ஆண்டவரின் வானதூதர்கள்

அருட்தந்தை ஏசு கருணாநிதி

கடந்த ஞாயிறன்று ரோசாப் பாட்டிக்கு நன்மை கொடுக்கச் சென்றபோது, அவரது பக்கத்து வீட்டுப் பாட்டி பவுலாவும் அங்கே வந்திருந்தார்கள். தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, பவுலா பாட்டி, 'இசுலாமியர்கள் நம்மைவிட உயர்ந்தவர்கள். ஏனெனில் அவர்கள் ஐந்து முறை கடவுளைத் தொழுகிறார்கள்!' என்றார். ரோசாப் பாட்டிக்குக் கோபம் வந்துவிட்டது, 'நான் அவர்களை விட அதிக முறை கடவுளைத் தொழுகிறேன். ஒவ்வொரு முறையும் நான் நடந்து அந்த அறைக்கும், இந்த அறைக்கும் செல்லும்போது என் வானதூதர்களிடம், 'என்னைப் பிடித்துக்கொள்ளுங்கள்!' என்கிறேன். அதுவும் செபம் தானே!' என்று என்னைக் கேட்டார்.

Guardian_Angel 'என்னைப் பிடித்துக்கொள்ளுங்கள்!' என்று ரோசாப்பாட்டி வானதூதரிடம் சொல்வது எனக்கு ஆச்சர்யமாகத் தோன்றியது.

என்னதான் கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்று, பள்ளிக்கூடம், கல்லூரிகளில் பாடம் எடுத்திருந்தாலும், நிறையக் கற்றிருந்தாலும், ரோசாப்பாட்டியின் இந்த எளிய நம்பிக்கைப் பாராட்டுதற்குரியதே.

தொடக்கத் திருஅவையில் திருத்தூதர்களும் தாங்கள் வானதூதர்களால் வழிநடத்திச் செல்லப்படுவதாகவே உணர்கின்றனர்.

லூக்கா நற்செய்தியாளருக்கு வானதூதரின் மேல் அதிக ஈடுபாடு உண்டு. எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் - பிறப்பு முன்னறிவிப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம் - என எல்லாவற்றிலும் வானதூதர்களைச் சேர்த்துவிடுவார்..

திப 12:6-19ல் அழகான வானதூதர் நிகழ்வு ஒன்று இருக்கிறது.

பேதுரு சிறையில் அடைக்கப்படுகிறார். படைவீரர் இருவருக்கு நடுவே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறார். அங்கே தோன்றுகின்ற ஆண்டவரின் தூதர் பேதுருவைத் தட்டி எழுப்புகின்றார். 'இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக் கொள்ளும்!' என்கிறார். பின், 'உம் மேலுடையை அணிந்து கொண்டு என்னைப் பின்தொடரும்' என்கிறார்.

இப்படிச் சிறையை விட்டு வெளியே வரும் பேதுரு மாற்குவின் அம்மா வீட்டுக்குப் போகின்றார்.

அங்கே அவரைப் பார்க்கும் பணிப்பெண் ரோதி வீட்டுக்குள் ஓடிப் பேதுரு வந்துவிட்டதாகச் சொல்கின்றார். அதற்கு அவர்கள் வீட்டார் சொல்லும் பதில் என்ன தெரியுமா?

''அது பேதுரு அல்ல. அவருடைய வானதூதராக இருக்கலாம்!'

இதிலிருந்து என்ன புலனாகிறது?

ஒவ்வொருவருக்கும் ஒரு வானதூதர் அல்லது காவல்தூதர் இருக்கிறார். என் காவல் தூதர் என்னைப் போலவே இருப்பார். உங்கள் காவல் தூதர் உங்களைப் போலவே இருப்பார். இவர் நம்மைச் சூழ்ந்திருக்கும் ஆபத்துக்களினின்று நம்மைக் காக்க வல்லவர். வானதூதர் நமக்குச் சொல்வது என்ன?

நாம் மனிதர்களாக இருந்தாலும், மனித இயல்பை விட்டுக் கடந்து செல்லும் ஆற்றல் பெற்றவர்கள்நாம். மனித நிலையை விட்டு உயர்ந்து நிற்கவும் நம்மால் முடியும். மனித நிலையை விட்டு மிகத் தாழ்ந்துப் போகவும் நம்மால் முடியும். நாம் உயர்ந்து நிற்கும்போது வானதூதரைப் போலவும், தாழ்ந்துப் போகும்போது பேய்க்குட்டியைப் போலவும் இருக்கிறோம்.



 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு புனிதர்கள்