பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் - 2

அதிகாரங்கள்



1 2 3 4

அதிகாரம் 2

1 எனவே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா?

2 அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்.

3 கட்சிமனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.

4 நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.

5 கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!

6 கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.

7 ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,

8 சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

9 எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

10 ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்:

11 தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக”இயேசு கிறிஸ்து ஆண்டவர்” என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

12 என் அன்பர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்படிந்து வருகிறீர்கள்: நான் உங்களிடம் வந்தபோது மட்டுமல்ல, அதைவிட அதிகமாக உங்களோடு இல்லாத இப்பொழுதும் கீழ்ப்படிந்து வருகிறீர்கள். எனவே நீங்கள் அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்.

13 ஏனெனில், கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார். அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.

14 முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள்.

15 அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமும் கபடுமற்றவர்களாய்க் கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்: உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்.

16 கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையும் வகையில், வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பது அதனால் தெளிவாகும்.

17 நம்பிக்கையால் நீங்கள் படைக்கும் பலியில் நான் என் இரத்தத்தையே பலிப் பொருளாக வார்க்கவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே. அம்மகிழ்ச்சியை நான் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன்.

18 அதுபோலவே நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள். உங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

19 ஆண்டவர் இயேசு அருள்கூர்ந்தால், திமொத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்ப இயலும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு உங்களைப்பற்றிய செய்திகளை அறிந்து நானும் உளமகிழ்வேன்.

20 என் உளப்பாங்கிற்கு ஏற்ப, உங்கள்மீது உண்மையான கவலை கொள்வதற்கு அவரைத்தவிர வேறொருவரும் என்னிடமில்லை.

21 எல்லாரும் தம்மைச் சார்ந்தவற்றைத் தேடுகிறார்களே தவிர, இயேசு கிறிஸ்துவைச் சார்ந்தவற்றைத் தேடுவதில்லை.

22 ஆனால் திமொத்தேயுவின் தகைமை உங்களுக்குத் தெரியும். தந்தையோடு சேர்ந்து மகன் பணியாற்றுவது போல் என்னோடு சேர்ந்து அவர் நற்செய்திக்காகப் பணியாற்றியுள்ளார்.

23 என் நிலைமை எப்படி இருக்கும் எனத் தெரிந்தவுடன் அவரை உங்களிடம் அனுப்ப முடியும் என எதிர்பார்க்கிறேன்.

24 ஆண்டவர் அருள்கூர்ந்தால் நானே உங்களிடம் விரைவில் வருவேன் என உறுதியாக நம்புகிறேன்.

25 என் சகோதரரும் உடன் உழைப்பாளரும் உடன் போர் வீரருமான எப்பப்பிராதித்துவை என் தேவைகளில் எனக்குத் துணை செய்யும்படி நீங்கள் அனுப்பி வைத்தீர்கள். அவரை இப்பொழுது உங்களிடம் திரும்ப அனுப்புவது தேவை எனக் கருதுகிறேன்.

26 ஏனெனில் அவர் உங்கள் எல்லாருக்காகவும் ஏக்கமாயிருக்கிறார். குறிப்பாக, அவர் உடல்நலம் குன்றியிருந்ததைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டதை அறிந்து மனங்கலங்கியுள்ளார்.

27 அவர் உடல்நலம் குன்றி, இறக்கும் நிலையில் இருந்தது உண்மையே. ஆனால் கடவுள் அவர்மேல் இரக்கம் கொண்டார். அவர்மேல் மட்டும் அல்ல, துயரத்துக்கு மேல் துயரம் எனக்கு நேராதபடி, என்மேலும் இரக்கம் கொண்டார்.

28 அவரை மிக விரைவில் அனுப்பிவைக்கிறேன். நீங்கள் அவரை மீண்டும் பார்ப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். நானும் துயரின்றி இருப்பேன்.

29 எனவே முழு மகிழ்ச்சியோடு ஆண்டவர் பெயரால் அவரை ஏற்றுக் கொள்ளுங்கள்: இத்தகையோருக்கு நீங்கள் மதிப்புக் கொடுக்க வேண்டும்.

30 ஏனெனில் நீங்கள் எனக்கு ஊழியம் புரிய இயலாமற்போன குறையை நீக்க அவர் தம் உயிரையே இழக்கத் துணிந்தார். கிறிஸ்துவுக்காக அவர் செயலாற்றிய காரணத்தினால்தான் இவ்வாறு அவர் சாகும் நிலைக்கு ஆளானார்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com