இயேசுவின் இனிய நண்பர் இஞ்ஞாசியார்..

பக்கம் 1 + 2 + 3 + 4 + 5


17. அதே கோவிலில் ஒருமுறை அவர் திருப்பலி நிறைவேற்றிய பொழுது அப்பத்தை உயர்த்தியபொழுது இயேசுவின் உடலைத் தத்ரூபமாகக் கண்டார்.

18. அடிக்கடி இயேசுவும், அன்னை மரியாளும் அவருக்குக் காட்சியளித்தனர். இவை நெடுநேரமாக நீடித்தன. இதன் விளைவாக அவரது பக்தி வளர்ந்தோங்கியது. இறைவனுக்குத் தன்னையே அர்ப்பப்பணிக்கக் கூடிய தாராளகுணமும் பெருகியது.

19. ஒரு முறைச் சாந்தாலூசியா என்ற சத்திரத்தில் அவர் செபித்த பொழுது ஆழமான அனுபூதி அனுபவத்தைப் பெற்றார். ஒரு சனிக்கிழமையிலிருந்து மறுசனிக்கிழமை வரை ஏழு நாட்கள் உணர்வற்ற நிலையில் இருந்தார். செத்தச் சவம் போல் செயலிழந்து இருந்தார்.

20. ஒரு முறைக் கார்தோனர் என்ற ஆற்றருகில் அவர் செபித்துக் கொண்டிருந்த பொழுது ஒர் அரும்பெரும் காட்சியைக் கண்டார். அதன் வழியாக தெய்வீக மனித இயல்புகள், இவ்வுலகம் படைக்கப்பட்ட விதம் போன்ற காரியங்களைப் பற்றிய அறிவைத் தெள்ளத் தெளிவாகப் பெற்றார்.

21. மன்ரேசா குகையில் பத்து மாதங்கள் தங்கி அவர் செபித்த பொழுது இறைவனின் உள்ளுணர்வால் ஆன்மீகப் பயிற்சிகள் என்ற அரிய புத்தகத்தை எழுதினார்.

22. புனித பயணம் மேற்கொண்ட அவர் வெனீஸ் நகரத்தில் கப்பலேறினார். புனித பூமியாகிய எருசலேம் செல்வதற்குத் தேவையான பணத்தைப் பிச்சை எடுத்துச் சேகரித்திருந்தார். பயணத்தின்போது இறைவன் தன்னைப் பராமரிப்பார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கைக் கொண்டு அப்பணத்தைக் கீழே வீசி ஏறிந்தார்.

23. பயணத்தின் போது பாதுவா நகர் வழிச் செல்ல நேர்ந்தது. வழியில் இரவின் கொடுரமும், புயலின் வீச்சும் அவரை அச்சுறுத்தின. அப்பொழுது வானத்தில் நம் ஆண்டவர் இயேசு அவருக்குத் தோன்றி ஆறுதல் அளித்தார்.

24. வெனீஸ் நகரத்திற்கு அவர் சென்றபொழுது அங்குள்ள புனித மாற்குப் பேராலயத்தின் முன்பிருந்த வளாகத்தின் தரையில் படுத்துறங்கினார். அந்நகரத்து மேயர்க்குக் கிறிஸ்து கனவில் தோன்றி "என் அருமை மகன் தரையில் படுத்திருக்க நீ மட்டும் சுகமாகப் பட்டுமெத்தையில் உறங்குகிறாயோ? என் மகனைக் காப்பாற்று" என்று கூற அவர் இஞ்ஞாசியாரைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க இடம் ஒதுக்கினார்.

25. கப்பலில் இருந்தவர்களின் தவறான தீயபழக்கங்களைக் கடிந்துக்கொண்டர் இஞ்ஞாசியார். சீனங்கொண்ட கப்பல் அதிகாரிகள் இஞ்ஞாசியாரை யாரும் இல்லாத ஒரு தீவில் அவரை விட்டுவிட்டுச் செல்லத் தீர்மானித்தனர். ஆனால் இறையருளால் கப்பல் அதிசமான விதத்தில் சைப்ரஸ் தீவிற்குத் தீவிரமாகச் சென்றது.

26. எருசலேம் நோக்கிப் பயணித்த இஞ்ஞாசியாருக்கு வழியில் பல இன்னல்கள் ஏற்பட்டன. ஆனால் நம் ஆண்டவர் இயேசு இஞ்ஞாசியாருக்கு அடிக்கடிக் காட்சியளித்து இன்னல்களைக் களைந்து அவருக்கு ஆறுதலளித்தார்.

27. பல ஆபத்துக்கள் மத்தியிலும் இஞ்ஞாசியார் இயேசு பிறந்த, வாழ்ந்த, நடந்து போதித்த இடங்களைக் கண்டு பரவசமாடைந்தார். இயேசு விண்ணகம் சென்ற பொழுது அவர் விட்டுச் சென்ற பாதச்சுவடுகளைக் கண்டு அதனை முத்தமிட்டார்.

28. திருப்பயணிகளின் கூட்டத்தை விட்டுவிட்டுத் தன்னந்தனியாக ஒலிவ மலைக்குச் சென்றதால் திருபயணிகளின் காப்பாளனாகிய அர்மீனிய கிறிஸ்தவன் அவரைப் பிடித்துத் துன்புறுத்தி விடுதிக்குத் திரும்பிக் கூட்டிவந்தார். இந்த இக்கட்டான வேளையில் இயேசு தொடர்ந்து இஞ்ஞாசியாருக்குக் காட்சியளித்தார்.

29. ஸ்பெயின் தேசத்திற்குத் திரும்பிச் சென்றபொழுது கையில் காசில்லாமல் இஞ்ஞாசியார் பயணம் செய்ய விரும்பினார். கப்பலின் தலைவன் "பணமில்லாத புனிதனுக்குக் கப்பல் தேவையில்லையே. புனித யாக்கோபைப்போலக் கடலில் நடந்து பயணம் செய்யலாமே என்று கூறினான். ஆனாலும் கப்பல் உடைந்துச் சிதறியும் இஞ்ஞாசியார் பாதுகாப்பாக ஸ்பெயின் நாட்டை அடைந்தார்.

30. கோவிலின் வளாகங்களில் பிச்சைக்காரர்களுக்கு இஞ்ஞாசியார் தாராளமாகப் பிச்சைக் கொடுத்தார். அவர் கொடுத்த பணமெல்லாம் அவர் உண்டு பிழைக்க அவரே பிச்சையெடுத்த பணம். அதை அறிந்தப் பிச்சைக்காரர்கள் அவரை ஒரு புனிதர் என்று அழைத்தனர்.

31. ஸ்பெயன் நாட்டுச் சிப்பாய்கள் இஞ்ஞாசியாரின் ஆடைகளைக் களைந்துத் தெருவழியே எல்லோரும் பார்க்கும் வண்ணம் கூட்டிச் சென்றனர். இயேசு பிலாத்துலிடமிருந்து இழுத்துச் செல்லப்பட்ட அவமான நிகழ்ச்சியைப் போலத் தனது நிலமை இருந்ததை நினைத்து இஞ்ஞாசியார் பெரிதும் மகிழ்ந்தார்.

    32. தனது 33ம் வயதில் சிறுவர்களோடு அமர்ந்து இலத்தீன் மொழியின் இலக்கணத்தைக் கற்கத் தொடங்கினார். இவ்வாறு படித்தபின் ஆன்மாக்களுக்கு உதவலாம் என்பது அவரது கருத்து. இதைக் கலைத்துவிடச் சாத்தான் அவரைப் படிக்கவிடமால் பல்வேறு வகைகளில் தொல்லைக் கொடுத்தான்.

    பக்கம் 1 + 2 + 3 + 4 + 5


    இணைந்து செயல்படுவோம்.. இறையரசை அறிவிக்க...
    A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
    anbinmadal.org | 2002-2020 | Email ID: anbinmadal at gmail.com