எபேசியருக்கு எழுதிய திருமுகம் - 4

அதிகாரங்கள்



1 2 3 4 5 6

அதிகாரம் 4

1 ஆதலால் ஆண்டவர் பொருட்டு கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்: நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்.

2 முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி,

3 அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.

4 நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே: தூய ஆவியும் ஒன்றே.

5 அவ்வாறே ஆண்டவர் ஒருவரே: நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே: திருமுழுக்கு ஒன்றே.

6 எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே: அவர் எல்லாருக்கும் மேலானவர்: எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்: எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

7 கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது.

8 ஆகையால்தான், “அவர் உயரே ஏறிச் சென்றார்: அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்: மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்” என்று மறைநூல் கூறுகிறது.

9 “ஏறிச் சென்றார்” என்பதனால் அதன் முன்பு மண்ணுலகின் கீழான பகுதிகளுக்கு அவர் இறங்கினார் என்று விளங்குகிறது அல்லவா?

10 கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர்.

11 அவரே சிலரைத் திருத்தூதராகவும் சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும் ஏற்படுத்தினார்.

12 திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார்.

13 அதனால் நாம் எல்லாரும் இறை மகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.

14 ஆகவே இனி நாம் குழந்தைகளைப்போல் இருக்கக் கூடாது. மனிதருடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் தவறுக்கு வழி நடத்தும் ஏமாற்று வழிகளையும் நம்பி, அவர்களுடைய போதனைகள் என்னும் காற்றால் அடித்துச்செல்லப்பட்டு அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படக்கூடாது.

15 மாறாக, அன்பின் அடிப்படையில் உண்மை பேசி, தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும்.

16 அவரால்தான் முழு உடலும் இசைவாய்ப் பொருந்தித் தன்னிடமுள்ள தசை நார்களால் இறுக்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உறுப்பும் தனக்கே குறிக்கப்பட்ட பணியைச் செய்வதால் உடல் வளர்ச்சி பெற்று, அன்பால் கட்டமைப்புப் பெற்று வளர்ச்சியடைகிறது.

17 ஆதலால் நான் ஆண்டவர் பெயரால் வற்புறுத்திச் சொல்வது இதுவே: பிற இனத்தாவர் வாழ்வதுபோல் இனி நீங்கள் வாழக்கூடாது. அவர்கள் தங்கள் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழ்கிறார்கள்.

18 அவர்களது மனம் இருளடைந்திருக்கிறது. அவர்களது பிடிவாத உள்ளத்தின் விளைவாய் ஏற்பட்ட அறியாமையின் காரணத்தால் அவர்கள் கடவுள் தரும் வாழ்வுக்குப் புறம்பானவர்களாக இருக்கிறார்கள்.

19 அவர்கள் உள்ளம் மரத்துப்போய்ப் பேராசை கொண்டு, ஒழுக்கக் கேடான செயல்களில் எல்லாம் ஈடுபட்டுத் தங்களைக் காமவெறிக்கும் உட்படுத்தினார்கள்.

20 ஆனால் நீங்கள் கிறிஸ்துவைப் பற்றிக் கற்றறிந்தது இதுவல்ல.

21 உண்மையில் நீங்கள் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கற்றறிந்ததும் அவரிடமுள்ள உண்மைக்கேற்பவே இருந்தது.

22 எனவே, உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள்.

23 உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும்.

24 கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்.

25 ஆகவே பொய்யை விலக்கி ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள். ஏனெனில் நாம் யாவரும் ஓருடலில் உறுப்புகளாய் இருக்கிறோம்.

26 சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்: பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்.

27 அலகைக்கு இடம் கொடாதீர்கள்.

28 திருடர் இனித் திருடாமல் இருக்கட்டும். மாறாக, தேவையில் உழல்வோருக்குப் பகிர்ந்து கொடுக்கத் தங்களிடம் பொருள் இருக்கும் வகையில், தாங்களே தங்கள் கைகளால் நேர்மையோடு பாடுபட்டு உழைக்கட்டும்.

29 கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. கேட்போர் பயனடையும்படி, தேவைக்கு ஏற்றவாறு, அருள் வளர்ச்சிக்கேற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்.

30 கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்.

31 மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள்.

32 ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்: கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com