மாற்கு நற்செய்தி அதிகாரம் - 8

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

அதிகாரம் - 8

1 அந்நாள்களில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம்,

2 “நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவுகொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை.

3 நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்” என்று கூறினார்.

4 அதற்கு அவருடைய சீடர்கள், “இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?” என்று கேட்டார்கள்.

5 அப்போது அவர் அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள்”ஏழு” என்றார்கள்.

6 தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்: பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள்.

7 சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன. அவற்றின்மீது அவர் ஆசிகூறிப் பரிமாறச் சொன்னார்.

8 அவர்கள் வயிறார உண்டார்கள். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள்.

9 அங்கு இருந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேர். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்:

10 உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.

11 பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்: வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர்.

12 அவர் பெருமூச்சுவிட்டு, “இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

13 அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறு கரைக்குச் சென்றார்.

14 சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது.

15 அப்பொழுது இயேசு, “பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

16 அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

17 இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, “நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக் கொள்ளுகிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று?

18 கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா?

19 ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்த போது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?” என்று அவர் கேட்க, அவர்கள்”பன்னிரண்டு” என்றார்கள்.

20 “ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?” என்று கேட்க, அவர்கள், “ஏழு” என்றார்கள்.

21 மேலும் அவர் அவர்களை நோக்கி, “இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கேட்டார்.

22 அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர்.

23 அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, “ஏதாவது பார்க்கிறீரா? “ என்று கேட்டார்.

24 அவர் நிமிர்ந்து பார்த்து, “மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்” என்று சொன்னார்.

25 இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.

26 இயேசு அவரிடம், “ஊரில் நுழைய வேண்டாம்” என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

27 இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.

28 அதற்கு அவர்கள் அவரிடம், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள்.

29 “ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா” என்று உரைத்தார்.

30 தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

31 “மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.

32 இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சென்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார்.

33 ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று கடிந்துகொண்டார்.

34 பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, “ என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.

35 ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்.

36 ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?

37 அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

38 பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப்படுவார்” என்றார்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com