1 அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர்.
2 அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது:
3 “இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.
4 அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.
5 வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன.
6 ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின.
7 மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை.
8 ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.
9 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும். ”
10 அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்து கொண்டு, உவமைகளைப்பற்றி அவரிடம் கேட்டார்கள்.
11 அதற்கு இயேசு அவர்களிடம், “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது: புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன.
12 எனவே அவர்கள் ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்” என்று கூறினார்.
13 மேலும் அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்?
14 விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார்.
15 வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான்.
16 பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள்.
17 ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்: சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள்.
18 முட்செடிகளுக்கு இடையில் விதைக்கபட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள்
19 இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.
20 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.
21 இயேசு அவர்களிடம், “விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா?
22 வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை.
23 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.
24 மேலும் அவர், “நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்: இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும்.
25 ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்: இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” என்று அவர்களிடம் கூறினார்.
26 தொடர்ந்து இயேசு, “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்:
27 நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது.
28 முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது.
29 பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்: ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று கூறினார்.
30 மேலும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்?
31 அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது.
32 அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள்விடும்” என்று கூறினார்.
33 அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார்.
34 உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.
35 அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, “அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்” என்றார்.
36 அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.
37 அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது.
38 அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், “போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
39 அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, “இரையாதே, அமைதியாயிரு” என்றார். காற்று அடங்கியது: மிகுந்த அமைதி உண்டாயிற்று.
40 பின் அவர் அவர்களை நோக்கி, “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார்.
41 அவர்கள் பேரச்சம் கொண்டு, “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.