சலேசு நகர் புனித பிரான்சிஸ்

திரு.சந்தியாகு

சலேசு நகர் புனித பிரான்சிஸ்Saint Francis de Sales "Saint Francis de Sales" (21ஆகஸ்டு1567 – 28டிசம்பர்1622) பிரானஸ் நாட்டில் சவாய் என்ற உயர் குலத்தில் 1567 ஆம் ஆண்டு பிறந்தார். புதுவை நகர் பல்கலைக் கழகத்தில் சட்டக் கலை பயின்று பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டே குருத்துவத்தைப் தேர்ந்து கொண்டார்.

இவர் கவனத்துடனும், திறமையுடனும் எழுதிய மறைவிளக்க நூல்கள் பலவற்றை கால்வின் பதித்தனம் நிலவிய ஜெனிவா நகரில் மக்களிடம் வழங்கினார். அதன்பின் அங்கு அவர் நேரடியாகப் போதிக்கவும், கால்வின் பதிதத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 70,000 மக்களை மனந்திருப்பவும் முடிந்தது.

"ஒரு பீப்பாய் நிறைய புளித்த காடி ஈக்களை ஈர்க்க முடியாது. ஆனால், ஒரு கரண்டித் தேன் பல ஈக்களை ஈர்க்க முடியும்" என்பது இவரது விருதுவாக்காய் இருந்தது.

1602 ஆம் ஆண்டு ஜெனிவா நகரின் ஆயரானார். குருக்களுக்காகவும், விசுவாசிகளுக்ககவும் தன் மறைமாவட்டத்தில் ஆர்வத்துடன் உழைத்தார். வேறு இடங்களுக்கும் போய் போதித்தார். இவர் கோப குணம் படைத்தவர். சினத்தை முற்றிலும் அடக்கிக்கொள்ள இருபது ஆண்டுகள் ஆயின என்பார்.

மகிழ்ச்சியான நேரத்தில் மிஞ்சின குதூகலம் கொள்ளமாட்டார். எப்பொழுதும் அடக்க ஒடுக்கமாக இருப்பார். "கடவுள்மீது என் பார்வையை வைத்து நான் என் வாழ்க்கைப் படகைச் செலுத்துகிறேன். திருப்தியுடன் இருக்கிறேன். உலகம் தலைகீழாகப் புரண்டாலும் நான் பயப்படத் தேவையில்லை. கடவுள் என்னைப் பராமரித்து வரும்போது நான் ஏன் அஞ்ச வேண்டும்?" என்பார். "புனிதத்தில் வளர்வது எளிதிலும் எளிது. போர் வீரருக்கும் இது கைகூடும். பணித்தளத்தில் இருப்பவருக்கும் இது கைகூடும். திருமணத்தாருக்கும் இது கைகூடும். ஏழை, பணக்காரருக்கும் இது கைகூடும். எங்கிருந்தாலும் இதயங்களை ஆண்டவரிடம் எழுப்பி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்பார்.

இறைவன் நமது இதயத்தில் மையங்கொண்டு வாழ விரும்புகிறார் என்பது இவரின் அசையாத நம்பிக்கை. கடவுள்மீது அன்பு என்ற நூலை இவர் எழுதி முடிக்க பத்து ஆண்டுகள் ஆயின. திருத்தந்தை 23 ஆம் யோவான் இவரைத் தன் வாழ்நாளெல்லாம் முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தார். புனித சலேசியார் 1622 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். புனிதரின் திருநாள் - ஜனவரி 24

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  புனிதர்