தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் - 3

அதிகாரங்கள்



1 2 3 4 5

அதிகாரம் 3

1 ஆகவே, இந்தப் பிரிவை எங்களால் தாங்க முடியாமல் போனதால், நாங்கள் ஏதென்சு நகரில் தனிமையாக இருக்க முடிவு செய்தோம்.

2 நம் சகோதரரும், கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் கடவுளின் உடன் உழைப்பாளருமாகிய திமொத்தேயுவை உங்களிடம் அனுப்பினோம்.

3 நீங்கள் படும் துன்பங்களால் எவரும் மனம் தளர்ந்து போகாதவாறு, உங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தி உங்களை ஊக்குவிக்க அவரை அனுப்பினோம். துன்பங்கள் வந்தே தீரும் என்பது உங்களுக்குத் தெரியும்.

4 நாம் துன்பப்படத்தான் வேண்டும் என்று நாங்கள் உங்களோடு இருந்தபொழுதே உங்களுக்குச் சொன்னோம். அவ்வாறே நடந்திருக்கிறது: இதுவும் உங்களுக்குத் தெரியும்.

5 ஆகவே, நமது பிரிவைத் தாங்க முடியாமல் உங்கள் நம்பிக்கையைப் பற்றி அறிந்துகொள்ள திமொத்தேயுவை அனுப்பினேன். ஏனெனில் சோதிப்பவன் உங்களைச் சோதனைக்குட்படுத்தி விட்டானோ என்றும் அதனால் எங்கள் உழைப்பு வீணாகி விட்டதோ என்றும் அஞ்சினேன்.

6 ஆனால் இப்பொழுது திமொத்தேயு உங்களிடமிருந்து திரும்பி எங்களிடம் வந்துவிட்டார்: உங்களுடைய நம்பிக்கையையும் அன்பையும் குறித்து நல்ல செய்தி சொன்னார். நாங்கள் உங்களைக் காண ஏங்குவதுபோல நீங்களும் எங்களைக் காண விழைவதாகவும், எப்பொழுதும் எங்களை அன்போடு நினைவுகூறுவதாகவும் அறிவித்தார்.

7 ஆகையால், அன்பர்களே! எங்கள் இன்னல் இடுக்கண்கள் நடுவிலும் உங்களது நம்பிக்கையைக் கண்டு உங்களால் நாங்கள் ஆறுதல் அடைகிறோம்.

8 நீங்கள் ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருக்கிறீர்கள் என்று அறிந்ததும் எங்களுக்கு உயிர் வந்தது.

9 நம் கடவுள் முன்னிலையில் உங்களால் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அதற்காக உங்கள் பொருட்டு எத்தகைய நன்றியை அவருக்குக் கைம்மாறாகக் காட்ட இயலும்?

10 நாங்கள் உங்கள் முகத்தைக் காணவும், உங்கள் நம்பிக்கையில் குறைவாகவுள்ளவற்றை நிறைவாக்கவும், அல்லும் பகலும் மிகுந்த ஆர்வமுடன் மன்றாடுகிறோம்.

11 இப்பொழுது நம் தந்தையாம் கடவுளும், நம் ஆண்டவராம் இயேசுவும் உங்களிடம் வருவதற்கான வழியை எங்களுக்குக் காட்டுவார்களாக!

12 உங்கள் மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக!

13 இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com