இந்தியாவின் திருத்தூதர் - புனித தோமையார்

திருமதி அருள்சீலி அந்தோணி

ஜூலை 3ஆம் தேதி புனித தோமையாரின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான புனித தோமா சிறப்பு வாய்ந்தவர் காரணம் இயேசுவின் பிறப்பு - இறப்பு -உயிர்ப்பு குறிப்பாக உயர்த்தலில் பெரும் பங்கு வகித்தவர் புனித தோமையார் ஆவர்.
இவரது திருவிழா உலக திருச்சபைக்கு மட்டுமன்று, இந்திய திருஅவைக்கு மெய்காப்பாளரும் ஆவார்

புனித தோமா இயேசுவின் அன்பு கட்டளையை ஏற்று இந்தியாவிற்கு வந்தவர். குறிப்பாக தென் தமிழகத்தில் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு மிக சிறந்த சான்று இவர் தொடுத்த வினா என்பதனை உணர்ந்திடுவோம். இதுவே இந்தியா பண்பாட்டு பல சமயங்களை சேர்ந்தவர்களுக்கு உய்த்துணரும் நற்சான்றாகும். கேரளா வழியாக கிறிஸ்துவின் போதனைகளை எடுத்துரைத்து சென்னை சாந்தோம், சின்னமலை, பரங்கிமலை என்று பரந்து விரிந்து கிறிஸ்துவின் மதிப்பீடுகளை தமிழக மக்கள் கண்டுணரச் செய்தவரே நம் தோமா! இவர் நம் திருநாட்டின் பாதுகாவலருமாவார்!

மேலும் இவர் பாதங்கள் தடம் பதித்த இடங்கள் இன்றும் வரலாற்றுச் சின்னங்களாக காட்சியளிப்பதை நாம் காணலாம். குறிப்பாக தென்னிந்தியாவின் புனிதர். இவர் வாழ்ந்து கிறிஸ்துவத்தை போதிக்கையில் மகாதேவன் என்பவரால் கொலையுண்டு இன்று புனிதரான நிகழ்வு கிறிஸ்துவத்தின் தொன்மை வாய்ந்த வரலாற்றை பறைச்சாற்றிக் கொண்டிருப்பதை இவ்வுலகு அறியும்.

சந்தேகம் எழும்போது, தோமா என்று சுட்டிக்காட்டி பேசும் அளவு இவர் புகழ் பெற்றவர். அதே வேளையில் எல்லா தூதர்களை விட இயேசு நம்மைப் போல, ஒரு மனிததன்மையில் வாழ்ந்தார் என்பதை, தொட்டு நன்குணர்ந்தவர் தோமா! மற்ற சீடர்கள் இயேசுவின் பின்னால் சென்றால் கல்லெறிய படுவோம் என்று தயங்கிய வேளையில் "நாமும் செல்வோம். அவரோடு இறப்வோம்." (யோவா 11:16) என்று அஞ்சா நெஞ்சத்தோடு அறிக்கையிட்டவர். கிறிஸ்துவின் மேல் பற்றுறுதியும், அர்ப்பண உணர்வும் கொண்டவர்.

இயேசுவுக்காக சிலுவையை சுமக்கவும் தயங்கியவர் அல்லர். அவரது மரணமே இதற்கு சாட்சி!

அவரது குருதி தமிழகமண்ணில் சிந்தி உலகம் ழுமுவதும்  தேடி வந்து வணங்கிச் செல்லும் அளவுக்கு இன்று புனித தோமையார் வரலாற்றில் மட்டுமன்று மாறாக தோமையார் மலையே இதற்கு சான்றாகும். இந்த மாபெரும் புனிதரை யாம் பெற்றது யாம் செய்த பெரும் பாக்கியமே என்று உவகையோடு வலம் வருவோம்.

அன்று இறைமகன் சிலுவையில் அறையுண்டு இறந்தபின் ஒளிந்துக் கொண்ட சீடர்களைப் போல இல்லாமல் பயமின்றி துணிவோடு சுற்றி திருந்த துணிச்சல் மிக்க சீடர் புனித தோமையார்.

இயேசு உயிர்த்து விட்டார் என்று கூறியபோது கோழைகளான சீடர்களுக்கு பல கற்பனைத் தோற்றங்கள் எழக்கூடும் என்ற யூதித்து மறை உண்மையை முக்காலமும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையில் தான் தோமா இயேசுவிடம் உறுதியான அடையாளம் தேடுகின்றார்.

அவை தான் இயேசுவின் திருக்காயங்கள்! தோமாவின் மனதை புரிந்துக் கொண்டவர் இயேசு மட்டுமே. காரணம் நமது நாட்டிலுள்ள பல சமயங்களின் போட்டி மும்முனை போட்டியாகத் திகழும் என்ற நிலையை இறைமகன் முன் கூட்டியே உணர்ந்தவராய் தோமாவை கடிந்து கொள்ளாமல் தன் காயங்களை தேடும் சீடருக்கு இறைமகன் "தோமா இதோ என் கைகள் - என் விலாவில் உன் கையை இடும்" எனும் தொடும் அனுபவத்திற்கு அழைப்பு விடுக்கின்றன. மனிதத் தன்மையில் இருந்த இயேசுவை தொட்டுணர்ந்து அவரில் இறைத்தன்மையை கண்டுணர்ந்து "என் கடவுளே! என் ஆண்டவரே!" என்ற தோமாவின் நம்பிக்கை அறிக்கைகள் இன்றும் ஒலிக்கும் உயிரலைகளாகும் இறை - மனித - உறவை நம்மோடு இணைக்கும் மறையுண்மையாகும்.

இயேசு தோமா நீ கண்டதினால் நம்பிக்கைக் கொண்டாய், காணாமல் நம்பிக்கை கொள்வோர் பேறுபெற்றோர் என்ற மறைவாக்கு நமக்கும் நமக்கு பின் வரும் சந்ததியருக்கும் உயிரோட்டம் தரும் ஒலி அலைகளாகும்.

புனித தோமாவின் குருதி சிந்திய மண்ணில் வாழும் நாம் மண்ணின் புனிதத்தை உணர்ந்து அவர் வாழ்ந்து திரிந்து சுவாசித்த தென்றலை நாமும்  சுவாசிக்கும் வரம் வேண்டி மன்றாடுவோம்!

நாளும் தோமாவின் பரிந்துரையை வேண்டுவோம். அவரில் தஞ்சமடைவோம்! சாதி - சமயங்களை கடந்து அன்பின் உறவை வளர்ப்போம். நமது தேசிய திருத்தலம் புனித தோமாவின் பன்னாட்டு திருத்தலமாக மாறிட வரம் வேண்டி அவரில் சரணடைவோம்

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு புனிதர்கள்