பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்1 2

அதிகாரங்கள்



1 2 3 4

அதிகாரம் 1

1 கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்கின்ற பிலிப்பி நகர இறைமக்கள், சபைக் கண்காணிப்பாளர்கள், திருத்தொண்டர்கள் அனைவருக்கும்,

2 கிறிஸ்து இயேசுவின் பணியாளர்களான பவுலும் திமொத்தேயுவும் எழுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும், ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

3 உங்களை நினைவுகூரும்பொழுதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்:

4 உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடிவருகிறேன்.

5 ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.

6 உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன்.

7 நீங்கள் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள். உங்கள் எல்லாரையும் பற்றி எனக்கு இத்தகைய எண்ணங்கள் எழுவது முறையே. ஏனெனில் நான் சிறையிலிருக்கும் இந்நேரத்திலும் நற்செய்திக்காக வழக்காடி அதை நிலைநாட்டிய காலத்திலும் நான் பெற்ற அருளில் உங்களுக்கும் பங்கு உண்டு.

8 கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன் என்பதற்குக் கடவுளே சாட்சி.

9 மேலும், நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து,

10 அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன்.

11 கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன்.

12 சகோதர சகோதரிகளே, எனக்கு நேர்ந்தவையெல்லாம் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவாயின. இதை நீங்கள் அறிய வேண்டுமென விரும்புகிறேன்.

13 ஏனெனில் கிறிஸ்துவுக்காகவே நான் சிறைப்பட்டுள்ளேன் என்பது ஆளுநர் மாளிகைக் காவற்படையினர் அனைவருக்கும் மற்ற யாவருக்குமே தெளிவாயிற்று.

14 என் சிறைவாழ்வினால் சகோதரர் சகோதரிகளுள் பெரும்பாலோர் ஆண்டவரை உறுதியாக நம்பிக் கடவுள் வார்த்தையை அச்சமின்றி எடுத்துரைக்க மேலும் துணிவு பெற்றிருக்கிறார்கள்.

15 சிலர் பொறாமையும் போட்டி மனப்பான்மையும் கொண்டு கிறிஸ்துவை அறிவிக்கின்றனர்: வேறுசிலர் நன்மனத்தோடு அறிவிக்கின்றனர்.

16 இவர்களைத் தூண்டுவது அன்பே. நற்செய்திக்காகக் குரல்கொடுக்கவே நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன் என இவர்கள் அறிவார்கள்.

17 மற்றவர்களோ கட்சி மனப்பான்மையால் தூண்டப்பட்டுக் கிறிஸ்துவை அறிவிக்கின்றனர். அவர்களது நோக்கம் தூய்மையானது அல்ல: அவர்கள் என் சிறைவாழ்வின் துன்பத்தை மிகுதியாக்கவே நினைக்கின்றனர்.

18 அதனாலென்ன? அவர்களது நோக்கம் போலியாக அல்லது உண்மையாக இருக்கலாம். எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆம், இனியும் மகிழ்ச்சியடைவேன்.

19 இவ்வாறு உங்கள் மன்றாட்டும் இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் துணையும் என்விடுதலைக்கு வழிவகுக்கும் என நான் அறிவேன்.

20 என்ன நேர்ந்தாலும் வெட்கமுற மாட்டேன். இன்றும் என்றும், வாழ்விலும் சாவிலும் முழுத்துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப் படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே என் எதிர்நோக்கு.

21 ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே: நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே.

22 எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்துகொள்வதென எனக்குத் தெரியவில்லை.

23 இந்த இரண்டுக்குமிடையே ஒரு இழுபறி நிலையில் உள்ளேன். உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம். - இதுவே மிகச் சிறந்தது.-

24 ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம். - இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது.

25 நான் உங்களோடிருப்பதால் நீங்கள் நம்பிக்கையில் வளர்ச்சி பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். எனவே உங்கள் அனைவரோடும் தொடர்ந்து தங்கியிருப்பேன் என உறுதியாக நம்புகிறேன்.

26 ஆகவே, நான் உங்களிடம் மீண்டும் வருவதால், கிறிஸ்து இயேசுவின் உறவில் வாழும் நீங்கள் என் பொருட்டு இன்னும் மிகுதியாகப் பெருமிதம் கொள்வீர்கள்.

27 ஒன்றைமட்டும் மறந்துவிடாதீர்கள்: கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுங்கள். நான் உங்களை வந்து பார்த்தாலும், நான் வரமுடியாத நிலையில் உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டாலும் நீங்கள் நற்செய்தியில் கொண்டுள்ள நம்பிக்கைக்காக ஒருமனத்தோடு போராடி, ஒரே உள்ளத்தோடு நிலைத்து நிற்கிறீர்கள் என்றும்,

28 எதிரிகள் முன் சற்றும் மருளாமல் இருக்கிறீர்கள் என்றும் நான் அறிய வேண்டும். இவ்வாறு நீங்கள் மருளாதிருப்பது அவர்களது அழிவுக்கும் உங்களது மீட்புக்கும் அறிகுறியாகும். இதுவும் கடவுளின் செயலே.

29 ஏனெனில் கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்வதற்கு மட்டும் அல்ல, அவருக்காகத் துன்பங்களை ஏற்பதற்கும் நீங்கள் அருள் பெற்றுள்ளீர்கள்.

30 நீங்கள் என் போராட்டத்தைக் கண்டீர்கள், இப்பொழுதும் அதுபற்றிக் கேள்விப்படுகிறீர்கள். உங்கள் போராட்டமும் அதுவே.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com