கிறிஸ்துவின் குடில் - திருத்தந்தை பிரான்சிஸ் மடல்

தொகுத்து வழங்கியவர் - அருள்தந்தை சேவியர் ராஜன் சே.ச.

Thanks to vaticannews.va

டிசம்பர் மாதம் முதல் தேதி நம் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் க்ரெச்சோ எனும் நகருக்குச்சென்று புனித பிரான்சிஸ் அசிசியார் உலகின் முதல் கிறிஸ்துமஸ் குடில் அமைத்த இடத்தில் வெளியிட்ட Admirabile Signum  வியப்பூட்டும் அறிகுறி எனும் அப்போஸ்தொலிக்க மடலில் கூறியுள்ள கருத்துக்களை என் சொற்களில் கூறுகிறேன்.

கிறிஸ்துவின் பிறப்பைத் தியானிக்கும்போதெல்லாம் ஓர் ஆன்மீகப் பயணத்தைத் தொடங்க அழைப்புப் பெறுகிறோம் – ஏனென்றால், எல்லாமனிதரையும் சந்திக்கத் தாழ்ச்சியை அணிந்து வருகிறார் கடவுள். மனிதனாய் பிறந்த இறைவன் நம்மைத் தம்பக்கம் இழுக்கிறார் - நம்மில் ஒருவராக மாறி நாம் அவரில் ஒருவராய் மாறிவிட. நம்மேல் உள்ள அன்பு அவ்வளவு!

கிறிஸ்துமஸ் விழாவிற்கு முந்திய நாட்களில் கிறிஸ்து பிறப்புக் காட்சியைத் தயாரிக்கும் நம் குடும்ப வாழ்வில் ஒன்றாகிவிட்ட அழகிய பாரம்பரியத்தை – வீடுகளில் மட்டுமா, நாம் பணிசெய்யும் இடங்கள், பள்ளிகூடங்கள், மருத்துவ மனைகள், சிறைச்சாலைகள், முச்சந்திகளிளும்கூட நிலவும் பாரம்பரியத்தை – ஊக்கப்படுத்தவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

கிறிஸ்துமஸ் குடில் வைப்பதற்கு நமக்கு முதன்மை ஆதாரம் நற்செய்தியில் கூறப்படும் கிறிஸ்து பிறப்பு பற்றிய சில செய்திகளே. நற்செய்தியாளர் மிகச்சுருக்கமாகக் கூறுகிறார்: மரியா “தன் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே, பிள்ளையைத் துணிகளில் பொதிந்துத் தீவனத்தொட்டியில் கிடத்தினார்.” (லூக்.2:7). இயேசுவைத் தீவனதொட்டியில் கிடத்தியதால், கிறிஸ்து பிறப்பு இடம் ‘தீவனத்தொட்டி’ எனப்பொருள்படும் ப்ரெசேப்பியும் (Praesepium)  என லத்தீன் மொழியில் அழைக்கப்படுகிறது.

உலகில் வந்த இறைமகன் விலங்குகள் புசிக்கும் இடத்தில் கிடத்தப்படுகிறார். ‘நானே விண்ணிலிருந்து இறங்கி வந்த உணவு’ என்று கூறவிருப்பவருக்கு (யோவா 6:41) வைக்கோல்தான் முதல் படுக்கையாகிறது. திருச்சபைத் தந்தையர்களைப் போலவே, புனித அகுஸ்தீனும் இவ்வறிகுறியில் திளைத்துவிடுகிறார்: “மாட்டுத் தீவனத்தொட்டியில் கிடக்கும் அவர் நமக்கு உணவாகின்றார்” (ஞான உரை 189, 4). தீவனத்தொட்டியில் கிடக்கும் புல்லும் வைக்கோலும் மிருகங்களுக்குத் தீனி; அத்தீவனத்தொட்டியில் கிடக்கும் அவர் நமக்கு (நம் ஆன்மாவுக்கு) உணவு. இப்படி, இயேசுவின் வாழ்வில் வெளிப்படும் மறை உண்மைகளை இக்குடில் நம் வாழ்வுக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவருகின்றது.

நமக்கு மிகவும் அறிமுகமான கிறிஸ்து பிறப்புக் குடிலின் தொடக்கங்களுக்கு மனத்தால் மீண்டும் செல்வோம். இத்தாலியின் ரியேத்தி ஊர் அருகிலுள்ள க்ரெச்சோ (Greccio)  எனும் சிற்றூரை மனத்திரைக்குமுன் கொணர்வோம். புனித பிரான்சிஸ் அசிசியார் அங்கே நிற்கிறார் – அனேகமாக, ரோம் நகரிலிருந்து திரும்பி வரும் பயணமாக இருந்திருக்கும். மூன்றாம் ஒனோரியுஸ் எனும் பாப்பிறை 1223 நவம்பர் 29இல் பிரான்சிஸின் புதிய சபைக்கு அங்கீகாரம் கொடுத்திருந்தாரே. அதற்குமுன், புனித பூமிக்குப் பயணித்திருந்த இவருக்கு க்ரெச்சோ சூழ்நிலைப் பெத்லெகேமை நினவுபடுத்தியிருக்கும். அவர் ரோம் நகரின் மரியன்னைப் பேராலயத்தில் அந்நாட்களில் கண்டிருந்த இயேசு பிறப்பின் ஓவியமும் நினைவுக்கு வந்திருக்கலாம். அவ்வாலயத்தின் அருகில்தானே பெத்லெகேமில் இயேசு கிடத்தப்பட்ட தொட்டியின் சிறு பலகைத்துண்டுகள் அடங்கிய பெட்டி இருந்த ஜெபக்கூடமும் இருந்தது!

பிரான்சிஸ்கன் சபையாரின் வரலாற்று ஏடுகள் கூற்றின்படி: கிறிஸ்து பிறப்புத் தினத்துக்கு 15 நாட்களுக்கு முன்புப் புனித பிரான்சிஸ் ஜொவான்னி (= யோவான்) எனும் ஒருவரிடம் தன் எண்ணத்தை நிறைவேற்றச் சொல்லியிருந்தார்; அதாவது, பெத்லெகேமில் பிறந்த குழந்தையை உயிருள்ள நினைவாக்கிடவேண்டும்; முடிந்த அளவுக்கு, கண்ணால்காணும் காட்சியிலேயே அக்குழந்தை அநுபவித்த இன்னல் இடைஞ்சல்களை, தீவனத்தொட்டியில் கிடந்த இடத்தை, ஒரு காளையும் ஒரு கழுதையும் அங்கே நிற்பதை, வைக்கோல் நடுவில் துணியில் பொதிந்துக் கிடந்ததை உணரவேண்டும். அந்த ஜொவான்னியும் முழுமூச்சுடன் செயல்பட்டார். டிசம்பர் 25ஆம் தேதியும் வந்தது. பலபகுதிகளிலிருந்து பிரான்சிஸ் சபைச் சகோதரர்கள் வயலில் பணிசெய்யும் மக்களோடு க்ரெச்சோ வந்தார்கள். அவர்கள் கைகளில் பூக்கள், இருளைப்போக்க ஒளிவிளக்குகள். இதைப்பார்த்த பிரான்சிசுக்கு இன்ப அதிர்ச்சி. அங்கே வைக்கோல், மாடு, கழுதை என எல்லாம் இருந்தன; கிறிஸ்து பிறப்புக் காட்சியை அங்கே பார்த்த அனைவருக்கும் வியப்புத் தாளவில்லை. அங்குத்திருப்பலி நிறைவேற்றிய குருவும் இறைவன் மனிதப்பிறவி எடுப்பதற்கும் திருப்பலியில் வரும் நற்கருனைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை விளக்கி மறையுரை வழங்கினார். அங்கே சொரூபங்கள் இல்லை, அங்கிருந்த மக்களே கிறிஸ்து பிறப்புக் காட்சியை நடத்தி உணர்ச்சிவசப்பட்டார்கள்.

இப்படித்தான் தொடங்கியது கிறிஸ்துமஸ் குடில் பாரம்பரியம். அக்குடில் அருகே நிற்கும்போது பெத்லெகேமில் நடந்தது இங்கே நிகழ்கிறது என்ற ஓர் உணர்வு ஏற்படுகின்றது.

crib

Thanks to vaticannews.va

புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலிலே எழுதிய செலானோ நகரின் தோமாஸ் என்பவர் சொல்கிறார்: இந்தக்குடிலின் விழாச் சமயத்தில், அங்கிருந்த ஒருவர் குழந்தை இயேசுவே அத்தீவனத்தொட்டியில் கிடப்பதைக் கண்டாராம்! மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்?

இந்தக் குடில்தந்த அழைப்பை வைத்தே புனித பிரான்சிஸ் தன் வேதபோதக அலுவலைச் செய்தார். இந்தக்குடில் ஏன் நம் மனங்களைத் தொடுகின்றது? ஏனென்றால் அங்கே இறைவனின் கனிவுள்ள அன்பு வெளிப்படுகின்றது: உலகையே படைத்த இறைவன் தன்னையே மிகவும் தாழ்த்தி நம் சிறுமையை ஏற்கிறார். உயிரையே தரும் அவரின் பண்பு இன்னும் அதிகவியப்புக்கு நம்மை ஆளாக்குகிறது – மரியாவின் மைந்தன் எல்லா உயிரின் தொடக்கமும் தொடர்ச்சியுமாயிருக்கிறார் என்பதை உணரும்போது! இயேசுவைக் கொடுத்துள்ளதால், நாம் மனதில் குழம்பியிருக்கும்போதோ, செய்வதறியாதிருக்கும்போதோ, நம்மைத்தேடி வரும் ஒரு சகோதரரை, நம் அருகே என்றும் நிற்கும் ஓர் உண்மையான நண்பரை விண்ணகத்தந்தை நமக்குக் கொடுத்துள்ளார் – நமக்கு நம் பாவங்களை மன்னித்து அவற்றிலிருந்து விடுதலைக் கொடுப்பவரை. நாம் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும்போது பெத்லெகேமில் நடந்தவை நம் முன்னே வருகின்றன; உணர்ச்சிகளைக் கிளருகின்றன, நம் மனதைத் தொடுகின்றன. என்னே எளிமை, என்னே ஏழ்மை! தாழ்ச்சியை, ஏழ்மையை, தன்னல மறுப்பை ஏற்க இது நம்மைத் தூண்டுகிறது, பெத்லெகேமில் இருந்து சிலுவை வரை. நம் சகோதரர்களில் துன்புறுவோர்க்கு இரக்கம் காட்டி இயேசுவைப் பார்க்கவும் அவருக்குப் பணிவிடைச் செய்யவும் இக்குடில் அழைப்பு விடுக்கிறது. (பார்க்க மத். 25:31-46 இச்சிறியோரில் ஒருவருக்கு நீங்கள் பணிவிடைச் செய்தபோதெல்லாம் எனக்கே பணிவிடைச் செய்தீர்கள்.)

கிறிஸ்துமஸ் குடிலிலிருக்கும் ஒவ்வொன்றையும் உற்றுநோக்கினால், அவற்றின் உட்பொருளை ஆழமாக அறிய முடியும். இக்காட்சிக்குப் பின்புலமாக விண்மீன்கள் நிறைந்த வானம் – இருளும் நிசப்தமும் ஒரு சேரப் போர்த்தியவாறு. நம் மனதிலே எத்தனை முறை இரவின் இருளை உணர்ந்திருக்கிறோம்! எனினும், கடவுள் நம்மைக் கைவிடுவதில்லை. நான் யார், எங்கிருந்து வருகிறேன், ஏன் பிறந்தேன், அதுவும் ஒரு குறிப்பிட்டக் காலகட்டத்தில், யார்மீதுப் பாசம் வைத்துள்ளேன், ஏன் துன்புறுகிறேன், ஏன் இறக்கவேண்டும் – எனும் நம்மை உலுக்கும் இக்கேள்விகளுக்கு விடை தருவதற்கே கடவுள் மனிதனானார். அவர் நெருங்கிவர, இருள் விரட்டப்பட்டு ஒளி வந்துவிடும், “இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போருக்கு ஒளி” (லூக் 1:79)

வழக்கமாக, குடிலின் பின்னே இடிந்த வீடுகள் அல்லது இடிந்தப் பெருங்கட்டடங்கள் காணப்படும். ரோம் நகரில் சமாதானத்தின் கோயில் ஒன்று இருந்ததாம், ஒரு கன்னி ஒரு மகவைப் பெற்றேடுத்தால் அது இடிந்து விழும் என்று 13ஆம் நூற்றாண்டின் வராஜினே ஊரைச்சேர்ந்த சாமிநாதர் சபையின் யக்கொபுஸ் என்பவர் என்றோ இருந்துவந்த நம்பிக்கையை எழுதிவைத்துள்ளார். இதுதான் இடிந்த வீடுகளின் கதையோ என்னமோ! ஆனால், வீழ்ந்துள்ள மனிதக் குலத்தை அழிவு என்பது தப்பாமல் தாக்கிவிடும் என்பதை இது சுட்டிக்காட்டிக், கிழட்டுப் பருவத்திலிருக்கும் உலகுக்கு ஓர் ஆரோக்கியத்தைக் கொடுத்து, மீண்டும் கட்டி எழுப்பி, அது பிறந்தகாலத் துள்ளல் இளமைக்கே கொண்டு செல்கிறார் இப்போது பிறந்துள்ள பாலன் இயேசு என்று நமக்கு உரக்கக்கூறுகிறது!

குடிலின் பின்புலமாக மலைகள், அருவிகள், ஆட்டுமந்தை, இடையர்கள் இவர்களைப் பார்க்கிறோம். இறைவாக்கினர் சொன்னவாறே, மெசியாவின் வருகையால் அனைத்துப்படைப்புகளும் மகிழ்கின்றன என்பதை இவை காட்டும். வானதூதர்கள் வழிநடத்தும் விண்மீன் இவை எல்லாம் நாமும் குகைநோக்கிப் புறப்பட்டுப்போய் ஆண்டவரைத் துதிக்கவேண்டுமெனக் கட்டியம் கூறுகின்றன.

“வாருங்கள், நாம் பெத்லெகேமுக்குப்போய் ஆண்டவர் நமக்கு அறிவித்துள்ள இந்நிகழ்ச்சியைப் பார்ப்போம்’ என இடையர்கள் வானவர் தூதுரைத்ததும் (லூக் 2:15) தங்களுக்குள்ளே பேசிக்கொள்கிறார்கள். எத்தனையோ காரியங்களில் மூழ்கியிருக்கும் பிறமனிதரைப் போலல்லாமல், இவ்விடையர்கள் செல்கிறார்கள். வாழ்வில் அதிமிக முக்கியமானவோன்றை – மீட்பு, இரட்சணியம் எனும் பரிசை – முதன் முதலாகக் காண்போகிறார்கள். இறைவன் மனிதனானதை வரவேற்போர் தாழ்ச்சியும் ஏழ்மையும் கொண்டோர்தான் - குழந்தை இயேசு வடிவில் நம்மைத்தேடிவரும் கடவுளைச் சந்திப்பது, அன்பு, நன்றியுணர்வு, வியப்பு, இவற்றோடு பார்க்கச்செல்லும் இவ்விடையர்கள்தான். இயேசுவால்தான் கடவுள் தன் பிள்ளைகளை நேருக்குநேர் சந்திப்பது நடக்கிறது; நம் வேதம் பிறக்கின்றது; அதன் அழகும் மிளிர்கின்றது - கிறிஸ்து பிறப்புக் காட்சியில் இவை எல்லாம் பிரமிப்பூட்டும் வகையில் தெரிகின்றன.

இங்கே பிச்சைஎடுப்போரையும், உள்ளத்தின் சொத்துமதிப்பை உணர்ந்தோரையும் காட்சியில் வைப்பார்கள். அவர்களுக்கு எப்படி இடமில்லாமற் போகும், அவர் தேடிவந்ததே சிறப்பாக அவர்களைத்தானே! நம் மத்தியில் கடவுள் இருப்பதை முதலில் கண்டுபிடிப்போர் அவர்கள்தான்.

யார் அவரின் அன்பைப்பெறத் துடிக்கிறார்களோ, தம்மை நெருங்கிவர அவரை அழைக்கிறார்களோ, அவர்களுக்காகத்தான் மனித உரு எடுத்தார் என்பதை இக்குடில் நமக்கு நினைவுறுத்துகிறது. “கனிவும் மனத்தாழ்மையும் உடைய” (மத்11:29) இயேசு ஏழ்மையில் பிறந்தார், மிக எளிமையான வாழ்வு நடத்தினார் – நம் வாழ்வில் முக்கியமானவை எவை என்பதை உணர்த்துவதற்காக. இயேசு பிறப்புகாட்சியைப் புரிந்தோரைப் பணம், அது வாக்களிக்கும் சந்தோஷம், மனநிறைவு என்பவை ஏமாற்றமுடியாது. என்னிடம் ஒன்றுமே இல்லையே என ஏங்கி இருப்போருக்கு இயேசுவின் குடில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தும் – நம்பிக்கை, தன்மானம் என்பதைக் கொடுக்கும் கனிவின் புரட்சியை. மாடடைக் குடிலிலிருந்து இயேசு உரத்தகுரலில்லாத, ஆனால் மகா சக்திவாய்ந்த, ஒரு பாடம் புகட்டுகிறார், ஏழைகளோடு பகிர்ந்து வாழ்ந்து மனிதம் மிக்க, சகோதரத்துவம் மிக்க ஓர் உலகை, யாரையும் ஒதுக்காத, புறந்தள்ளாத ஓர் உலகைப் படைக்குமாறுப் போதனைச் செய்கிறார்.

அக்குடிலிலே வேறு ஆட்களையும் - நற்செய்தியில் வெளிப்படையாகக் கூறப்படாதவை - வைக்கும் வழக்கம் சிறியோருக்கும், ஏன் பெரியோருக்கும் உண்டு: இடையர் முதல் கொல்லர் வரை, ஆப்பம் சுடுவோர் முதல் பாடல் முழங்குவோர்வரை, நீர்க்குடத்துடன் வரும் பெண்கள் முதல் ஆடிப்பாடும் குழந்தைகள்வரை – நம் அன்றாட வாழ்வில் காணக்கூடிய அனைத்து மக்களுக்கும் அங்கே இடமுண்டு – சாதாரண வாழ்வை அசாதாரணமான வாழ்வாய் மாற்றும் ஆன்ம பரிசுத்தம் அனைவருக்குமானப் பொதுச்சொத்து எனக் குழந்தை இயேசு கற்பித்து விட்டதால்.

குகையுள்ளே பார்த்தால், மரியாவும், சூசையும் இருக்கிறார்கள். மரியா குழந்தை இயேசுவைப் பார்த்துத் தியானத்தில் ஆழ்ந்துள்ளார். அங்கு வருவோருக்கெல்லாம் அவ்வேசுவைக்காட்டுகின்றார் – கடவுள் அவர் இதயத்தைத் தட்டியபோது, முழுமையான கீழ்ப்படிதலோடு வானதூதரின் அறிவிப்பை ஏற்று “நான் ஆண்டவரின் அடிமை, உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று கூறினாரே! (லூக் 1:38) – இறை நம்பிக்கை மேலிட, அனைத்தையும் விட்டுவிட்டுக் கடவுள் திருவுளத்துக்கு நம்மைக் கையளிக்க அவர் பாடம் புகட்டுகின்றார். இத்தகைய அர்ப்பணிப்பால் அவரின் கற்பு காப்பாற்றப்பட்டு உன்னதக் கொடையாகின்றது. தன் மகன் தனக்கு மட்டும் உரியச் சொத்து எனக்கொள்ளாமல், அம்மகனின் சொல்லுக்கு அடிபணிந்து வாழ்ந்துகாட்ட (யோவா 2:5) நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

குழந்தையையும் அதன் தாயையும் காத்து நிற்கும் சூசையையும் அங்கே பார்க்கிறோம். பெரும்பாலும் ஒரு தடியைப் பிடித்திருப்பார் அல்லது விளக்கை ஏந்தியிருப்பார். அத்தெய்வீகக் குழந்தைக்கும் அதன் தாய் மரியாவுக்கும் அவர் பாதுகாப்பாக இருக்கிறார்; ஏரோது எனும் கொடுங்கோலனிடமிருந்து குழந்தையைக்காக்க ‘எகிப்துக்குப்போ’ எனக் கட்டளை வந்ததும் காலந்தாழ்த்தாமல் புறப்படுகிறார். (மத் 2:13-15). ஆபத்துகாலம் நீங்கியதும் அவருக்கு வந்த செய்திப்படியே, குடும்பத்தை நசரேத்துக்கு மீண்டும் கொணர்கிறார். அங்கேதான், அக்குழந்தைக்கு ஆசிரியராகவும் இருந்து, இளம் ஆண் சிங்கமாக உருவாவதைக் கண்டு மகிழ்கிறார். இயேசுவைப்பற்றியும், தன் மனைவி மரியா பற்றியும் உள்ள பேருண்மைகளை ஒரு நீதிமானாக மனதில் இருத்துகிறார். கடவுள் திருவுளத்துக்குத் தன்னை அர்ப்பணித்து அத்திருவுளத்தை வாழ்வாக்குகின்றார்.

நாம் பாலன் இயேசு சொரூபத்தைத் தீவனத்தொட்டியில் கிடத்தியவுடன் குடிலுக்கு ஓர் உயிர் வந்துவிடுகிறது. கடவுள் ஒரு குழந்தையாகத் தோன்றுகிறார், நாம் நம் கைகளில் எடுத்துக்கொள்ள! அவருடைய பலவீனத்தின் பின்னே, பச்சைக்குழந்தையின் பின்னே, எல்லாப் பொருட்களையும் படைத்து ஆளும் சக்தி மறைந்திருக்கிறது. நம்புவதற்கு எவ்வளவு கடினம்! ஆனால், அதுவே உண்மை. இயேசுவில் கடவுள் குழந்தையாகியுள்ளார், புன்முறுவல் பூத்து அனைவருக்கும் கைகளை நீட்டுகின்றார்!. இதன்மூலமாக அவரின் பாசம் எவ்வளவு பெரிதென்பதைக் காட்டுகின்றார்.

குழந்தைப் பிறந்து விட்டான் அல்லது பிறந்துவிட்டாள் என்றதும் நமக்கோர் பூரிப்பு, வியப்பு. இளம் தம்பதியினர் தம் குழந்தையைப் பார்க்கும் கூரியப் பார்வையைக் கண்டுள்ள நாம் மரியாவும் சூசையும் குழந்தை இயேசுவைப் பார்க்கும்போது எத்தகைய உணர்வுகளைக் கொண்டிருப்பார்கள் என்பதை எளிதில் புரிந்துக் கொள்ளலாம்! கடவுள் இக்குழந்தையால் தம்மில் வாசம்செய்வதை எப்படி உணர்ந்துப் பரவசப்பட்டிருப்பார்கள்! “வாழ்வு வெளிப்பட்டது’ (1யோவா 1:2). கடவுள் மனிதனான உண்மையை எப்படிச் சுருக்கமாய்க் கூறிவிட்டார்! இக்குழந்தையைக் குடிலில் காணும்போது இவ்வொப்பற்ற, ஒன்றின்றி வேறில்லாத நிகழ்வு உலக வரலாற்றையே கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின் என்று அவரை மையப்படுத்தி வகுக்க வைத்துவிட்டது; நம் மனதில் மலைப்பை ஏற்படுத்துகின்றது!!

இறைவன் வழிகள் எத்துணை வியப்புத் தருபவை! கடவுள் நம்மைபோலவே உறங்கினார், தாயிடம் பாலுண்டார், அழுதார், மற்றக் குழந்தைகள் போலவே களிநடம் புரிந்தார். நாம் கடவுளிடம் சிறிதும் எதிர்பார்க்கமுடியாதது இங்கே நடக்கின்றது. இதனை எண்ணும்போது, கடவுளின் வாழ்வில் நாம் எப்படிப் பங்குகொள்கின்றோம் என்ற கேள்வியை நம்மில் எழுப்புகின்றது. வாழ்க்கையின் மிக உச்சமான அர்த்தத்தைத் தேர்ந்துத் தெளியவேண்டுமா? இக்குழந்தையின் சீடர்களாவோம் என நமக்கு இது உணர்த்துகின்றது.

மூன்று ஞானிகள் விழா வரும் நாட்களில் மூவரசர்கள் உருவத்தைக் குடிலில் வைக்கிறோம். விண்மீனைக் கண்டதும் கீழ்த்திசை மூவரசர்கள் பெத்லெகேம் நோக்கிப் புறப்படுகிறார்கள். அக்குழந்தை இயேசுவுக்குப் பொன், சாம்பிராணி, வெள்ளைபோளம் அளிக்க. விலையுயர்ந்த இப்பொருட்கள் அவர் அரசர் என்பதைப் பொன்மூலமும், அவர் கடவுள் என்பதைச் சாம்பிராணி மூலமும், அவர் இறந்து அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை வெள்ளைப்போளம் மூலமும் காட்டுகின்றன.

எவ்வளவு தூரத்தை இஞ்ஞானிகள் கடக்க வேண்டியிருந்தது! எல்லையற்றவனைக் காணும் ஆவலில், தங்கள் அந்தஸ்தின் உயர்வையோ, வழியில் எதிர்கொள்ளும் துன்பங்களையோ ஒருபொருட்டாகக் கொள்ளவில்லை. (மத் 2:1-12). விண்மீனை மீண்டும் கண்டதும் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தார்கள். (மத் 2:10) அக்குழந்தை இருந்த இடத்தின் ஏழ்மை அவர்களுக்குத் தயக்கத்தைக் கொடுக்கவில்லை. உடனே நெடுஞ்சாண்கிடையாய் விழுந்துக் குழந்தையை வணங்கினார்கள். (மத் 2:11) உலகின்போக்கையே வழிநடத்தும் ஞானத்தின் இருப்பிடமாம், உயர்ந்தோர் எனும் மமதை பிடித்தோரைத் தரைமட்டமாக்கி, சமூகத்தில் இழிந்தோரை உயர்த்தும் ஞானத்தின் இருப்பிடமாம் இறைவனைப் புரிந்து வணங்குகின்றார்கள். தத்தம் நாடுகளுக்குத் திரும்பியதும் தங்கள் அநுபவத்தில் உணர்ந்த இறைமகனை, மேசியாவைப்பற்றி எல்லோருக்கும் நிச்சயமாக அறிவித்திருப்பார்கள். உலகெங்கும் நற்செய்திப் பரப்பும் உன்னதப் பணியை அவர்களே தொடங்கினார்கள். இந்நிகழ்வை மனதுக்குக் கொண்டுவரும்போது, நற்செய்தியை எல்லோருக்கும் எடுத்துச்செல்ல ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் கடமை உண்டு என்பதை - நம் கருணைச்செயல்களால், இயேசுவையும், அவர் அன்பையும் பிறர் புரிந்துகொள்ளவைக்க நமக்குக் கடமை உண்டு என்பதை - இக்காட்சி மனதில் பதிய வைக்கிறது.

இப்போது வளர்ந்திருக்கும் நாம் நம் குழந்தைப்பருவத்தில் இக்குடிலைக் காட்டி நமக்கு நம் பெற்றோர் இறைவன் நம்மீது எத்தகைய அன்பு கொண்டார் என்பதை அறியவைத்ததை இக்குடிலின் அருகே உணர்வோம், இவ்வாறே நம் இறைநம்பிக்கை வாழையுடிவாழையாய் நம் சந்ததிக்குப் போய்ச்சேர வேண்டும்.

எத்தகைய தாழ்ந்த நிலையில், ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட நிலையில் நாம் இருந்தாலும், கடவுள் நம் மீது அன்பு கொண்டுள்ளார் என்பதை இக்குடில் நமக்குப் பறைசாற்றுகிறது. நாம் குழந்தையாயிருந்தாலும் சரி, வளர்ந்திருந்தாலும் சரி, நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இயேசுவைத் தியானிக்க, அவர் நம்மீதுக் கொண்டுள்ள அன்பைச் சுவைத்துணர, கடவுள் நம்மோடிருக்கிறார், அவரின் பிள்ளைகளாகிய நாம் சகோதர சகோதரிகளாகி அவரோடிருக்கிறோம் என்பதை, இறைவனின் மகனும், மரியாவின் மகனுமாகிய பாலன் இயேசுவைப் பார்க்கும்போது கிறிஸ்துமஸ் குடில் தூண்டுகிறது. இதை உணர்வதில் தான் நமக்கு எத்துணை மகிழ்ச்சி! புனித ப்ரான்சிசைப்போல, எளிமை மிக்க அருளுக்கு நம் மனங்களைத் திறப்போம் – அதிலிருந்து சுரக்கும் ஒரு திகைப்பு ஜெபமாக ஊற்றேடுக்கட்டும் -இறைவனுக்கு நன்றி எனும் ஜெபம், தன்னிடமுள்ள எல்லாவற்றையும் நம்மிடம் பகிர்ந்துக் கொடுத்துள்ள இவ்விறைவனுக்கு, நம்மைத் தனிமையில் விட்டுவிலக மனமில்லாத இறைவனுக்கு நன்றி எனும் ஜெபம் பெருக்கெடுக்கட்டும்!!

www.anbinmadal.org ++2002-2019++ Tamil Catholic website. Email ID: anbinmadal at gmail.com