1 எனவே, கிறிஸ்து தம் ஊனுடலில் துன்புற்றார். அப்பொழுது அவர் கொண்டிருந்த மனநிலையை நீங்களும் படைக்கலமாகப் பூண்டுகொள்ளுங்கள். ஊனுடலில் துன்புறுவோர் பாவத்தை விட்டு விடுகின்றனர்.
2 அவர்கள் தங்கள் ஊனுடல் வாழ்வின் எஞ்சிய காலமெல்லாம் மனிதருடைய தீயநாட்டங்களுக்கு இசையாமல் கடவுளின் திருவுளப்படி வாழ்கின்றார்கள்.
3 பிற இனத்தினர் செய்ய விரும்புவதையெல்லாம் நீங்கள் கடந்த காலத்தில் செய்து வந்தது போதும். அப்பொழுது நீங்கள் காமவெறி, இச்சை, மதுமயக்கம், களியாட்டம், குடிவெறி, வெறுப்புக்குரிய சிலைவழிபாடு ஆகியவற்றில் காலத்தைக் கழித்தீர்கள்.
4 இப்போதோ நீங்கள் அவர்களோடு சேர்ந்து அத்தகைய தாறுமாறான வழிகளில் நடப்பதில்லை. இதை அவர்கள் கண்டு வியப்படைகிறார்கள்: இதனால் உங்களைப் பழிக்கிறார்கள்.
5 ஆனால், உயிருள்ளோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பளிக்க ஆயத்தமாய் இருப்பவருக்கு அவர்கள் கணக்குக் கொடுப்பார்கள்.
6 இறந்தோர் ஊனுடலில் மனிதருக்குரிய தீர்ப்புப் பெறுவர்: ஆவியில் கடவுளுக்குரிய வாழ்வு பெறுவர். இதற்காகவே இறந்தோருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
7 எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது. எனவே, இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்.
8 எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும்.
9 முணுமுணுக்காமல் ஒருவருக்கொருவர் விருந்தோம்புங்கள்.
10 நீங்கள் கடவுளுடைய பல்வகை அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். எனவே உங்களுள் ஒவ்வொருவருக்கும் தாம் பெற்றுக் கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.
11 ஒருவர் பேசும் கொடையைப் பெற்றிருந்தால், அவரது பேச்சு கடவுளுடைய வார்த்தைகளைப் போல் இருக்கட்டும். ஒருவர் பணி செய்யும் கொடையைப் பெற்றிருந்தால், கடவுள் அருளும் ஆற்றலைப் பெற்றவர் போல் பணி செய்யட்டும்: இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார். அவருக்கே மாட்சியும் வல்லமையும் என்றென்றும் உரித்தாகுக! ஆமென்.
12 அன்புக்குரியவர்களே, துன்பத்தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்துவிட்டதென வியக்காதீர்கள்.
13 மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணை பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்.
14 கிறிஸ்துவின்பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள் மேல் தங்கும்.
15 ஆனால், உங்களுக்கு வரும் துன்பங்கள், நீங்கள் கொலைஞராகவோ, திருடராகவோ, தீமை செய்பவராகவோ, பிறர் காரியங்களில் தலையிடுபவராகவோ இருப்பதால் வந்தவையாய் இருக்கக்கூடாது.
16 மாறாக, நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால், அதற்காக வெட்கப்படலாகாது. அந்தப் பெயரின் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழுங்கள்.
17 ஏனெனில், தீர்ப்புக்கான காலம் கடவுளின் வீட்டாரிடத்தில் தொடங்கிவிட்டது. நம்மிடையே அது முதலில் தொடங்குகிறதென்றால், கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்?
18 “நேர்மையாளரே மீட்கப்படுவது அரிதென்றால், இறைப்பற்றில்லாதோரும், பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ! “
19 ஆகவே கடவுளின் திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள் நன்மை செய்வதில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக! அவர் நம்பத்தக்கவர்.