்கிறது.
இளந்தளிர் துன்பத்திலிருந்து வெற்றி கொண்டதையும், நிலைவாழ்வையும் குறிக்கிறது. முள் இலைகள் இயேசுவின் முள்முடியையும், இளந்தளிர் வளையம் ஆன்மாவின் நிலைவாழ்வையும், முள் கட்டைகள் இயேசுவின் உயிர்ப்பையும் குறிக்கிறது. ஆக, இயேசு கிறிஸ்து மனுவுருவாகி இப்புவியில் உதித்து மக்களின் பாவங்களை களைந்து உலகை மீட்டார் என்பதை இந்த இளந்தளிர் வளையம் பொருட்பட வைக்கிறது.
நான்கு மெழுகுவர்த்திகள் திருவருகைக்காலத்தின் நான்கு வாரங்களைக் குறிக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஓராயிரம் ஆண்டைக் குறிக்கிறது. நான்கு வாரங்கள் ஆதாம் ஏவாள் முதல் இயேசு கிறிஸ்து பிறப்பு வரை நான்காயிரம் ஆண்டுகள் எனக் கணக்கிடப்படுகிறது. ஊதா நிறமுள்ள மூன்று மெழுகுவர்த்திகள் திருவருகைக்காலத்தில் நாம் செய்கின்ற செபம், தவம், நற்செயல்களையும், இளஞ்சிவப்பு நிற மெழுகுவர்த்தி மகிழ்ச்சியையும் குறிக்கிறது. தொடர்ந்து நான்கு வாரங்கள் ஏற்றப்படும் மெழுகுவர்த்திகள் இயேசு கிறிஸ்துவின் முதல் வருகை மற்றும் உலக மக்களின் தீர்ப்பிற்கான இரண்டாம் வருகையின் அடையாளமாகும்.
ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்திகள் இயேசு கிறிஸ்து உலகின் ஒளி எனக் காட்டுகின்றது. கிறிஸ்தவ குடும்பங்களில் திருவருகைக்கால இளந்தளிர் வளையம் இரவு உணவு செபத்திற்கு பிறகு செபத்துடன் ஒளியூட்டப்படுகிறது.
முதல் வாரத்தில் குடும்பத் தலைவர் இளந்தளிர் வளையத்தை ஆசீர்வதித்து நம் இதயத்தில் பாலன் இயேசுவை வரவேற்கத் தகுந்த முறையில் எதிர்நோக்கு என்னும் முதல் ஊதா நிற மெழுகுவர்த்தியை குடும்பத்தின் இளைய குழந்தை ஒளியூட்டுகிறார்.
இரண்டாம் வாரத்தில் குடும்பத் தலைவர் இளந்தளிர் வளையத்தை ஆசீர்வதித்து நம் இதயத்தில் பாலன் இயேசுவை வரவேற்கத் தூய செயல்களையே செய்ய வரம் கேட்டு, குடும்பத்தில் முதல் குழந்தை முதல் மற்றும் இரண்டாம் ஊதா நிற நம்பிக்கை என்னும் மெழுகுவர்த்தியை ஒளியூட்டுகிறார்.
மூன்றாம் வாரத்தில் குடும்பத் தலைவர் இளந்தளிர் வளையத்தை ஆசீர்வதித்து இயேசு கிறிஸ்துவின் வருகை நம் வாழ்வின் இருளை அகற்ற வேண்டுமென , குடும்பத் தலைவி முதல் இரண்டு ஊதா மற்றும் "மகிழ்ச்சி" நல்லாயன் என்னும் இளஞ்சிவப்பு மெழுமுவர்த்திகளை ஒளியூட்டுகிறார்.
நான்காம் வாரத்தில் குடும்பத் தலைவர் இளந்தளிர் வளையத்தை ஆசீர்வதித்து இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நம் வாழ்வின் பாவங்களை அகற்ற வேண்டுமென , பின்னர் குடும்பத் தலைவர் முதல் மூன்று மற்றும் சமாதானம் என்னும் நான்காவது மெழுகுவர்த்திகளையும் ஒளியூட்டுகிறார்.
நடுவில் உள்ள வெள்ளை மெழுகுத்திரியானது கிறிஸ்துவைக் குறிக்கிறது. இது கிறிஸ்மஸ் பெருவிழா அன்று ஒளியூட்டப்படுகின்றது. எனவே இந்தத் திருவருகைக்காலத் தயாரிப்பு நம்மில் இறை நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. மேலும் திருவருகைக்காலத்தில் ஆண்டவர் இயேசுவின் வருகையின்போது நாம் விழிப்பாக இருக்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்படுகிறது.