திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம் 1

அதிகாரங்கள்



1 2 3 4 5 6

அதிகாரம் 1

1 விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை திமொத்தேயுவுக்கு நம் மீட்பராம் கடவுளும், நம்மை எதிர்நோக்குடன் வாழச் செய்யும் கிறிஸ்து இட்ட கட்டளையின்படி கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனான பவுல் எழுதுவது:

2 தந்தையாம் கடவுளிடமிருந்தும், நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக!

3 நான் மாசிதோனியாவுக்குப் போகும்போது உன்னை எபேசில் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன். அங்கே சிலர் மாற்றுக் கொள்கைகளைக் கற்பிக்கின்றனர். அப்படிச் செய்யாதபடி அவர்களுக்குக் கட்டளையிடு.

4 அவர்கள் புனைகதைகளிலும், மூதாதையரின் முடிவில்லாப் பட்டியல்களிலும் கவனம் செலுத்துகின்றார்கள். இவை விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட கடவுளின் திட்டத்திற்காகக் கொண்ட பயன்படாமல், ஊக ஆய்களுக்கே இடம் தருகின்றன.

5 தூய்மையான உள்ளம், நல்ல மனச்சான்று, வெளிவேடமற்ற விசுவாசம் ஆகியவற்றினின்று அன்பைத் தூண்டுவதே நான் கொடுத்த கட்டளையின் நோக்கம்.

6 சிலர் இந்த நோக்கத்தைக் கைவிட்டு, வீண் பேச்சில் ஈடுபட்டுள்ளனர்.

7 அவர்கள் திருச்சட்ட போதகர்களாக இருக்க விரும்புகின்றனர். தாங்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதையும், எவற்றை வலியுறுத்துகின்றார்கள் என்பதையும் அறியாமல் இருக்கின்றார்கள்.

8 திருச்சட்டம் நல்லது என்பதை அறிந்திருக்கின்றோம். ஆனால், அதை முறைப்படி பயன்படுத்த வேண்டும்.

9 திருச்சட்டம் நேர்மையானவர்களுக்காக இயற்றப்படவில்லை. மாறாக ஒழுங்கு மீறுவோர், கட்டுப்பாட்டுக்கு அடங்காதோர், இறைப்பற்று இல்லாதோர், பாவிகள், தூய்மையற்றோர், உலகப்போக்கைப் பின்பற்றுவோர், தந்தையைக் கொல்வோர், தாயைக் கொல்வோர், பிற மனிதரைக் கொல்வோர்,

10 பரத்தைமையில் ஈடுபடுவோர், ஒருபால் புணர்ச்சி கொள்வோர், ஆள்களைக் கடத்தி விற்போர், பொய்யர், பொய்யாணையிடுவோர், மற்றும் நலம் தரும் போதனையை எதிர்ப்போர் ஆகியோருக்காகவே திருச்சட்டம் இயற்றப்பட்டது.

11 இந்நலந்தரும் போதனையே பேரின்பக் கடவுள் என்னிடம் ஒப்பவித்திருக்கிற அவரது சீர்மிகு நற்செய்தி.

12 எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன். ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார்.

13 முன்னர் நான் அவரை பழித்துரைத்தேன்: துன்புறுத்தினேன்: இழிவுபடுத்தினேன். ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால், அவர் எனக்கு இரங்கினார்.

14 இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது.

15 “பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்”. - இக்கூற்று உண்மையானது: எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. - அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான்.

16 ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார். நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு நான் முன்மாதிரியாய் விளங்கவேண்டும் என்பதற்காக முதன்முதலில் என்னிடம் தம் முழுப் பொறுமையைக் காட்டினார்.

17 அழிவில்லாத, கண்ணுக்குப் புலப்படாத, எக்காலத்துக்கும் அரசராயிருக்கின்ற ஒரே கடவுளுக்கு என்றென்றும் மாண்பும் மாட்சியும் உரித்தாகுக! ஆமென்.

18 என் பிள்ளையாகிய திமொத்தேயுவே, உன்னைப் பற்றி முன்னர் சொல்லப்பட்ட இறைவாக்குகளுக்கு ஏற்ப, நான் உனக்கு இடும் கட்டளை இதுவே:

19 அந்த இறைவாக்குகளைத் துணையாகக் கொண்டு நம்பிக்கையுடனும் நல்மனச்சான்றுடனும், நன்கு போரிடு. சிலர் இம்மனச்சான்றை உதறித் தள்ளிவிட்டதால் விசுவாசம் என்னும் கப்பல் உடைந்து போகச் செய்தனர்.

20 அத்தகையோருள் இமனேயும், அலக்சாந்தரும் அடங்குவர். அவர்களைச் சாத்தானிடம் ஒப்புவித்து விட்டேன். இனியும் அவர்கள் கடவுளைப் பழித்துரைக்காதிருக்கக் கற்றுக் கொள்ளுமாறு இவ்வாறு செய்தேன்.

20 அத்தகையோருள் இமனேயும், அலக்சாந்தரும் அடங்குவர். அவர்களைச் சாத்தானிடம் ஒப்புவித்து விட்டேன். இனியும் அவர்கள் கடவுளைப் பழித்துரைக்காதிருக்கக் கற்றுக் கொள்ளுமாறு இவ்வாறு செய்தேன்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture 1timothy 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com