கொலோசையருக்கு எழுதிய திருமுகம் - 1

அதிகாரங்கள்



1 2 3 4

அதிகாரம் 1

1 கிறிஸ்துவோடு இணைந்து நம்பிக்கை கொண்டவர்களாகிய வாழும் நகர இறை மக்களுக்குக் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாயிருக்கும் பவுலும் சகோதரர் திமொத்தேயுவும் எழுதுவது:

2 நம் தந்தையாம் கடவுளிடமிருந்து உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

3 உங்களுக்காக நாங்கள் வேண்டும் பொழுதெல்லாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்.

4 கிறிஸ்து இயேசுவின்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் செலுத்தும் அன்பு பற்றியும் நாங்கள் கேள்வியுற்றோம்.

5 இவை இரண்டும் விண்ணகத்தில் உங்களுக்கென வைக்கப்பட்டிருக்கும் நன்மைகளை எதிர்நோக்குவதால் விளைந்தவை. நீங்கள் முன்பு கேட்ட உண்மையின் நற்செய்தி வழியாக அந்த எதிர்நோக்கு பற்றி அறிந்து கொண்டீர்கள்.

6 உலகம் முழுவதும் பரவிப் பயனளித்துவரும் அந்நற்செய்தி உங்களை வந்தடைந்தது. கடவுளின் அருளைப்பற்றிக் கேட்டறிந்து அதன் உண்மையை நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள். அந்நாள் முதல் உங்களிடையே அது பெருகிப் பயனளித்து வருகிறது.

7 எம் அன்பார்ந்த உடன் ஊழியர் எப்பப்பிராவிடமிருந்து அதை நீங்கள் கற்றுக் கொண்டீர்கள். உங்களுக்காக உழைக்கும் அவர் கிறிஸ்துவின் உண்மையான திருத்தொண்டர்.

8 தூய ஆவி உங்களுக்கு அருளிய அன்பைக் குறித்து அவர் தாம் எங்களிடம் எடுத்துரைத்தார்.

9 எனவே நாங்கள் இச்செய்தியைக் கேள்விப்பட்ட நாள்முதல் உங்களுக்காகத் தவறாமல் இறைவனிடம் வேண்டி இவ்வாறு அவரிடம் கேட்டுக்கொள்கிறோம்: நீங்கள் முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் பெற்றுக் கடவுளின் திருவுளத்தைப்பற்றிய அறிவை நிறைவாக அடையவேண்டும்.

10 நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையர்வளாய் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் பயன்தரும் நற்செயல்கள் அனைத்தும் செய்து கடவுளைப்பற்றிய அறிவில் வளரவேண்டும்.

11 நீங்கள் முழு மனஉறுதியோடும் பொறுமையோடும் இருக்குமாறு தம் மாட்சிமிகு ஆற்றலுக்கேற்பத் தம் வல்லமையால் அவர் உங்களுக்கு வலுவூட்ட வேண்டும். மகிழ்ச்சியோடு,

12 தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்குபெற உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கியுள்ளார்.

13 அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார்.

14 அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம்.

15 அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்: படைப்பனைத்திலும் தலைப்பேறு.

16 ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.

17 அனைத்துக்கும் முந்தியர் அவரே: அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன.

18 திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார்.

19 தம் முழுநிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார்.

20 சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

21 முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய் இருந்தீர்கள்: அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்ச் தீச்செயல்கள் புரிந்து வந்தீர்கள்.

22 இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக் கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.

23 நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில் உறுதியாக நிலைத்திருங்கள். உலகெங்கும் படைப்பனைத்துக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட்டுள்ளது. பவுலாகிய நான் இந்நற்செய்தியை அறிவிக்கும் திருத்தொண்டன் ஆனேன்.

24 இப்பொழுது, உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன்.

25 என்மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன்.

26 நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

27 மக்களினங்களிடையே அது அளவற்ற மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார்.

28 கிறிஸ்துவைப்பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சிநிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம்.

29 இதற்காகவே வல்லமையோடு என்னுள் செயல்படும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப வருந்தி பாடுபட்டு உழைக்கிறேன்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com