கொலோசையருக்கு எழுதிய திருமுகம் - 2

அதிகாரங்கள்



1 2 3 4

அதிகாரம் 2

1 உங்களுக்காகவும் இலவோதிக்கேயா நகர மக்களுக்காகவும் என்னை நேரில் பார்த்திராத மற்றனைவருக்காகவும் நான் மிகவும் வருந்தி உழைக்கிறேன். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.

2 என் உழைப்பால் உள்ளங்கள் யாவும் ஊக்கமடைந்து அனைவரும் அன்பினால் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும்: அந்த அறிவுத்திறனால் உறுதியான நம்பிக்கையை அவர்கள் நிறைவாகப் பெறவேண்டும். இதுவே என் விருப்பம்.

3 ஞானமும் அறிவுமாகிய செல்வங்கள் அனைத்தும் கிறிஸ்துவில் மறைந்துள்ளன.

4 திறமையாக வாதாடி எவரும் உங்களை ஏமாற்றிவிடக்கூடாதென்றே நான் இதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

5 உடலால் உங்களோடு இல்லாவிட்டாலும் நான் உள்ளத்தில் உங்களுடன் இருக்கிறேன். உங்களிடையேயுள்ள ஒழுங்கு முறையையும் உறுதியான நம்பிக்கையையும் கண்டு நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

6 கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டீர்கள். அவரோடு இணைந்து வாழுங்கள்.

7 அவரில் வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். நன்ற மிக்கவர்களாய்த் திகழுங்கள்.

8 போலி மெய்யியலாலும் வீணான ஏமாற்றுப் பேச்சாலும் உங்களை யாரும் கவர்ந்துகொள்ள விடாதீர்கள். அவை கிறிஸ்துவை அல்ல, மனித மரபுகளையும் உலகின் பஞ்சபூதங்களையும் சார்ந்தவை. அவற்றைக் குறித்துக் கவனமாயிருங்கள்.

9 இறைத் தன்மையின் முழுநிறைவும் உடலுருகில் கிறிஸ்துவுக்குள் குடிகொண்டிருக்கிறது.

10 அவரோடு இணைந்திருப்பதால் நீங்களும் நிறைவு பெறுகிறீர்கள். ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், அனைவரும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர்.

11 நீங்கள் மனிதக் கையால் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் அல்ல: கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் அவர் வழியாய் விருத்தசேதனம் செய்யப்பட்டு ஊனியல்பைக் களைந்துள்ளீர்கள்.

12 நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள்.

13 உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார். நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார்.

14 நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார்.

15 தம் சிலுவையினால் கிடைத்த வெற்றியால் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகியோரின் படைக்கலன்களைக் கிறிஸ்து பிடுங்கிக்கொண்டு அவர்களை இகழ்ச்சிக்குள்ளாக்குமாறு ஊர்வலமாக இழுத்துச் சென்றார்.

16 எனவே உண்பது, குடிப்பது, மற்றும் திருவிழா, அமாவாசை, ஓய்வு நாள் கொண்டாடுவது ஆகியவற்றைக் குறித்து எவரும் உங்களைக் குறைகூற வேண்டியதில்லை.

17 இவை எல்லாம் வர இருந்தவற்றின் வெறும் நிழலே: கிறிஸ்துவே உண்மை.

18 போலித் தாழ்மையையும் வான தூதர்களை வழிபடுவதையும் விரும்புகின்ற மக்கள் உங்களுக்கு எதிராகத் தீர்ப்பளிக்க இடம்கொடாதீர்கள். அவர்கள் தாங்கள் கண்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு உலகப் போக்கிலான சிந்தனையால் வீண் இறுமாப்புக் கொள்கிறார்கள்.

19 அவர்கள் தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்து கொள்ளவில்லை. அவரால்தான் முழு உடலும் தசைநார்களாலும் மூட்டுகளாலும் இறுக்கிப் பிணைக்கப்பட்டு ஊட்டம் பெற்றுக் கடவுளின் விருப்பத்திற்கேற்ப வளருகிறது.

20 கிறிஸ்துவோடு இறந்து நீங்கள் உலகின் பஞ்சபூதங்களிலிருந்து விடுவிக்கப்பட்டீர்கள் அல்லவா!

21 இன்னும் ஏன் “தொடாதே”, “சுவைக்காதே”, “தீண்டாதே” எனச் சொல்லும் உலகப்போக்கிலான விதிமுறைக்குட்பட்டவர்கள் போல் வாழ்கிறீர்கள்?

22 பயன்படுத்தும்போது அழிந்துபோகும் பொருள்கள் பற்றியவை அவ்விதிகள். அவை மனிதர் உருவாக்கின் கட்டளைகளும் போதனைகளுமே.

23 மனிதர் தாங்களாகவே வகுத்துக் கொண்ட வழிபாடுகள், போலித் தாழ்மை, உடல் ஒறுத்தல் ஆகிய போதனைகள் ஞானமுள்ளவைபோல் தோன்றுகின்றன. ஆனால் அவை இச்சையைத் தணிப்பதற்குப் பயன்படா.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com