திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம் 6

அதிகாரங்கள்



1 2 3 4 5 6

அதிகாரம் 6

1 அடிமைத்தளையில் இருப்போர் தங்கள் தலைவர்களை முழு மதிப்புக்கு உரியவர்களாகக் கருதவேண்டும். அப்பொழுது கடவுளின் பெயரும் போதனையும் பழிச்சொல்லுக்கு உள்ளாகாது.

2 நம்பிக்கை கொண்டோரைத் தலைவர்களாகக் கொண்டுள்ள அடிமைகள், அவர்களும் சகோதரர்கள்தானே என்று, மதிப்புக் கொடுக்காதிருத்தல் தவறு. மாறாகத் தங்கள் நற்செயலால் பயன்பெறுவோர் நம்பிக்கை கொண்டவர்களும் அன்பர்களுமாய் இருப்பதால், இன்னும் மிகுதியாக அவர்களுக்குப் பணி செய்யவேண்டும். இவற்றை நீ கற்பித்து ஊக்குவி.

3 மாற்றுக் கொள்கைகளைக் கற்பித்து, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நலம்தரும் வார்த்தைகளுக்கும், இறைப்பற்றுக்குரிய போதனைக்கும் ஒத்துப் போகாதவர்கள்,

4 தற்பெருமை கொண்டவர்கள்: ஒன்றும் தெரியாதவர்கள்: விவாதங்களிலும் சொற்போர்களிலும் பைத்தியம் கொண்டவர்கள். பொறாமை, போட்டி மனப்பான்மை, பழிச்சொல், பொல்லாத ஊகங்கள்,

5 ஓயாத மோதல்கள் முதலியன இவற்றிலிருந்தே உண்டாகின்றன. உண்மையை இழந்தவர்களிடமும் சீரழிந்த மனத்தைக் கொண்டவரிடமும் இவை காணப்படுகின்றன.

6 இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்: ஆனால் மனநிறைவுள்ளவர்களுக்கே தரும்.

7 உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது.

8 எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம்.

9 செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்: அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை.

10 பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள்.

11 கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடு.

12 விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக் கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய்.

13 அனைத்துக்கும் வாழ்வளிக்கும் கடவுளின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவின்முன் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

14 நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா.

15 உரிய காலத்தில் பேரின்பக் கடவுள் அவரைத் தோன்றச் செய்வார். கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர்.

16 அவர் ஒருவரே சாவை அறியாதவர்: அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்: அவரைக் கண்டவர் எவருமிலர்: காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென்.

17 இவ்வுலகில் செல்வர்களாய் இருப்பவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடு: அவர்கள் மேட்டிமை உணர்வு கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும் மட்டுமே எதிர்நோக்கி இருக்கவேண்டும்.

18 அவர்கள் நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக: தங்களுக்குள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிப்பார்களாக.

19 இவ்வாறு அவர்கள் தங்களது வருங்காலத்திற்கென்று நல்லதோர் அடித்தளமாக இச்செல்வத்தைச் சேமித்துவைப்பதால் உண்மையான வாழ்வை அடைய முடியும்.

20 திமொத்தேயு, உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பாதுகாப்பாயாக. உலகப் போக்கிலான வீண்பேச்சுகளிருந்தும், ஞானம் எனத் தவறாகப் பெயர் பெற்றிருக்கும் முரண்பாடான கருத்துகளிலிருந்தும் விலகியிரு.

21 அந்த ஞானத்தைப் பெற்றிருப்பதாகக் காட்டிக்கொண்ட சிலர் விசுவாசத்தை விட்டு விலகினார்கள். இறை அருள் உங்களோடிருப்பதாக!

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture 1timothy 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com