புனித பிபியானா
புனித பிபியானாவின் பெற்றோர் உரோமை நகரில் வாழ்ந்து வந்தார்கள். ஃபிளேவியன் மற்றும் டஃப்ரோஸ் இவரது பெற்றோர் ஆவர். பிபியானாவிற்கு டெமிட்ரியா என்னும் பெயரில் தங்கை ஒருவர் இருந்தார்.
'இவர்கள் வாழ்ந்த காலம் பேரரசர் ஜிலியன் ஆட்சி செய்த காலம். கிறிஸ்தவர்களுக்கு எதிராக எண்ணற்ற கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட காலம். பிபியானாவின் தந்தையை அழைத்து கைது செய்து விசாரித்தார்கள். அவர் விசுவாசத்தில் உறுதியுடன் இருந்ததால் பழுக்கக் காய்ச்சிய இரும்புத் தண்டினால் அவருடைய முகத்தை தீய்த்தார்கள். அவரை நாடு கடத்தினார்கள். சில நாட்களில் அவர் இறந்தார்.
பிபியானாவின் தாயும் கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்ததால் அவருடைய தலையை வெட்டிக் கொலை செய்தார்கள். பெற்றோரை இழந்த பிள்ளைகள் இருவரும் ஆதரவின்றி வேதனைப்பட்டார்கள். போதாக்குறைக்கு இவர்களின் சொத்துக்களையும் ஆதிக்கவாதிகள் பிடுங்கிக் கொண்டார்கள். சகோதரிகள் இருவரும் வறுமையில் வாடினாலும் நோன்பிருந்து இறைவனிடம் எந்நேரமும் மன்றாடி வந்தார்கள். ஐந்து மாதங்கள் இப்படி இறைவனின் துணையில் வாழ்ந்தார்கள்.
இவ்வளவு கொடுமைகள் செய்தபின், இருவரையும் விசாரணைக்கு வருமாறு ஆளுநர் அழைத்தான். முதலில் டெமிட்ரியாவை விசாரித்தார்கள். மேலும் கொடுமைப்படுத்தித் துன்புறுத்தினார்கள். இருப்பினும் எல்லார் முன்னிலையிலும் மிகத் துணிவுடன் விசுவாசத்தை அறிக்கையிட்டு அதிகாரிகள் முன் கீழே விழுந்து உயிர் நீத்தாள்.
பிபியானாவை இன்னும் அதிகமாகச் சித்திரவதை செய்தார்கள். அதோடுகூட சாஃபினா என்ற ஒழுக்கங்கெட்ட பெண்ணிடம் அனுப்பினார்கள். ஆசை வார்த்தைகள் கூறி பிபியானாவை மனம் மாற்றிட அப்பெண் முயன்றாள். ஒன்றும் முடியவில்லை. கடைசியில் ஆளுநர் பிபியானாவை தூணில் கட்டி சவுக்கால் அடிக்க உத்தரவிட்டான். அவ்வாறு செய்தும் பிபியானா விசுவாசத்தில் தளரவில்லை. உயிர் போன பிறகுதான் அடிப்பதை நிறுத்தினார்கள்.
மறைசாட்சியான பிபியானாவின் உடலைக் கொடிய விலங்குகள் குதறிச் சாப்பிட வேண்டும். என்று பொதுவெளியில் எறிந்தார்கள். எந்த விலங்கும் அவர் உடலைத் தொடவில்லை. இரண்டு நாள்களுக்குப் பிறகு அருள்தந்தை யோவான் என்பவர் அவரது உடலை எடுத்து, பிபியானாவின் வீட்டில் அவரது தாய்க்கும், சகோதரிக்கும் அருகிலேயே அடக்கம் செய்தார். இது ஏறக்குறைய 363 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது.