புனித ஸ்தேவான் (புனித முடியப்பர்)

திரு.சந்தியாகு

இயேசு உயிர்த்து விண்ணகம்‌ சென்ற ஆண்டிலேயே 5000 ஆன்மாக்கள்‌ இயேசுவின்‌ சீடர்களாய்‌ மாறினார்கள்‌. சீடர்களின்‌ தொகை பெருகவே, அவர்களிடையே மறைபோதகம்‌, திருமுழுக்கு, ஏழைகளுக்கு. உணவளித்தல்‌ போன்ற பணிபுரிய திருத்‌தூதர்கள்‌ எழு தியாக்கோன்மார்களைத்‌ தேர்ந்‌தெடுத்தனர்‌. இவர்களில்‌ முதலிடம்‌ வகிப்பவர்‌ முடியப்பர்‌. இவரது ஆசிரியர்‌ உலகப்‌ புகழ்பெற்ற சுமாலியேல்‌.

முடியப்பர்‌ விசுவாசத்திலும்‌ பரிசுத்த ஆவியிலும்‌ நிறைந்து விளங்கினார்‌. அருளும்‌, ஆற்றலும்‌ நிறைந்தவராய்‌ மக்களிடையே மாபெரும்‌ அற்புதங்களையும்‌, அருங்குறிகளையும்‌ செய்து வந்தார்‌.

இயேசு எல்லோரையும்‌ மீட்க வந்தார்‌. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மட்டுமல்ல என்று போதித்தார்‌. அஞ்சாநெஞ்சம்‌ கொண்டவராய்‌ பரிசேயரைச்‌ சாடினார்‌. பிடிவாத குணத்தோடு கல்மனமும்‌ கொண்டவர்கள்‌ பரிசேயர்கள்‌ என்று சுட்டிக்காட்டினார்‌. மெசியாவை ஏற்றுக்கொள்ளாமல்‌ அவரை சிலுவையில்‌ அறைந்தார்கள்‌ யூதர்கள்‌ என்று சாடினார்‌.

இதைக்‌ கேட்டவர்கள்‌ உள்ளத்தில்‌ சினம்‌ பொங்க அவரைப்‌ பார்த்துப்‌ பற்களை 'நறநற' வெனக்‌ கடித்தனர்‌. முடியப்பர்‌ தூய ஆவியினால்‌ நிறைந்தவராய்‌ வானத்தை உற்று நோக்கினார்‌. அப்போது கடவுளின்‌ மாட்சிமையையும்‌ அவரது வலப்பக்கத்தில்‌ இயேசு நிற்பதையும்‌ கண்டு “இதோ வானம்‌ திறந்‌துள்ளதையும்‌, மனுமகன்‌ கடவுளின்‌ வலப்‌பக்கம்‌ நிற்பதையும்‌ காண்கிறேன்‌” என்றார்‌. அதைக்‌ கேட்டு அவர்கள்‌ எல்லோரும்‌ பெருங்கூக்குரலுடன்‌ காதை மூடிக்‌ கொண்டனர்‌. ஒருமிக்க அவர்மேல்‌ பாய்ந்து அவரை ஊருக்கு வெளியே இழுத்துச்‌ சென்று அவரைக்‌ கல்லால்‌ எறியத்‌ தொடங்கினர்‌. முடியப்பரோ கல்‌ எறிபவர்‌களை நோக்காது இயேசுவை நோக்கி “ஆண்டவராகிய இயேசுவே, என்‌ ஆவியை ஏற்றுக்கொள்ளும்‌” என்று வேண்டிக் கொண்டார்‌. பிறகு முழங்காலிட்டு உரத்தக்‌ குரலில்‌ “ஆண்டவரே, இப்பாவத்தை இவர்கள்மேல்‌ சுமத்தாதீர்‌” என்று சொல்லி உயிர்‌ துறந்தார்‌.

இயேசுவுக்காக இரத்தம்‌ சிந்தி, மறைசாட்சியாக உயிர்‌ துறந்தவர்களில்‌ முடியப்பர்‌ முதல்‌ இடத்தை வகிக்கின்றார்‌.

முடியப்பர்‌ கொலைக்கு சவுல்‌ உடன்‌பட்டிருந்தாலும்‌ பின்பு பவுலாசு மாறிய இவர்‌ வாழ்க்கையில்‌ இச்சம்பவம்‌ பெருந்‌தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு பிரச்சனையையும்‌ அன்பு என்ற கருவியால்‌ முறியடித்தார்‌. சீறியெழுந்த கூட்டத்திற்குத்‌ தலைவணங்காமல்‌ இருந்ததற்குக்‌ காரணம்‌ இறையன்பு. பிறரன்பில்‌ இவர்‌ ஊன்றியிருந்ததால்‌ கல்லால்‌ எறிந்து கொன்றவருக்கு மன்னிப்பு அளிக்க முடிந்தது. தண்டனையிலிருந்து எதிரிகளைக்‌ காக்க வேண்டுமென்று இவரைத்‌ தூண்டியதும்‌ அன்பே.

மக்களிடையே மன்னிக்கும்‌ மனப்‌பான்மை குறைந்து வருவதை சிந்திப்போம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  புனிதர்கள்

தமிழ்க் கத்தோலிக்க இணையத்தளம்-அன்பின்மடல்
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.

https://anbinmadal.org | 2002-2025 | Email ID: anbinmadal at gmail.com