புனித தாமஸ் அக்குவினாஸ்

திரு.சந்தியாகு

இவர் இத்தாலிய நாட்டில் 1225 ஆம் ஆண்டு பிறந்தார். வாழ்வில் ஒரு நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டிய வயது வந்ததும் உலகத்தின்மீது வெறுப்புக் கொண்டு சந்நியாசியாக விரும்பினார்.

பெற்றோர் இதை விரும்பவில்லை. எனினும், தனது 18வது வயதில் புனித தோமினிக் ஏற்படுத்திய துறவற சபையில் சேர்ந்தார்.

இவரைத் தடுக்க பெற்றோர் பெரு முயற்சி செய்தனர். இரண்டு ஆண்டுகளாக இவரை ஓரிடத்தில் அடைத்து வைத்தனர்.

இந்த இரண்டு ஆண்டுகளில் இவரது சகோதரி இவருக்கு வேதாகம நூல்கள், தத்துவ நூல்களைக் கொண்டுபோய்க் கொடுப்பார்.

தோமினிக்கன் சகோதரர்களின் உதவியுடன் அக்குவினாஸ் தோமையார் வீட்டிலிருந்து தப்பினார். புனித தோமினிக்கன் சபையில் சேர்ந்து வார்த்தைப்பாடு கொடுத்தார்.

கொலோஞ் நகரில் புனித ஆல்பர்ட்டிடம் இவர் கல்வி கற்றார். தோமையார் அதிகமாக பேச மாட்டார். ஏனைய மாணவர்கள் இவரை ஊமை மாடு எனக் கேலி செய்வார்கள். ”இந்த ஊமை மாடு போடும் சத்தம் ஒரு நாள் உலகெங்கும் கேட்கும்" என்று புனித ஆல்பர்ட் முன்னறிவித்தார்.

படிப்பு முடிந்து குருத்துவத்தில் திருநிலைப்படுத்தப்பட்ட பின்பு ஐரோப்பாவில் பல நகரங்களில் உள்ள பேராலயங்களில் மறையுரையாற்றினார்.

பாரிஸ் நகர பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரக்கணக்கில் இவர் மறையுரையைக் கேட்க வருவார்கள். இவர் எழுதிய ஏராளமான நூல்கள் நம்மை வியப்புக்குள் ஆழ்த்துகின்றன. இவற்றில் மிகச்சிறந்தவை இரண்டு. ஒன்று இறையியலின் சுருக்கம், மற்றது புறவினத்தாரின் கொள்கை மறுப்பு, இன்றைக்கு குருமாணவர்கள் தத்துவக்கலை, வேதக்கலை பயிலும்போது இவரது நூல்களைப் படிக்க வேண்டும். எனில் இவர் எழுதியவை எக்காலத்திற்கும் பொருந்தும் என்பது தெளிவாகிறது. இவரது காலம் வரை திருச்சபையில் பல மறை நூல் வல்லுநர்கள் தோன்றியிருப்பினும், இவரை மட்டுமே இரண்டாவது வத்திக்கான் சங்கம், குருத்துவக் கல்விக்கும், கிறித்தவ பல்கலைக்கழகப் படிப்பிற்கும் வழிகாட்டி என்று குறிப்பிடுகிறது.

ஒரு நூலைப் படிப்பதற்கு முன்போ அல்லது ஒரு நூலை எழுதுவதற்கு முன்போ, முதலில் ஆழ்ந்து செபத்திலும், தியானத்திலும் அமர்ந்து இறைவனின் உதவியை இப்புனிதர் நாடுவார்.

வேதாகமத்தைப் படிக்கும் பொழுது சில வாசகங்களின் உட்கருத்து புரியவில்லை என் நால் சிறப்பு உபவாச செபம் செய்து தியானிப்பாராம். இவர் நேப்பிள்ஸ் நகரில் இருக்கும்போது சிலுவையில் தொடங்கிய இயேசு புதுமையாக வாய்திறந்து இவருடன் பேசினார்.

”தோமாஸ், நீ என்னைப் பற்றி நன்றாக எழுதியிருக்கிறாய், உனக்கு என்ன சன்மானம் வேண்டும்?" என்றார். ஆண்டவர்.

"ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு ஒன்றும் எனக்கு வேண்டாம்" எனப் புனிதர் பதிலளித்தார்.

இத்தனை அரிய நூல்களை எழுதுவதற் கான ஞானம் எங்கிருந்து கிடைத்ததெனப் பலர் கேட்பார்கள். இவர் தாழ்ச்சியுடன் சிலுவையில் தொங்கிய இயேசுவைச் சுட்டிக்காட்டுவார்.

'மாண்புயர்' (தாந்தும் ஏர்கோ) என்ற பாடலைத் தொகுத்தவர் புனித அக்குவினாஸ் தோமையார்தான்.

'இந்த அனுமானத்தைத் தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்' என்ற வார்த்தைகளிலிருந்து இவர் நற்கருணை நாதரிடம் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி, வணக்கம், பற்றுதல் அனைத்தும் புலனாகின்றன.

திவ்விய நற்கருணைதான் இவரது குருத்து வத்திற்கும், குருமாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும்போதும் மையமாக அமைந் திருந்தது.

ஒரு காலத்தில் திவ்விய நற்கருணை நாதரின் பிரசன்னத்தை உணர்ந்து விசுவாசத்துடன் முழந்தாளிட்டு வணங்கினோம். இப்போது பலர் தலையை மட்டும் அசைத்து விட்டுப் போவதில் எந்த அளவிற்கு விசுவாசம் வெளிப்படுகிறது என்று இன்று நாம் ஆராய்வது நல்லது.

"சாந்த குணமானது கற்பையும், ஏனைய புண்ணியங்களையும் விட உயர்ந்தது. ஏனெனில் மிகச்சிறந்த புண்ணியமாகிய அன்பை இது பூர்த்தி செய்கிறது” என்று புனித அக்குவினாஸ் தோமையார் கூறியுள்ளார்.

கத்தோலிக்கப் பள்ளிகள், கல்லூரிகள் இவற்றின் பாதுகாவலராக இவர் போற்றப்படுகிறார்.

புனித அக்குவினாஸ் தோமையார் 1274 ஆம் ஆண்டு தனது 49வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

புனிதரின் திருநாள் : ஜனவரி 28.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு புனிதர்கள்