1 சகோதர சகோதரிகளே! இவை நடக்கும் காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை.
2 ஏனெனில் திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.
3 “எங்கும் அமைதி, ஆபத்து இல்லை” என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவதுபோல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்: யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது.
4 ஆனால், அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல: ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது.
5 நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்: பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல.
6 ஆகவே மற்றவர்களைப்போல் நாமும் உறங்கலாகாது: விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.
7 உறங்குபவர் இரவில்தான் உறங்குவர்: குடிவெறியர் இரவில்தான் குடிபோதையில் இருப்பர்.
8 ஆனால் பகலைச் சார்ந்த நாம் அறிவுத்தெளிவோடு இருப்போம். நம்பிக்கையையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்புபெறுவோம் என்னும் எதிர்நோக்கைத் தலைச்சீராவாகவும் அணிந்துகொள்வோம்.
9 ஏனெனில் கடவுள் நம்மைத் தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார்.
10 நாம் இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும்வண்ணம் அவர் நம்பொருட்டு இறந்தார்.
11 ஆகவே நீங்கள் இப்பொழுது செய்து வருவது போல, ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்: ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்.
12 சகோதர சகோதரிகளே! உங்களிடையே உழைத்து, ஆண்டவர் பெயரால் உங்களை வழிநடத்தி, உங்களுக்கு அறிவு புகட்டுவோரை மதித்து நடக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
13 அவர்கள் பணியின்பொருட்டு, அவர்களை உயர்வாகவும் அன்புடனும் கருதுங்கள். உங்களிடையே அமைதி நிலவட்டும்.
14 அன்பர்களே! நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே: சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள்: மனத்தளர்ச்சியுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்: வலுவற்றோர்க்கு உதவுங்கள்: எல்லாரோடும் பொறுமையாயிருங்கள்.
15 எவரும் தீமைக்குப் பதில் தீமை செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமன்றி, எல்லாருக்கும், எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள்.
16 எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.
17 இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.
18 எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.
19 தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம்.
20 இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம்.
21 அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள்.
22 எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்.
23 அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழமையாகக் காப்பாராக!
24 உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார்.
25 சகோதர சகோதரிகளே! எங்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள்.
26 தூய முத்தம் கொடுத்துச் சகோதரர் சகோதரிகள் எல்லாரையும் வாழ்த்துங்கள்.
27 அவர்கள் எல்லாருக்கும் இத்திருமுகத்தை வாசித்துக்காட்ட வேண்டுமென்று ஆண்டவர் பெயரால் ஆணையிடுகிறேன்.
28 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக!