பேதுரு எழுதிய முதல் திருமுகம் 2

அதிகாரங்கள்



1 2 3 4 5

அதிகாரம் 2

1 ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை நீங்கள் சுவைத்திருந்தால், எல்லா வகையான தீமையையும் வஞ்சகத்தையும் வெளிவேடம், பொறாமை, அவதூறு ஆகிய யாவற்றையும் அகற்றுங்கள்:

2 புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாயிருங்கள்.

3 இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளருவீர்கள்.

4 உயிருள்ள கல்லாகிய அவரை அணுகுங்கள். மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உயர்மதிப்புள்ள கல் அதுவே.

5 நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக! இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக!

6 ஏனெனில், “இதோ, சீயோனில் நான் ஒரு மூலைக்கல் நாட்டுகிறேன். அது தேர்ந்தெடுக்கப்பட்ட, விலையுயர்ந்த மூலைக்கல். அதில் நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார் “ என்று மறைநூலில் காணக்கிடக்கிறது.

7 நம்பிக்கை கொண்ட உங்களுக்கு அது உயர்மதிப்புள்ளதாக விளங்கும். நம்பிக்கை இல்லாதவர்களைப் பொறுத்தமட்டில், “கட்டுவோர் புறக்கணித்த கல்லே முதன்மையான மூலைக்கல்லாயிற்று. “

8 மற்றும் அது, “இடறுதற் கல்லாகவும் தடுக்கி விழச்செய்யும் கற்பாறையாகவும் “ இருக்கும். அவர்கள் வார்த்தையை ஏற்காததால் தடுக்கி விழுகிறார்கள்: இதற்கென்றே அவர்கள் குறிக்கப்பட்டிருக்கிறார்கள்.

9 ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்: அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி.

10 முன்பு நீங்கள் ஒரு மக்களினமாய் இருக்கவில்லை: இப்பொழுது கடவுளுடைய மக்களாக இருக்கிறீர்கள். முன்பு இரக்கம் பெறாதவர்களாய் இருந்தீர்கள்: இப்பொழுதோ இரக்கம் பெற்றுள்ளீர்கள்.

11 அன்பிற்குரியவர்களே, நீங்கள் அன்னியரும் தற்காலக் குடிகளுமாய் இருப்பதால், ஆன்மாவை எதிர்த்துப் போர்புரியும் ஊனியல்பின் இச்சைகளை விட்டுவிடும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

12 பிற இனத்தினர் நடுவில் நன்னடத்தை உடையவராய் இருங்கள். அவர்கள் உங்களைத் தீயவர்கள் என்று பழித்துரைப்பினும், உங்கள் நற்செயல்களைக் கண்டு, கடவுள் சந்திக்க வரும் நாளில் அவரைப் போற்றிப் புகழ்வார்கள்.

13 அனைத்து மனித அமைப்புகளுக்கும் ஆண்டவரின் பொருட்டுப் பணிந்திருங்கள்:

14 அதிகாரம் கொண்டவர் என்னும் முறையில் அரசருக்கும், தீமை செய்கிறவர்களைத் தண்டிக்கவும் நன்மை செய்கிறவர்களைப் பாராட்டவும் அவரால் அனுப்பப்பெற்றவர்கள் என்னும் முறையில் ஆளுநர்களுக்கும் பணிந்திருங்கள்.

15 இவ்வாறு நீங்கள் நன்மையைச் செய்ய முன்வருவதன் மூலம், மதிகெட்ட அறிவிலிகளை வாயடைக்கச் செய்யவேண்டுமென்பதே கடவுளின் திருவுளம்.

16 நீங்கள் விடுதலை பெற்றுள்ளீர்கள்: விடுதலை என்னும் போர்வையில் தீமை செய்யாதீர்கள்: கடவுளுக்கே அடிமைகளாய் இருங்கள்.

17 எல்லாருக்கும் மதிப்புக் கொடுங்கள்: சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்துங்கள்: கடவுளுக்கு அஞ்சுங்கள்: அரசருக்கு மதிப்புக் கொடுங்கள்.

18 வீட்டு வேலையாளர்களே, உங்கள் தலைவர்களுக்கு முழுமரியாதையோடு பணிந்திருங்கள். நல்லவர்களுக்கும் கனிந்த உள்ளமுடையோருக்கும் மட்டுமல்ல, முரட்டுக் குணம் உள்ளவர்களுக்கும் பணிந்திருங்கள்.

19 ஒருவர் அநியாயமாகத் துயருறும்போது கடவுளை மனத்தில் கொண்டு அதைப் பொறுமையோடு ஏற்றுக் கொள்வாரானால் அதுவே அவருக்கு உகந்ததாகும்.

20 குற்றம் செய்ததற்காக நீங்கள் அடிக்கப்படும்போது பொறுமையோடு இருப்பதில் என்ன சிறப்பு? மாறாக, நன்மை செய்தும், அதற்காகப் பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும்.

21 கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்: இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்.

22 “வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை: வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. “

23 பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை: துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை: நியாயமாகத் தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார்.

24 சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்.

25 நீங்கள் வழிதவறி அலையும் ஆடுகளைப்போல இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com