இறை ஊழியர் அன்னை அன்னம்மா!

அருட்சகோதரி ஜெனி SAT
Sr.annamma

"ஞானமுள்ள பெண்ணின் குறிக்கோள் சிறந்ததாக இருக்கும்; குறிக்கோள் சிறந்திருந்தால் இருக்குமிடம் வளரும்; இருக்கும் இடம் வளர்ந்தால் சமுதாயம் மேல்நோக்கி வளரும்.” இவ்வார்த்தை களுக்கு ஏற்ப பெண் சமுதாயம் மேன்மையடைய தன் வாழ்வை அர்ப்பணித்த இறைஞானமுள்ள பெண்தான் அன்னை அன்னம்மாள்!

இவர் 'சின்ன உரோமாபுரி என்றழைக்கப்படும் திருச்சி மாநகரில் வரகனேரி என்ற ஊரில் செல்வச் செழிப்பு மிக்கக் குடும்பத்தில் பிறந்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர். சிறு வயதிலிருந்தே இறைப்பக்தியும், நல்லுள்ளமும்,துடிப்பான குணமும் கொண்டவர். இறைவனுக்குத் தன்னை அர்ப்பணிக்க விரும்பிய அன்னை அன்னம்மா திரு இருதயச் சபையில் (பாண்டிச்சேரி) சேர்ந்து தனது துறவறப் பயிற்சியை மேற்கொண்டார். இவரது துடுக்கான குணத்தை தவறாகப் புரிந்து கொண்ட பயிற்சியாளர்களால் நவஇல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இருப்பினும் அன்னைக்குள் இருந்த துறவறப் பண்புகள் மடிந்துவிடவில்லை! துறவறப் பண்புகளுடனே வாழ்ந்து வந்திருக்கிறார். இவரது எதிர்கால வாழ்வை எண்ணிய பெற்றோர் இவருக்கு திருமணத்தை முடித்து வைத்தார்கள். திருமணமான சில வருடங்களிலே காலரா என்னும் நோய் கணவரின் உயிரைச் சூறையாட, கைம்பெண்ணானார் அன்னம்மாள்.

நற்குணப் பெண்மணியான அன்னம்மா, தன் குடும்பத்தில் யாவற்றையும் முன்னின்று நடத்தியவர். ஆனால், விதவைக் கோலம் தன்னை அலங்கரித்ததால் அனைத்து உரிமைகளையும் இழந்து, சட்டங்கள் - சம்பிர தாயங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு சமூகம் இவரைத் தள்ளியது!

ஒரு படகை மூழ்கடிக்கக்கூடிய சக்தி எந்த நதிக்கும் கிடையாது. அந்தப் படகு பலவீனமானதாக இருந்தா லொழிய எந்தச் சக்தி வாய்ந்த காற்றோ, புயலோ அப்படகை அசைத்துப் பார்க்கலாமே ஒழிய, வீழ்த்திப் பார்க்க முடியாது. விதவையானாலும் விதியென வாழ விரும்பாது தொடர்ந்து போராடி, புதிய சகாப்தம் படைக்க விரும்பினார் அன்னை.

எந்த மனிதனாலும், எந்த சட்டங்களாலும் முடக்கிப் போட இயலவில்லை அன்னம்மாவை. அவர் துணிவு கொண்டவராய், எதற்கும் அஞ்சாமல் அடிமை விலங்கை உடைத்து, சமுதாயத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட இனத்தவரை, நோயுற்றோரை தேடிச் சென்று உதவினார். தன்னைப் போன்று விதவையர்களாக வீட்டிலே முடக்கப்பட்டிருந்த பெண்களை வெளிவரச் செய்து, அவர்களையும் தன்னோடு, தன் பணியில் இணைத்துக் கொண்டார்.

எல்லாம் இருட்டாக இருக்கும்போது உள்ளத்தில் தோன்றும் ஓர் ஒளிக்கீற்றுதான் கடவுளின் நம்பிக்கை அந்த இறைவனில் நம்பிக்கை கொண்டு "அஞ்சாதே, நீ அவமானத்திற்குள்ளாக மாட்டாய்; வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்பட மாட்டாய். உன் இளமை யின் மானக்கோட்டை நீ மறந்துவிடுவாய். உன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்க மாட்டாய். ஏனெனில் உன்னை உருவாக்கியவரே உன் கணவர்” (எசா 54:4-5) என்ற இறைவார்த்தையால் ஆட்கொள்ளப் பட்டு, தன் கைம்மைநிலையை விடுத்து, அழைத்தவரை அன்புக்குரியவராக்கி, விதவையர்களின் வாழ்வு மலர நிதி வேண்டாம், அனுமதி மட்டுமே போதும் என்று இறைபராமரிப்பில் நம்பிக்கைக் கொண்டு திருச்சி புனித அன்னாள் சபையை நிறுவினார்.

பெண்கள் இன்று பல துறைகளில் முன்னேறினாலும், அறிவியல் தொழில்நுட்பங்களில் வளர்ந்திருந்தாலும் பாலின வேறுபாட்டால் இன்றும் பெண்கள் பாரபட்சமான, சமத்துவமற்ற நிலையில் நடத்தப்படு கின்றனர். இவ்வளவு நாகரீக வளர்ச்சி காணப்படும் 21 ஆம் நூற்றாண்டில் இவ்வளவு பெண்களுக்கெதிராக கொடுமைகளும், சமநிலையற்ற அநீதிகளும் நடக்கிற தென்றால், 19-ஆம் நூற்றாண்டில் எப்படி இருந்திருக்கும்? பெண்களை இரண்டாம் பட்சமாகப் பார்க்கக்கூடியநிலை, கல்வியறிவின்மை, வீட்டிற்குள்ளே அடைப்பட்ட நிலை, அதிலும் விதவைப் பெண்களின்நிலை இன்னும் மோசமாக தூசிக்கும், சாம்பலுக்கும்கூட இணையாக மதிக்கப்படாத நிலை!

இச்சூழ்நிலையில் அன்று அன்னம்மா என்ற வீரப்பெண் ஒரு துறவறச் சபையை, அதுவும் விதவையர்களுக்கான துறவறச் சபையை தொடங்கியிருக்கிறார் என்றால், அவர் இந்த சமுதாயத் திற்கு இறைவன் வழங்கிய பெண்களுக்கான வரம் என்றே கூற வேண்டும்!

நன்றி - நம்வாழ்வு 16-04-2017
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  புனிதர்கள்