போப் ஜான்பால் என் மாணவர் ஒரு புனிதர்!
அருட்தந்தை சேவியர் ராஜன் சே.ச
1986 ஜனவரி மாதத்துக்குச் செல்வோம்.
வத்திக்கான். நாங்கள் எட்டுப்பேர் என நினைக்கின்றேன். எங்களுக்குத் தலைவர் கர்தினால் லூர்துசாமி. ஓர் அறையில் நாங்கள் காத்திருந்தோம். எனினும் நாங்கள் எதிர்பாராத வேளையில் ‘இந்தியா, இந்தியா’ என்று சொல்லிக்கொண்டே ஆட்டம்போட்டு வரும் ஒரு சிறுவனைப் போன்று மிகச் சிரித்த முகத்துடன் வந்தார் போப்பாண்டகை இரண்டாம் ஜான்பால் (அருள் சின்னப்பர்).
அவரே எங்களைத் தன் சாப்பாட்டறைக்குக் கூட்டிச்சென்றார். அவர் நடுவிலும், அவருக்கெதிரே கர்தினாலும், மற்றவர்கள் மேசையைச் சுற்றிலும் உட்கார்ந்தோம். மௌன ஜெபத்தின் பின் எதிரே தட்டுகளில் பச்சை நிறத்தில் சூப் பரிமாறினார்கள். போலந்துநாட்டுச் சகோதரிகள் தயாரித்த சூப் அது. போப்பாண்டகை தன்னோடு கொண்டுவந்திருந்த காகிதத்திலிருந்த பட்டியலைப் பார்த்தவாறும் எங்களை மாறிமாறிப் பார்த்தவாறும் பேசினார். அவர் இந்தியா வரும்போது (அதாவது, பெப்.1 1986முதல் 10 1986 வரை) அவர் நம் நாட்டில் நடத்தவிருந்த நிகழ்ச்சிகளிலும் சந்திக்கும் மக்களுக்கு நிகழ்த்தவிருந்த உரைகளிலும் ஆங்காங்கே அவ்வூர் அல்லது மாநிலமொழியில் யார்யார் எப்போது வந்து அவருக்குக் கற்றுத்தருவது என்பதை அன்று ஆராய்ந்தோம். தமிழ், மலையாளம், பெங்காலி, ஹிந்தி, கொங்கணி எனப் பலப்பல மொழிகளில் அவர் பேச வேண்டும்.
பேச்சில் ஈடுபட்டிருந்த திருத்தந்தை எதிரே இருந்த சூப்பை ஒரு கரண்டி அல்லது இரு கரண்டி சுவைத்தார். அவ்வளவுதான். பின்வந்த உணவு எதையும் அவர் தொடவில்லை. நாங்கள் அவரை கவனித்துக் கொண்டே சாப்பிட்டோம். எங்கள் கலந்தாய்வு முடிந்ததும் அவரே அருகிலிருந்த அவரின் பிரத்தியேகக் கோவிலுக்குக் கூட்டிச் சென்றார். சிறிய கோவில் என்பதால் அவர் மட்டும் உள்ளே நுழைந்து "ப்ரீ த்யூ" எனக்கூறப்படும் முழந்தாட்படி கட்டிலில் முழந்தாளிட்டு நற்கருணைநாதரைப் பார்த்து ஜெபித்தார். கர்தினால் லூர்துசாமி அவருக்குப் பின்புறம் முழந்தாட்படியிட்டார். நாங்கள் வாயில் வெளியிலேயே முழந்தாள்படியிட்டு ஜெபித்தோம். ஜெபம் ஓரிரு நிமிடத்தில் முடிந்ததும் அவர் எழ நாங்களும் எழுந்தோம்.
வெளிவந்த அவர் தயாராயிருந்த ஒருவர் பிடித்துக்கொண்டிருந்த தட்டிலிருந்து சிறுசிறு சதுர டப்பாக்களை ஆளுக்கொன்றாகக் கொடுத்தார். உள்ளே அழகிய செபமாலை. அதுவும் புன்முகத்துடனான போப்பாண்டகை கையிலிருந்தே! எங்கள் மகிழ்ச்சிக்குச் சொல்லவா வேண்டும்! விடைபெற்றுவந்தோம். அன்று நடந்த கூட்டத்திலேயே போப்பாண்டகைக்கு மொழி கற்றுக்கொடுக்க யார்யார் போவது என்பதை நானே ஒழுங்குபடுத்துவேன் எனக்கர்தினால் லூர்துசாமி அங்கேயே கூறிவிட்டார். அதன்படி ஒவ்வொருவரையும் அழைத்து அவர் போகவேண்டிய நேரம், கற்றுக்கொடுக்க வேண்டிய வாக்கியங்கள் இவற்றையெல்லாம் அவருக்குக் கூறிவிட்டேன்.
என் முறை வந்தபோது நான் வத்திக்கானுக்குள் தாமிரக்கதவு வாயில் (Porta di bronzo)காப்போரிடம் ‘போப்பாண்டகையின் செயலர் என்னை அழைத்திருக்கிறார்’ என்றேன். அவர் உடனே செயலரைத் தொலைபேசிவழியே தொடர்பு கொண்டார். பின், புன்முறுவலோடு என்னைப்பார்த்து ‘உங்கள் பெயர் ராஜன்; நீங்கள் போப்பாண்டகைச் செயலரைப் பார்க்க இப்போது வரவில்லை! நீங்கள் போப்பாண்டவருக்கு ஏதோ கற்றுக்கொடுக்க வந்திருக்கிறீர்கள் இல்லையா?’ என்றார். வெட்கத்தால் என்னசெய்வதென்று ஒரு வினாடி அசந்துவிட்டேன். காவலர்கள் ஒவ்வொரிடத்திலும் மேலேசெல்லும் வழியைச் சொல்ல, நானும் வரவேண்டிய சிறுமண்டபத்துக்கு வந்து சேர்ந்தேன்.
தமிழில் பேசவேண்டிய வரிகளை எழுதிப் போப்பாண்டகைக்கு நான் ஏற்கனவே அனுப்பியிருந்தேன். வாழ்த்துக்கள், ஆங்கில உரையில் சில முக்கியமான கட்டங்கள் என அவை இருந்தன. தமிழ் வரிக்குக்கீழே ரோமானிய எழுத்துக்களில் (நாம் ஆங்கில எழுத்து என்று கூறுகின்றோமே அதுதான்) இத்தமிழை எழுதி அதற்கும் கீழே அத்தமிழை போலந்து மொழியிலும் எழுதியிருந்தேன். அத்தாள்கள் என்னிடம்தான் இருந்தன. இன்னும், இதை ஒலிநாடா ஒன்றில் பதிவும் செய்து ஏற்கனவே அனுப்பியிருந்தேன். நான் பணிசெய்துவந்த வத்திக்கான் வானொலியில் போலிஷ் மொழிக்காரரும் இருந்ததால் இது சுலபமாயிற்று.
போப்பாண்டகையைப் பார்த்தவுடன் என் உள்ளத்தில் ஏதேதோ எழுச்சிகள். இவற்றையெல்லாம் சரி செய்துவிட்டு, வணக்கம்கூறி, அவர் மோதிரத்துக்கு முத்தி செய்து, அவர் அமர்ந்தபின் நானும் அமர்ந்தேன். மூன்றடி தொலைவில் அமர்ந்திருப்பவர் போப்பாண்டகை, அதிலும் அவர் என் மாணவனாக அங்கே அமர்ந்திருக்கிறாரென உணரும் போது அப்பப்பா என்னே புளகாங்கிதம்! எனினும் அதைக் கட்டுப்படுத்திவிட்டு, நான் கொண்டு வந்திருந்த தாள்களை அவருக்குக் கொடுத்து, முதல்வரி என்ன, இரண்டாம் வரி என்ன, மூன்றாம் வரிஎன்ன என்று சொன்னதும் அவர் அவ்வரிகளைப் படித்துக்காட்ட அதிக நேரம் எடுக்கவில்லை. ஒலி நாடா உதவியோடு அவர் ஒத்திகைப் பார்த்திருந்தார். இப்போது அது போலியமொழியிலும் இருந்ததால் அவருக்குக் கடினமாகவே படவில்லை. அதிலும், ல, ள, ழ எனும் ஒலிகளில் முதல் இரண்டு போலிய மொழியிலும் உண்டு. மேலும், கிழக்கு, மேற்கு ஐரோப்பிய மொழிகளில் அவருக்கு நிறையப் பழகியிருந்தது. ஜப்பானிய மொழியைப் போலிய எழுத்துக்களில் எழுதிப் பலமுறை அவர் வாசித்திருக்கிறாரே! ஆனால், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களின் பொருளைத் தமிழில் போட்டிருந்ததால், அது தமிழில் கூறப்பட்டிருந்த விதத்தை உணர்ந்து நம்மொழி மற்றும் மக்களின் மரபு அறிந்து மிக மகிழ்ந்தார்.
சென்னையில் நடந்த மத நல்லிணக்கக் கூட்டத்துக்கென இறைவனைப் புகழ்வதாகச் செய்யுள் வடிவில் போற்றி அகவல் திருவாசக வரிகளைப் போல் எழுதியிருந்தேன். இறுதி வரி “போற்றி,போற்றி,போற்றி” என இருந்தது. போற்றி என்றால் என்ன எனக்கேட்டார். புகழ் என்று பொருள்கூறி அதை இத்தாலிய மொழியிலும் விளக்கி நம் பக்தி இலக்கியச் சில மரபுகளையும் கூறினேன். வியப்புற்ற அவர், Indian people, holy people - இந்திய மக்கள் பக்தி ஊறிய மக்கள் - என்று கூறினார். நம் மக்கள் மீது அவர் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் என்னை அவ்வளவு கவர்ந்துவிட்டது. அவர் சென்னை வந்திருந்தபோது மெரீனா கடற்கரையில் ‘கலையும் பக்தியும் கரைபுரண்டு ஓடும் தமிழ் நாட்டில்’ என்று தமிழில் சொன்னபோது அங்கிருந்த 10லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஒரே கைதட்டலில் நீண்டநேரம் இருந்துவிட்டார்கள்! கிறிஸ்தவ நாடு அல்லாத ஒருநாட்டில் அவருக்கென வந்திருந்த மக்கள் எண்ணிக்கை அங்குதான் அதிகம்!
மீண்டும் பாடம் நடத்த அவரிடம் சென்றேன். இம்முறை பாடம் முடிந்தபின் அவர் தன் அறை நோக்கி ஒரு கதவைத் தாண்டிச்செல்லும் வரை பார்த்துக்கொண்டே இருந்தேன். மறுதிசையில் நான் புறப்பட அடியெடுத்து வைத்தபோது போப்பாண்டகை திரும்பிவரும் காலடி ஓசை கேட்டது. போப்பாண்டகை வருவதைக் கண்டதும் நான் அவரிடம் விரைந்து சென்றேன். அவர் என்னைப் பார்த்து “நீங்கள் மக்களை வாழ்த்துவதற்கு ‘நமஸ்தே’ என்றும் ‘நமஸ்கார்’ என்றும் கூறுகிறீர்களே. இரு சொற்களுக்கும் என்ன வேறுபாடு?” என்று கேட்டார். விளக்கம் கொடுத்தபின் தமிழில் அதை ‘வணக்கம்’ அதாவது ‘உமக்கு என் தலையைத் தாழ்த்துகிறேன்’ என்று மற்றவருக்கு மரியாதை செலுத்துகிறோம்’ என்றேன். அதைத் தலையசைத்து ஏற்று ‘ஓகே ஓகே’ என்று சொல்லித் திரும்பிவிட்டார்.
அவரின் செயலர் குரு ஸ்த்தனிஸ்வாவ் (ச்)சீவிச் (இப்போது போலந்து நாட்டின் கிராகூவ் கர்தினால்) கதவு திறந்துவிடும்போது என்னைப்பார்த்து “ஏன் சிலர் போப்பாண்டகை இந்தியா வருவதை எதிர்க்கிறார்கள்? நாம் அதுபற்றி எந்த அளவுக்கு அச்சப்படவேண்டும்?’ எனக் கேட்டார். பின், இரு மாதங்களுக்கு முன்பே ரிச்சர்ட் அட்டென்பரோ (Richard Attenborough)வின் ‘காந்தி’ என்ற திரைப்படத்தைப் பார்த்துத்தான் இந்தியப்பயண ஆயத்தத்தைத் தொடங்கினார் என்று என்னிடம் கூறினார். நம் போப்பாண்டகை அவ்வளவு பெரியவரா என்று பூரிப்படைந்தேன்.
1989இல் அவர் இரண்டாம் முறையாக இந்தியா வந்திருந்தபோது டில்லியில் மட்டும் இருநாள் தங்கியிருந்தார். ஆசியத்திருச்சபை பேரவை தொடர்பாய்த் தன் அறிக்கையைக் கொடுக்க வந்திருந்தார். அப்போதும் நான் வானொலி வழியே நேரடிஒலிபரப்பு செய்யச் சென்றிருந்தேன். ஆனால் அவர் ஆகாய விமானத்திலிருந்து இறங்கி வந்ததைப் பார்த்தபோது என் கண்களில் நீர் வந்துவிட்டது. அவரின் இளமைத்துடிப்பு எங்கே? கையில் ஒரு தடி, மெதுவாக அடிமேல் அடி எடுத்து வைக்கவேண்டிய நோய் பாதிப்பு. Parkinson நோய் பாதித்து கை நடுக்கம், கணீர் என ஒலிக்கும் குரலில் ஒருவகை குளறல் -1986இல் வந்தவரா இவர், சிறுவரோடு உல்லாசமாகப் பாடிச் சிரித்தவரா இவர் என்றெல்லாம் கேள்வி தோன்றியது. அவர் இறந்த நாளில் எனக்கு ஒன்றுமே ஓடவில்லை. அவருக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தோமே என்ற எண்ணம் சிறிது ஆறுதல் தந்தது.
2012மே முதல் தேதி அவர் முத்திப்பேறு பெறுகிறார் என்ற செய்தி வந்தபோது என் மகிழ்ச்சி எப்படி இருந்திருக்கும்! இப்போது 2014 ஏப்ரல் 27 இல் அவர் புனிதர் என உலகமே கொண்டாடவிருக்கின்றது என்பது எனக்கு எவ்வளவு பூரிப்பைத் தரும்! என்னைப் பிடிக்க முடியாது போங்கள்! என் மாணவர் ஒரு புனிதர்!
குறிப்பு : தந்தை சேவியர் ராஜன் சே.ச அவர்கள் வத்திக்கான் வானொலியின் இந்திய பிரிவின் முன்னாள் இயக்குனர்.