1 இதன் காரணமாக, பிற இனத்தவராகிய உங்களுக்காகக் கிறிஸ்து இயேசுவின் பொருட்டுப் பவுலாகிய நான் கைதியாக இருக்கிறேன்.
2 உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
3 அந்த மறைபொருள் எனக்கு இறை வெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அதைப்பற்றி நான் ஏற்கெனவே சுருக்கமாக உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
4 அதை நீங்கள் வாசிக்கும்போது, கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நான் புரிந்து கொண்டேன் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.
5 அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
6 நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.
7 கடவுள் வல்லமையோடு என்னுள் செயல்பட்டு எனக்கு அளித்த அவரது அருள்கொடைக்கு ஏற்ப, அந்த நற்செய்தியின் தொண்டன் ஆனேன்.
8 கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப்பற்றிய நற்செய்தியை பிற இனத்தாருக்கு அறிவிக்கவும்,
9 எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்குள் ஊழி காலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென யாவருக்கும் தெளிவுபடுத்தவும், இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையவனாகிய எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது.
10 அதன்மூலம் பலவகையில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான்வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது.
11 இவ்வாறு கடவுள் ஊழி காலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார்.
12 கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது.
13 ஆகவே உங்கள் பொருட்டு நான் படும் துன்பங்களைக் கண்டு நீங்கள் மனந்தளர்ந்து போகாதபடி உங்களை வேண்டுகிறேன். அத்துன்பங்களே உங்களுக்குப் பெருமையாக அமையும்.
14 இதன் காரணமாக, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும்
15 உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன்.
16 அவருடைய அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூய ஆவி வழியாகத் தந்தருளுவாராக!
17 நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!
18 இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!
19 அதன் மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக!
20 நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கே
21 திருச்சபையில் கிறிஸ்து இயேசு வழியாக தலைமுறை தலைமுறையாக என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.