புனிதை செசிலியா
சந்தியாகு
புனிதை செசிலியா இரண்டாம் நூற்றாண்டில் உரோமாபுரியில் பிறந்தார். சிறுமியாக இருந்தபொழுதே இசையில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். சிறுவயதிலிருந்தே திருமணாமாகாமல் வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தார். அதிகச் செபத்திலும், தவத்திலும் வளர்ந்து வந்தார். பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக வலேரியன் என்பவருக்குத் திருமணம் முடித்தார்கள்.
திருமணநாளன்றே தன் கணவனிடம் 'தான் கன்னியாக என்றும் இருப்பேன்' என்று வார்த்தைப்பாடு எடுத்துள்ளதாகக் கூறினார். "நான் ஓர் இரகசியத்தை உன்னிடம் கூறப்போகிறேன். வானதூதர் ஒருவர் என்னை எப்பொழுதும் கண்காணித்து வருகின்றார். நீ என் கன்னிமையை மதித்து என்னை அன்பு செய்தால் என் வானதூதரும் உன்னை அன்பு செய்வார்” என்று தன் கணவனிடம் செசிலியா கூறினார்.
“நீ உன்னோடு இருக்கும் உன் வானதூதுரை எனக்குக் காட்ட வேண்டும். அப்பொழுதுதான் நான் உன் கன்னிமையை மதிப்பேன்" என்றார் அவரது கணவன் வஸேரியன்.
"நீ உயிருள்ள கடவுள் நம்பி திருமுழுக்குப் பெற்றால் வானதூதனைக் கட்டாயம் காண்பாய்" என்றார்.
அதற்கு இசைந்து ஆயர் உரபான் என்பவரால் திருமுழுக்குப் பெற்று வீடு திரும்பிய வஸேரியன் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. செசிலியாவின் அருகில் வானதூதர் நின்றுகொண்டிருந்தார் வானதூதர் அவரை அணுகி அவர் தலைமீது கரங்களை விரித்து ரோஜா லில்லி மலர்களைப் பொழிந்தார்,
வலேரியனுடைய சகோதரர் திபூர்யுசையும் செசிலியா மனந்திருப்பினார். சிறிது நாட்களில் வலேரியனும், அவரது சகோதரரும் மறைசாட்சியாகத் தலைகள் வெட்டப்பட்டு இறைவனுக்காக உயிர் துறந்தனர்.
செசிலியா அவர்களது உடலை அடக்கம் செய்தார். தன் விசுவாசத்தைப் புறக்கணிக்க வேண்டுமென்று செசிலியாவை உரோமையர்கள் கேட்டுக்கொண்டபொழுது "நான் இயேசுவின் மணவாட்டி என்பதை நீங்கள் அறியீர்களோ? " என்று பதில் கூறினார்.
அவரை ஒரு நாள் முழுவதும் கொதிக்கும் தண்ணீரில் முழுக்கினார்கள். அவருக்கு எந்த வேதனையும் இல்லாமல் அற்புதமாகச் சுகமாக இருந்தார். பிறகு எதிரிகள் கோடாரியால் அவரது தலையையும், மார்பையும் பிளந்தனர். மூன்று நாட்கள் இரத்தம் சொட்டச் சொட்ட செபித்துக்கொண்டே இருந்தார் செசிலியா. இறுதியாக இறைவனின் மகிமை பாடிக்கொண்டே இறந்தார். இன்று திருஇசையின் பாதுகாவலியாகத் திகழ்கின்றார்... இந்த புனிதையின் விழா நவம்பர் 22.
செசிலியாவின் பொன்மொழி: “கிறிஸ்துவுக்காக இறப்பதைத் தவிர வேறெந்தக் காரியமும் எனக்கு மகிழ்ச்சி கொடுக்காது,”
“எரிகின்ற விளக்காக இரு... அப்போதுதான் மற்ற விளக்குகளை ஏற்றி வைக்கலாம்” தாகூர்.